நெஞ்சத்தில்  அன்பு பொங்க
நினைவெல்லாம் கருணை பொங்க
வஞ்சகத்தை மாய்த்திடுவாய் பொங்கலே
வாஞ்சையினை  ஏற்றிடுவாய் பொங்கலே!



அறங்களிலே வாழ்வொளிர
அணைப்பதிலே கரமிணைய
மறங்களினை வீழ்த்திடுவாய் பொங்கலே
மனந்தன்னை வீசிடுவாய்  பொங்கலே!
வன்முறையின்  துயர்களைந்து 
வளர்பகையின் களைகளைந்து
நன்முறைகள் வளர்த்திடுவாய் பொங்கலே
நலிவுகளைச் சாய்த்திடுவாய் பொங்கலே!
சாதிமதப் பிரிவுவீழ
சண்டையிடும் காழ்ப்பு வீழ
வீதியெல்லாம் பொதுமையாக்கு பொங்கலே
விளைச்சளிலே இன்பமாக்கு பொங்கலே!
ஏழ்மையினை வீட்டிலோட்டி 
ஏய்ப்போரை  நாட்டிலோட்டி 
வாழ்வொளிர வளமைசெய்வாய் பொங்கலே
வாழ்த்தொலித்து இனிமைசெய்வாய் பொங்கலே!
செங்கரும்பின்  சுவைபொழிந்து
செந்நெல்லின் மணி குவித்து 
மங்கலத்தைத் தெளித்திடுவாய்  பொங்கலே
மகிழ்வளித்துப் பொங்கிடுவாய் பொங்கலே!
Share.

Leave A Reply