கிணற்றில் தண்ணீர் தெளிவாக இருந்தது அதில் முகம் தெரிந்தது அது கண்ட கல்யாணி “சுதா உன் நகைகளை எனக்குப் போடேன், எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றாள்.
சித்தி இப்போதுதான் அன்பாகப் பேசுகிறாள், அதை ஏன் கெடுக்க வேண்டும் என நினைத்த சுதா நகைகளை கழற்றிக் கொடுத்தாள்.
நகைகளை போட்டுக் கொண்ட கல்யாணி கிணற்று தண்ணீரில் பார்த்தாள். குறுக்கு மூளை அப்போதும் “பளிச்”என வேலை செய்தது. இந்த கிணற்றில் இவளைத் தள்ளிவிட்டால் என்ன என்று.
உடனே செயல்பட ஆரம்பித்தாள் கல்யாணி. “சுதா எனக்கு எப்படி இருக்கு என்று தண்ணீரில் பார்” என்றாள் கல்யாணி.
“சரி சித்தி” என்றவள் எட்டிப் பார்த்தாள்.
அடுத்த வினாடி அவள் கால்கள் இரண்டையும் வாரிவிட்டாள் கல்யாணி.
அம்மா…! என அலறிய படி கிணற்றுக்குள் விழுந்தாள் சுதா.
அவள் அழறல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் இருந்த ஐந்து தலை நாகம் மேலே வந்து தனது உடலால் தாங்கிப் பிடித்துக் கொண்டது.
எந்த ஒரு காயமும் இல்லாமல் சுதா பிழைத்துக் கொண்டாள்.
சுதாவை தள்ளிவிட்ட கல்யாணி திரும்பிப் பார்க்காமல் ஊரை நோக்கி ஓடினாள்.
நாட்கள் நகர்ந்தனர். சுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நாகராஜாவும் அதன் குட்டிகளும் குழந்தையை சுற்றி சுற்றி வந்து பார்த்து சந்தோசம் அடைந்தன.
அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை எல்லாம் நாகராஜா வெளியில் சென்று எடுத்து வந்து கொடுத்தது.
நாகராஜாவும் அதன் குட்டிகளும் ஒரு தாயைப் போல் கவனித்துக் கொண்டன.
அதனால் சுதாவிற்கு ஆறுதலாக இருந்தாலும், எத்தனை நாட்கள் இந்த கிணற்றில் வாழ்வது என கவலையாகவும் இருந்தது சுதாவிற்கு.
இங்கு இப்படி இருக்க.
வீட்டிற்குச் சென்ற கல்யாணி இனி என்ன செய்வது என யோசித்தவள் தனது மகளை அழைத்துக் கொண்டு வந்தாள். சுமதியும் மாதமாக இருந்ததால் அவளுக்கு கவலைவிட்டது,சந்தோசம் பிறந்தது.
சுமதியை எப்படியும் அரண்மனையில் வாழ வைக்க வேண்டும். மீன் ராஜா என்றால் அது “மீனா” எவ்வளவு அழகான ஆண் அவனைப் போல் இங்கு யார் இருக்கிறார்கள்.
தனது மகள் சாதாரணமாக வாழ்வது அவள் மட்டும் அரண்மனையில் வாழ்வதா? கூடாது என இரவும், பகலும் திட்டம் தீட்டி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள் கல்யாணி.
அவள் திட்டம் தீட்டிக் கொண்டுஇருக்கும் போதே சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரத்தில் இறந்து விட்டது.
தான் செய்ததற்கு தண்டனை என சிறிதும் எண்ணவில்லை. தனது மகளை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றாள் கல்யாணி.
சுதாவை விட சுமதி அழகில் சுமாராகத்தான் இருப்பாள். என்ன நடக்குமோ என சுமதி பயந்தாள்.
ஆனால், கல்யாணி எந்த பயமும் இல்லாமல் அழைத்துச் சென்றாள்.
காவலாளியைக் கண்ட கல்யாணி மன்னரைப் பார்க்க வேண்டும் என்றாள்.
உள்ளே அழைத்து வர கட்டளை வந்தது. உள்ளே சென்ற கல்யாணி ஓ..! என அழுது கொண்டே போனாள்.
அதற்குள் ராணி, அரசர் மீன் ராஜா அனைவரும் கூடி விட்டார்கள்.
என்ன நடந்தது என சொல்லுங்கள். ஏன்? அழுகிறீர்கள். எங்கே சுதாவும் குழந்தையும் என ஒரே மூச்சில் கேட்டான் மீன்ராஜா.
அதை ஏன் கேட்கிறீர்கள் மன்னா! கொடுத்து வச்ச பாவிக்கு எடுத்து கொஞ்ச முடியலையே…!
பிறந்த குழந்தை மறுநிமிடமே இறந்துவிட்டதே, என்ன செய்வேன்… ஏது செய்வேன். கொடுத்து வைக்காத பாவியானேன். என அழ ஆரம்பித்து விட்டாள் கல்யாணி.
“என் மருமகள் எங்கே?” எனக் கேட்டாள் ராணி.
மகனை பறிகொடுத்த பின் துயரத்தில் மேனி உருக்குலைந்து உடல் கருத்து மெலிந்து இப்படி ஆகிவிட்டாள் என்றாள் சுமதியைக் காட்டி.
சுமதியோ என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என பயத்தில் புது இடம் என்பதால் சுற்றி… சுற்றி வெறித்துப் பார்த்து சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்றாள்.
சுமதியை அரண்மனையில் விட்டு விட்டு நான் வருகிறேன் என நைசாகப் புறப்பட்டு விட்டால் கல்யாணி.
குழந்தை இறந்தது ஒரு பக்கம் துயரத்தை தந்தாலும். சுதா இப்படி மாறி வந்திருப்பது சகசமாக பேசாமல் இருப்பதும், கவலையையும், சந்தேகத்தையும் கொடுத்தது.
இருந்தாலும் உடனே, கேட்க வேண்டாம் என மன்னரும், ராணியும் சென்று விட்டார்கள்.
மீன் ராஜா தனது அறைக்கு அழைத்துச் சென்றான் சுமதியை. மிகுந்த பயத்துடன் பின் சென்றாள் சுமதி.
“உன்னிடம் கொடுத்த மோதிரத்தை எடுத்து வா!” என்றான் மீன் ராஜா.
எந்த மோதிரம் என திருதிரு என விழித்தாள் சுமதி.
மவுனமாகப் பார்த்த மீன் ராஜா “சரி உன் கையை அந்த சுவற்றில் இருக்கும் சந்தன அச்சில் வை என்றான் மீன்ராஜா.
சுமதியும் சந்தன அச்சில் தனது கையைப் பதித்தாள். அது சரியாக இருக்கவில்லை.
“சரி போ” என கவலையுடன் அனுப்பிய மீன் ராஜா மனது அலைபாய துயரத்துடன் தோட்டத்திற்கு வந்து இங்கும் அங்கும் நடந்தார்.
ஏதோ சூது நடந்திருக்கிறது இவள் என் மனைவியே இல்லை. என்ன நடந்திருக்கும் என பலவிதமாக யோசித்த மீன் ராஜா அவளை சித்தியுடன் அனுப்பி இருக்கக் கூடாது. அல்லது போய் பார்த்துவிட்டாவது வந்திருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் அவர்கள் பேச்சைக் கேட்டது முட்டாள் தனமாகிவிட்டது.
சுதா என்ன ஆனாள், குழந்தை பிறந்ததா? இல்லை இருவரும் இருக்கிறார்களா? மேலே யோசிக்க முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மீன் ராஜா ஒரு முடிவுக்கு வந்தார்.
நம்பிக்கையான காவலாளி சேதுவை அழைத்து ரகசியமாக நடந்த விபரத்தை சொன்னார் மின் ராஜா.
நீ யாருக்கும் தெரியாமல் வளையல் வியாபாரி போல் வேடமிட்டு எல்லா இடங்களிலும் சென்று தேடி விபரம் சேகரித்து வர வேண்டும் எனக் கட்டளையிட்டார் மீன் ராஜா.
அவ்வாறே செய்கிறேன் இளவரசே வெற்றியுடன் வருகிறேன். என்று நம்பிக்கை வார்த்தை சொல்லிவிடை பெற்றான்.
அன்றே அவன் வளையல் வியாபாரியாக தனது பயணத்தை தொடங்கினான்.
வளையலோ..! வளையல் வாங்கலையோ வளையல் என கூறிக்கொண்டே நகர வீதிகளில் பட்டி, தொட்டி என எல்லா இடங்களிலும் தேடினான் காவலாளி.
ஒரு துப்பும் கிடைக்காததால் தேடி அலைந்து களைந்துப் போய் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த கிணற்றின் அருகில் வளையலை வைத்துவிட்டு கிணற்றுத் திண்டில் அமர்ந்து கொண்டவன்.
“வளையலோ…! வளையல், வளையலோ வளையல் என இனி எத்தனை முறை கூவுவது” என மனம் சலித்து தனக்குத்தானே பேசினால் காவலாளி.
அக்குரல் கிணற்றிற்குள் இருந்த சுதாவிற்கு கேட்டுவிட்டது. நாகராஜாவை அழைத்து என் குழந்தைக்கு நீங்கள் தான் மாமா! எனவே, வளையல் வாங்கிப் போடுங்கள் என்றாள்.
ஓய்வு எடுப்பதற்கு இது நேரமில்லை என நினைத்த காவலாளி வளையல்களை எடுத்துத் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானான்.
மேலே வந்த நாகம் வளையல் காரனை வழிமறித்து நின்றது.
‘பாம்பு’ என்று பயந்த சேது வளையல் போட்டியை கீழே போட்டு விட்டான்.
கீழே விழுந்த வேகத்தில் வளையல் பெட்டி திறந்து கொண்டது. அதைப் பார்த்த நாகம் சிறு குழந்தை அளவிலும் பெரியவர்கள் போடும் அளவிலும் உள்ள வளையல்களை எடுத்துக்கொண்டு வேகமாக கிணற்றுக்குள் சென்று மறைந்தது விட்டது.
இதைப் பார்த்த காவலாளி சேதுவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. வளையல் பெட்டியைக் கூட எடுக்காமல் அரண்மனை நோக்கி விரைந்தான் காவலாளி சேது.
மீன் ராஜாவை தனிமையில் சந்தித்து விபரத்தைக் கூறினான் சேது. உடனே ஆட்களை அழைத்துக்கொண்டு கிணற்றிற்கு சென்றார்கள்.
கிணற்றுக்குள் இறங்கிய வேலையாள் வியந்து போனான். உள்ளே மேடை போல் மரங்களால் அமைத்து இருந்தது. அதில் சுதாவும், குழந்தையும் இருப்பதைக் கண்டான்.
“அம்மா நான் மீன் ராஜாவின் வேலை ஆள்” என்றான் பணிவாக வணங்கியபடி.
இந்த நாளுக்காகத் தானே காத்துக் கொண்டு இருக்கிறோம். எப்படியும் தேடி வருவார்கள் என்று நம்பிக்கையில் தானே வாழ்ந்து வந்தோம் என மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள் சுதா.
மனித வாடையைக் கண்டு மறைந்திருந்த நாகராஜாவை அழைத்து தன்னைக் காப்பாற்ற தன் கணவரின் ஆள் வந்திருக்கும் விபரத்தைக் கூறினாள் சுதா.
சந்தோசம் அடைந்த நாகராஜா, உடனே உன்னையும்,குழந்தையும் பிரிந்து எப்படி வாழ்வது என கவலைப்பட்டது.
பின் வெளியில் மெதுவாக வந்த நாகராஜா சுதாவையும், குழந்தையையும் சுற்று…சுற்றி வந்து உச்சி முகர்ந்தது.
பின் அழைத்துப் போகும் படி வழி விட்டு நின்றது நாகராஜா.அதன் குட்டிகளும் ஏக்கத்துடன் பார்த்தன.
சுதா குட்டிகளின் அருகில் சென்று அன்புடன் தடவிக் கொடுத்தாள். “உங்களை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். நீங்கள் செய்த உதவினால் தான் இன்று நாங்கள் இருவரும் உயிர் வாழ்கிறோம்” என கண் கலங்கினாள் சுதா.
இவர்களைப் பார்த்த காவலாளி வியர்ந்து போனான். மனிதர்கள் கூட உதவ மறுக்கும் இந்த கால சூழ்நிலையில் ஒரு நாகப்பாம்பு உயிரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து பிரிவுக்காக இவ்வளவு வருந்துகிறதே! என நினைக்கும் போது உலகில் மனித நேயம் எந்த வடிவிலாவது இருந்து கொண்டு தான் இருக்கிறது. செத்துவிடவில்லை என எண்ணினான் காவலாளி.
நாகராஜாவிடம் விடைபெற்றுக் கொண்ட சுதா தனது குழந்தையை எடுத்துக்கொண்டு காவலாளியுடன் அரண்மனைக்குப் பயணமானாள்.
அரண்மனைக்கு வந்த காவலாளி ரகசியமாக மீன் ராஜாவிடம் அழைத்துசா சென்றான்.
மீன்ராஜாவைப் பார்த்த சுதா கண் கலங்கினாள். சுதாவைப் பார்த்தவுடன் இவள் தான் தன் மனைவி என்பதை புரிந்து கொண்டான் மீன் ராஜா.
காவலாளிக்கு தகுந்த சன்மானம் கொடுத்து அனுப்பினார். மீன் ராஜா. குழந்தையை வாங்கி உச்சி முகர்ந்த மீன்ராஜா மனைவியை நோக்கி “உன்னிடம் கொடுத்த கணையாழியை எடுத்து வா” என்றான்.
உள்ளே சென்ற சுதா பத்திரமாக வைத்த இடத்தில் இருந்து எடுத்து வந்தாள்.
சந்தன அச்சில் கைப்பதிக்கும்படி கூறினான் அவ்வாறே சுதா செய்தாள். அளவு மிக சரியாக இருந்தது.
இது கண்ட மீன் ராஜா சந்தோசம் மிகுதியால் குழந்தையுடன் தன் மனைவியையும் கட்டி அணைத்துக் கொண்டார் மீன் ராஜா.
மனைவியை அழைத்துக் கொண்டு அந்தப்பரம் சென்ற மீன்ராஜா என்ன நடந்தது என மனைவியிடம் விசாரித்தார்.
சுதாவும் நடந்த விபரங்களை எல்லாம் கூறினாள். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மீன்ராஜா.
“உன் சித்தி உனது தங்கை சுமதியை நீ என இங்கு விட்டுச் சென்று இருக்கிறாள்” என்று நடந்த விபத்து கூறினார்.
உன் சித்தி மன்னிக்க கூடியவள் இல்லை. தண்டனைக்குரியவர், உன் தங்கையும் துணை போனதால் இருவரையும் தண்டிக்கப் போகிறேன். என்ற மீன்ராஜா தனது மனைவியையும், குழந்தையையும் மன்னரிடம் அழைத்துச் சென்றார்.
நடந்தவற்றை எல்லாம் எடுத்துக் கூறினார் மீன் ராஜா.சுமதியை சலவைத் துறையில் குழி தோண்டி உள்ளே அவளை இறக்கி தலை மட்டும் வெளியில் தெரியும்படி புதைத்து விட்டார்கள்.
உணவு தண்ணீர் இல்லாமல் வெயில் மழையில் வாடி வதங்கி இருந்தாள் சுமதி.
பறவைகளும், விலங்குகளும் அவள் தலையில் அசுத்தம் செய்திருந்தது. ஒரு சில நாட்கள் நகர்ந்தன.
மகள் எப்படி வாழ்கிறாள் என்பதைப் பார்க்க விரும்பிய கல்யாணி சலவைத் துறை வழியாக வந்து கொண்டு இருந்தாள். அப்போது சுமதியைத் தாண்டிச் சென்றாள் கல்யாணி.
“அம்மா நீ கூட என்னைப் பார்க்காமல் போகிறாயே” என்றாள் சுமதி.
மகளின் குரல் போல் இருக்கிறது என எண்ணிய கல்யாணி சுற்றும், முற்றும் பார்த்தாள்.
“அம்மா குனிந்து பார்” என்றாள் சுமதி.
குனிந்து பார்த்த கல்யாணி அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள். “மகளே உனக்கா இந்த கதி, அரண்மனையில் ராணியாக வாழ்வதைப் பார்க்க வந்தால் சலவைத் துறையில் இப்படி இருக்கிறாயே”என ஓ…என அழுதாள் கல்யாணி.
அழுது கொண்டே மணலைத் தோண்டி மகளை வெளியில் எடுத்தாள் கல்யாணி.
மகள் தலை எல்லாம் அசுத்தமாக இருந்தது. மெதுவாக அழைத்துச் சென்று துணிகள் துவைக்கும் நீரில் கழுவினாள்.
காய்ந்து போய் இருந்ததால் போகாமல் அப்படியே இருந்தது அசுத்தம். பக்கத்தில் இருந்த சலவையாளிடம் இதைப் போக்க என்ன செய்வது என குழம்பிப் போய் கேட்டாள் கல்யாணி.
மகள் இப்படி இருப்பதை பார்த்ததில் இருந்து சுய சிந்தனையை இழந்துவிட்டாள் கல்யாணி.
சலவையாள் துணி துவைக்கும் வேகத்தில் துணிக்கறை என எண்ணி, கல்லில் நன்றாக அடித்தால் போகும் என்றான்.
சுமதியின் காலைப் பிடித்து தூக்கி கல்லில் போட்டாள் கல்யாணி. அடித்த வேகத்தில் மூளை சிதறி செத்துப்போனாள் சுமதி.
இதை சிறிதும் எதிர்பார்க்காத சலவையாளர், என்னம்மா! இப்படி செய்து விட்டாயே? என திட்டினான்.
வெறித்து மகளைப் பார்த்த கல்யாணி என் மகளை நானே கொன்று விட்டேன் என ஓவென அழுதாள். பின் கடகடவென சிரித்தாள். அங்கும், இங்கும் ஓடினாள்.
தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள். அவள் செய்த வினை அவளையே சுற்றிக் கொண்டது. பைத்தியமாய் அலைந்தாள் கல்யாணி.
மீன் ராஜாவும், சுதாவும் நீண்ட நாட்களாக வாழ்ந்து நல்லாட்சி செய்தார்கள் என முடித்தார் தாத்தா.
உமா முகத்தில் சந்தோசம் படர்ந்திருந்தது.
தாத்தா மனமும் சந்தோசப் பட்டதால் புன்னகையுடன்
எழுந்தார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.