உலகத்தார் போற்றுகின்ற புலவர் தெய்வம்
உயர் ஆசான் வள்ளுவர்தான் செந்நாப் போதார் !
பழமொழிகள் மொழிபெயர்த்த இவரின் பாக்கள்
பாதைமாறா நன்னெறியைக் காட்டும் வேதம்
சொலவொண்ணா கருத்துக்களைக் கொண்டநூலே
சோதனைகள் கடக்கின்ற வழியைச் சொல்லும்
அலர்கின்ற வாழ்வினுக்கு குறட்பா இன்பம்
அறத்தோடு பொருளின்பம் காட்டும் முப்பால் !
ஆயிரத்து முன்னூற்று முப்பது பாக்கள்
அதிகாரம் நூற்றுமுப்பத் திமூன்று ஆகும் !
சேயினுக்கு அதிகாரம் அவற்றுள் ஒன்று
செங்கோன்மை பாக்களாகப் பத்து தந்தார்
தீயினில் தான் சுட்டபுண்தான் ஆறும் ! ஆறா
தீநாவில் சுட்டவடு ! என்று சொன்னார் !
பாயிரத்தில் தொடங்கியவர் முடிவில் இன்பம்
படைத்ததெய்வப் புலவரென்று வாழ்த்தும் நாளே !
தோன்றினாலே புகழ் விளங்க தோன்ற வேண்டும்
தொன்றுதொட்டு பொன்மொழிநாம் போற்று கின்றோம்
ஆன்றவிந்து அடங்குபவர் செல்லும் பாதை
அன்புகொண்டு நடந்துவந்தால் அவரே மேதை
ஈன்றவனின் பசிபோக்க வேண்டாம் கள்ளம்
இனியசொலில் ஈர்த்திடுவீர் மக்கள் தம்மை !
சான்றாண்மை உரைத்திட்டார் வள்ளு வத்தால்
சரித்திரத்தில் வள்ளுவத்தின் திருநாள் வாழ்க !
திருக்குறளால் தோன்றினவே பற்பல நூல்கள்
திக்கெட்டும் புகழ்பரவி நிற்கும் நூலே !
திருவள்ளுவ வரைப்பலரும் போற்று கின்றார்
தீந்தமிழர் மறைநூலே முப்பால் ஆகும் !
அருங்குறட்பா ஒவ்வொன்றும் ஒன்றே முக்கால்
அடிக்கருத்தை ஆய்ந்தபலர் அறிஞர் ஆனார்
பெருமைதிரு வள்ளுவர்க்குச் சிறப்பு இந்நாள்
பேர்புகழும் சிறக்கின்ற திருநாள் வாழ்க !!