மண்ணில் உதிரும் சருகுகள் எல்லாம் 
   மக்கி உரமாகி வீரியத்தைக் கொடுக்கும் 
மண்ணில் உறுஞ்சி எடுத்த நீரெல்லாம் 
   மீண்டும் மழையாய் பலன் கொடுக்கும் 
மண்ணில் சிந்திய இரத்தம் எல்லாம் 
  நெஞ்சு உரமாய் எழுச்சி கொடுக்கும் 
மண்ணில் விதைத்த விதை எல்லாம் 
   முளைத்து நல் விருட்சம் ஆவது போல….
 
விதைத்தது மனித இரத்தமும் சதையும் 
   சகோதர உணர்வும் தாய் பாசமும் 
புதைந்தது தமிழன் உடல் என்றாலும் 
   எழுவது அவனது உணர்வின் சக்தி 
சிதைத்தது தமிழர் இனம் என்றாலும் 
   முளைத்தது உலக நாட்டு மண்ணில் 
வதைத்தது வெறித்தனம் என்று உணர 
   தர்ம தேவதை வழி வகுப்பாள்
புத்த தர்மம் உயிர்களைக் கொல்லாமை 
   தமிழின உயிர்களை கொன்று குவித்து 
பித்து பிடிக்க வைப்பது தர்மமா ?
    அன்பால் அகிலம் காப்பதே ஞானம் 
சித்திர வதைதான் மனித நேயமா ?
   சிந்திக்கும் தருணம் வந்து விட்டது 
புத்துயிர்  பெற்று தமிழ் இனம் 
   புதைந்த குழியில் இருந்தே எழுவான்.
Share.

Leave A Reply