இதற்கு யார் காரணம் எனக்குள் இருந்த
கோபத் தீ எரிமலையாய் வெடிக்க…
என் உள்ளத்தில்
நெருப்பிட்டது யார்?
அதை உள்ளுக்குள்
உரம் இட்டது யார்?
சமுதாயத்தைக்
குப்பையாக்கி
குளிர் காய்வது யார்? கரியானது யார்?
சரியாகப் பார்
நீ சருகா !
விறகா!
சாம்பலா! என்று
யோசிக்காதே!
இதமாக இருக்கிறது
என்று நெருப்புக்குள்
அமர்ந்து கொண்டு இருக்கிறாயே!
நீ குளிர் காய்பவன்
என்றுதான் உன்னை எண்ணுகிறாய்!
இல்லை என்பதை உணர்ந்து கொள் உற்றுப்பார்!
நீ எரிந்து விட்டவனா?
எரியப் போகிறவனா?
என்று….
அணுவைப் பிளந்து
வெளிவரும் ஆற்றல்
எங்கே!
இருளைக் கிழித்து
ஒளியாய் வெளிவரும்
என் ஆற்றல் எங்கே!
வானந் தொட்டு
முத்தம் இட்டு
மேலும் தாண்டி
நாளும் செல்ல
என் ஆற்றல்
எங்கே?
என் விசித்திர
ஆற்றல் எல்லாம்
ஏன் வீணாய்
இருக்கிறது
என் எரித்திடும்
கோபம் எல்லாம்
ஏன் கொதிக்காமல்
குளிர்கிறது
எல்லா வெற்றிக்கும்
யார் காரணம்?
இதுதான் காரணம்
என்று எதைச் சொல்வது இவன்தான் காரணம்
என்று எப்படி சொல்வது
நம் கோபத்திற்கு
நீயும் ஒரு காரணம்
நானும் ஒரு காரணம்
நம் எல்லோரின் கோபமும் கொந்தளிக்கத் துவங்கினால் என்னவாகும் என்று
உனக்குத் தெரியுமா?
ஒரு சமுதாயத்தின்
சீர் திருத்தத்திற்கு
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு
ஒரு ஊரின்
வளர்ச்சிக்கு
ஒரு தெருவின்
சுத்தத்திற்கு
ஒரு வீட்டின்
சுகத்திற்கு
உன்னை நீ
நம்மை நாம்
சரி படுத்திக்
கொண்டால்…
போதும்!
செய்வோமா?