ஒற்றையடிப் பாதையிலே நடந்து வரும் அந்த சுகம்
நூறடி சாலையின் நெரிசலில் கிடைத்திடுமோ?

பச்சை மரத்தடியில்
படுத்துறங்கும் அந்த சுகம்
மின் விளக்கு கம்பத்தடியில் எங்கேனும் கிடைத்திடுமோ?

மண் வாசனை மழையோடு நனைந்து வரும் அந்த சுகம் நகரத்து வீதியினில்
எங்கேயும் கிடைத்திடுமோ?

சுத்தமான சுகக் காற்று சுவாசிக்கும் அந்த சுகம்
வாகனப் புகை தாண்டி நமக்கென்று கிடைத்திடுமோ?

ஊரே உறவென்று
வாழுகின்ற அந்த சுகம்
உறவே பகை போல இங்கிருக்க கிடைத்திடுமோ?

மண்ணோடு விளையாடி உறவாடும் அந்த சுகம்
பணம் கொண்ட
நகரத்தில் கிடைத்திடுமோ?

குளத்தில் கூட்டாக
குளிக்கும் அந்த சுகம்
நகரத்து நீச்சல் குளம் என்னாளும் தந்திடுமோ?

அரட்டை அடிக்கின்ற
இரவு நேரத் திண்ணை சுகம் அடுக்குமாடி குடியிருப்பின் இறுக்கத்தில் கிடைத்திடுமோ?

பௌர்ணமி முழு நிலவின் வெளிச்சத்தைக் கண்ட சுகம் கண் பறிக்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் கிடைத்திடுமோ?

தாவணிப் பெண் சிணுங்கி வெட்கப்படும் அந்த சுகம் சுடிதார் உடையணியும் பெண்ணிடம் கிடைத்திடுமோ?

வயது போனபின் கூட
கிராமம் தரும் அந்த சுகம்
வசதி உள்ள இன்நகரம் என்னாளும் தந்திடுமோ?

எல்லாமும் அனுபவித்து இறந்தாலும் அந்த சுகம் நகரத்து வாழ்க்கையில் என்னாளும் கிடைத்திடுமோ?

Share.

Leave A Reply