செங்கதிரோன் செல்வனையே போற்றிப் பாடி
செழுமைக்கும் நன்றியினைச் சாற்றி யேதான்
எங்கணுமே உழைக்கின்ற உழவர் இந்த
எழில்நாட்டில் பசுமையினை விளைத்தே டுத்து
பொங்கிடவே செய்கின்ற பொங்கல்! மக்கள்
பூரிக்கப் புத்தாடை புனைந்து கொண்டு
பொங்குகின்ற தைப்பொங்கல்! திருநா ளாகும்
புதுமைவிழா உலகத்தின் பொதுவி ழாவே!

பண்பாட்டில் உயர்வினையே சேர்த்துக் கொண்டு
பழகுகின்ற நாகரிப் பண்பைப் போற்றி
நண்பர்கள், சுற்றங்கள்,புடையே சூழ
நன்னாளில் மாந்தர்கள் மகிழ்ச்சி பொங்க
மண்பானை அடுப்பேற்றிப் பொங்கல் பொங்கி
மதிப்புடனே உழவர்களைப் போற்று கின்றார்!
பண்பான இப்பொங்கல் திருநா ளாகும்
பண்டிகைஇவ் வுலகத்தின் பொதுவி ழாவே!
தங்கமென நெல்விளைத்துப் போர்க்கு வித்துத்
தரையினிலே உலர்த்தெடுத்தி அரிசி யாக்கி
மங்காத தைத் திருநாள் பொங்கல் பொங்கி
மகிழ்ச்சியுடன் பலருக்கும் வழங்கு கின்றார்
பொங்கலென்று மகிழ்கின்ற மாந்தர் தாங்கள்
புரட்சிமனக் கொள்கையிலே ஓங்கி நின்று
தங்குதடை இல்லாமல் தனித்தே ஓங்கும்
தமிழர்விழா உலகத்தின் பொதுவி ழாவே !