செந்தமிழ் வாணி ச.மல்லிகா எம்.ஏ.,

 

பழமொழிக் கதை

 

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’


கஞ்சன் ,கருமி, ஈயாதவன் இப்படி எப்படி சொன்னாலும் ஒரு புன்னகையை மட்டும் காட்டுவாரே அன்றி கோபமோ, ரோசமோ வராது.
உயிர் போகும் நிலையில் கூட உதவுவாரா என்றால்…..போகும் உயிர் போகட்டுமே இருந்து என்ன ஆகப்போகிறது என்பார்.
இரக்க குணம் கடுகு அளவு கூட இல்லை. அடுத்தவர்களுக்குத் தான் கொடுக்க மனமில்லை தானாவது அனுபவிப்பாரா என்றால் அதுவும் இல்லை .
சந்தை முடியப் போகும் சமயத்தில் போவார், விற்றது போக சொத்தை கழிவான காய்கறியை மலிவாக வாங்கி பையில் நிறைத்துக் கொண்டு வருவார்.
காப்பித்தூள் நிறம் மாறுவதற்காக சிறிது பால் ஊற்றி காப்பி போடச் சொல்வார் .
இவர் மனைவியோ தாராளமாகச் செய்பவள்.இவருக்கு கழுத்தை நீட்டிய நாளில் இருந்து அவரைப் போல இருக்க பழகிக் கொண்டு இருந்தாள் .இல்லை என்றால் குடும்ப வண்டி ஓடாதே என்பதற்காக.
காய்ச்சல் அடித்தாலும், தலை வலித்தாலும் கூட சொல்லாமல் சமாளிக்க பழகிக் கொண்டாள் தேவகி. சொல்லி பயன் இல்லை என்ற போது சொல்லாமல் இருப்பது தானே நல்லது.
காலச் சக்கரம் ஓடிக்கொண்டே இருந்தது. இவர் ஈயாத குணத்தாலோ, என்னவோ தேவகியின் வயிற்றில் ஒரு பூச்சி புழு கூட தங்கவில்லை .
அடுத்த குழந்தைகளைப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொள்வாள் தேவகி.குழந்தை இல்லாதது ஒரு வகையில் அவருக்கு மிச்சம் தானே /
குழந்தை பிறந்தால்; அதற்கு உணவு, உடை, படிப்பு, வேலை, திருமணம் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகுமே.அந்த செலவுகள் எல்லாம் தனக்கு இல்லையே என சில நேரங்களில் பெருமிதம் கொள்வார் செல்வநாயகம்.
பெயரிலும் ,வீட்டிலும் செல்வம் இருந்தும் ஒரு சராசரி ஏழை பெண் அடையும் சுகங்கள் கூட தனக்கு இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்ந்து வந்த தேவகி, ஒரு நாள் தனது மூச்சை நிறுத்திக் கொண்டாள்.
தனி மரமாக இருந்த செல்வநாயகம் குறைந்த சம்பளத்தில் ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டார்.
ஒரு நாள் வேலைக்காரன் உடல் நலம் சரியில்லை என்று வரவில்லை.அன்று செல்வநாயகம் தானே சமையல் செய்யலாம் என்று அடுப்படி பக்கம் வந்தார்.
சதாகாலமும் பணம்…பணம் என்ற நினைப்பில் வாழ்ந்ததால் சமையல் எப்படி செய்வது என்று எதுவும் தெரியவில்லை .
அரிசியை எடுத்து தண்ணீர் ஊற்றி எப்படியோ சாதத்தை தயாரித்து விட்டார்.
பின் காய்களை எல்லாம் வெட்டி ஒரு குழம்பு வைத்தார்.சமையல் வேலை செய்ததை விட எப்படி செய்வது என்று தெரியாமல் செய்ததால் அவர் மிகவும் களைத்து விட்டார்.
பசி வயிற்றை கிள்ளியது.சரி சமையல் ஒரு வழியாக ஆகிவிட்டது .சாப்பிடலாம் என எண்ணி தட்டில் போட்டு குழம்பு ஊற்றி வாயில் ஆவலுடன் எடுத்து வைத்தார்.
உப்பே இல்லாமல் ‘சப்’பென இருந்தது .வாயில் வைத்த சாப்பாடு உள்ளே போகாமல் வெளியில் வந்தது .
உப்பு போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பது தெரியாமல் செய்து வைத்த சாப்பாட்டை பார்த்துக் கொண்டே இருந்தார் செல்வநாயகம்.
”உப்பில்லா பண்டம் குப்பையிலே” யாருக்கும் உதவாத பணமும் உப்பில்லா பண்டம் போலதான்.இது கூடத் தெரியாமல் வாழ்கிறானே என்று தட்டில் இருந்த சாப்பாடு அவரைப் பார்த்து நகைத்தது.
=================================================================

Share.

Leave A Reply