குழந்தைகளே  ,”இன்று உங்களுக்கு நல்ல கதை சொல்லப் போகிறேன்;” என்றார் தாத்தா .

என்ன கதை தாத்தா  என எல்லோரும் குதூகளித்தனர்.

சிறுவர்களே ”ஒருவருக்கு முற்பகல் துன்பம் செய்தால் அந்த துன்பம் பிற்பகல் தாமே வரும்” என்பதற்கு இணங்க  இக்கதை இருக்கும்” என்றார்  தாத்தா .

சொல்லுங்க தாத்தா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள் .

ஒரு ஊரில் ராமாயி என்பவளுக்கு ரகு என்ற மகன்இருந்தான்.

அவனுக்கு குணவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தாள் ராமாயி .

குணவதி என்ற பெயருக்கு எதிர் மறையாக இருந்தாள் அவள்.

ரகு, ஒருநாள் தன் மனைவியை அருகில் அழைத்து ”குணா  எனது தந்தை இறந்த பின் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள்  எனது  அம்மா…”

….’இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம் .எனவே தினமும், உணவில் நெய்விட்டு நல்ல உணவைக் கொடுத்து  அன்பாக நடத்தி  என் தாயை  மகிழ்விக்க வேண்டும்”என்றான் ரகு.

”சரி ஆகட்டும் அப்படியே நடந்து கொள்கிறேன்”என்றா’ள் குணா .

தனது கணவன் இருக்கும் வரை ஒரு வேலை கூட செய்யவிடாமல் அத்தை ,,,,அத்தை என அன்புடன் இருப்பாள் .

ரகு வேலைக்குசென்ற உடன் நல்ல துணிகளை அவிழ்த்து விட்டு கந்தல் புடவையைக் கட்டிக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வாள் .

ரகு வருவதற்கு முன் வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாப்பாட்டைப் போட்டு சாப்பிடக் கொடுப்பாள் குணா .’

ராமாயும் அதை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்து கொள்வாள் .மகனும் , மருமகளும் நல்லா இருந்தா அதுவே போதும் என்று சிவனை வேண்டிக் கொள்வாள் .

வாழை இலையில் சிறிது நெய் தடவி மடித்து வீட்டின் பின்புறம் போட்டு விடுவாள் குணா.

சாப்பிட வரும் ரகு கைகால் கழுவ பின்புறம் செல்வான் நெய் மணம் தூக்கும் .

ஓ…. தனது மனைவி அம்மாவை நல்ல முறையில் கவனிக்கிறாள் என நினைத்துக் கொண்டு அம்மா சாப்பிட்டார்களா ?என்பான்.

”சாதம் செய்தவுடன் ஆறிப் போகுமே என்று அத்தையை சாப்பிட வைத்து விட்டேன் .நீங்கள் வரும் வரை அவர்கள் ஏன்? பசியுடன் இருக்க வேண்டும்” என்று மிகவும் பாசத்துடன் பேசினாள் குணா .

ரகுவும்  மிகவும் சந்தோசப் பட்டுக் கொண்டான்

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது .

ஒரு நாள் ரகு பெரிய மீன் வாங்கி வந்து கொடுத்து விட்டு வேலைக்கு சென்றான் .

மாமியாரை அழைத்து வழக்கம் போல் வேறு பழைய துணியைக் கொடுத்து கட்டிக் கொண்டு,”இந்த மீனை நறுக்கிக் கொடுங்கள்” என்றாள் குணா .

ராமாயும் , ”சரி” என மீனை நறுக்கச் சென்றாள்.

மீன் நறுக்கும் போது மீன் சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கவே மீனை சுத்தம் செய்து வந்த ராமாயி” மருமகளைப் பார்த்து ….

”இன்று சாப்பிடும் போது ஒரே…ஒரு மீன் துண்டு கொடு தாயி … எனக் கேட்டாள்.

”சரி …பார்ப்போம்” என்று கூறினாள் குணா .

வழக்கம் போல் ,”அம்மா சாப்பிட்டார்களா ” என ரகு கேட்க .

”அத்தை சாப்பிட்டார்கள்” என குணா சொன்னாள்

” ரகு ..எனக்கு சாப்பாடு போடு ” என ரகு உட்கார்ந்தான் .

ரகுவிற்கு பின் வந்த ராமாயி மருமகளைப் பார்த்து ஒரு விரலை நீட்டி தலையை ஆட்டினாள்.”எனக்கு ஒரு துண்டு மீன் கொடு ”என்ற அர்த்தத்தில் .

குணாவும் சரி..சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.

‘இதப் பார்த்து விட்ட ரகு ”என்ன? என் அம்மா, ஒரு விரலை நீட்டி…நீட்டி ஏதோ கேட்கிறார்களே என்ன வேண்டுமாம் என ரகு கேட்டான் .

”அது வந்துங்க நான்…. நான் என்னத்தை  சொல்லுவது, அத்தைக்கு ஒரு ‘ புருசன்’ வேண்டுமாம்  என்றாள்.

‘என்ன ?’ என அதிர்ச்சியாகி விட்டான் ரகு.

மருமகள்  சொன்னது எதுவும் ராமாயிக்கு தெரியாது .

அவள்  மீன் சாப்பிடும் ஆசையில் ”மீண்டும் …மீண்டும் ஒரு விரலை நீட்டி கேட்டாள் குணாவிடம் .’

”பார்த்தீர்களா…பார்த்தீர்களா ..” என வெறுப்பு ஏற்றினாள் குணா.

ரகு சாப்பிடுவதை வைத்துவிட்டு கைகழுவியவன்  மன வருத்தத்துடன் கால் சென்ற போக்கில் நடந்து சென்றான்.

வெகுதூரம் சென்றவன் ஒரு சத்திரம் கண்ணில் பட அங்கு சென்று அமர்ந்தான் .

மிகவும் கவலையுடனும் , களைப்புடனும் இருக்கும் ரகுவை கண்ட ஒரு பெரியவர் என்ன விபரம் ? என அன்புடன் கேட்டார் .

ரகுவிற்கும் தனது வருத்தத்தை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருந்ததால் நடந்த விபரத்தைக் கூறி அழுதான் .

”இவ்வளவு பெரிய மகனிருந்தும் உனது தாய் இவ்வாறு  கேட்டார்களா ?” என்றவர் .

”அதோ போகும் கழுதையை கட்டிவை” என விளையாட்டாக கூறினார் .

ரகுவும் உண்மையாகவே அந்த கழுதையை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு நடந்தான்.

தனது கணவர் சாப்பிடாமல் சென்றவர் இன்னும்  காணவில்லையே  என காத்திருந்தாள் குணா.

தன் கணவர் கழுதையுடன் வருவது கண்டு ஆச்சரியப்பட்டாள்.

”எதற்குங்க கழுதை ” எனக் கேட்டாள்.

”பேசாமல் இரு” என மனைவியை அதட்டியவன் அம்மாவிடம் சென்றான் .

”இந்தா புருசன் கேட்டீயில்ல ”என்றவன் …

ஒரு அறையில் கழுதையையும்  அம்மாவையும் உள்ளே விட்டு கதவை சாத்தி வைத்தான்.

”என்னங்க ….இதெல்லாம் ”என்றாள் குணா.

”கழுதை உதைக்கிற உதையில் எங்கம்மா சாகட்டும் …” என்றான் .

”எங்கம்மாவை தெய்வமாய் மதித்தேன் , என்றவன் கண்கலங்க  என்னை தனியாக விடு என வார்த்தைகள் வராமல்….அவன் அறைக்குச் சென்று தாழ் போட்டுக் கொண்டான் .

அம்மா ஒரு புறம் ,மகன் ஒரு புறம் நம்மை இந்த வராண்டாவில் படுக்க வைத்து விட்டார்களே ? என்று நினைத்தாள் குணா

”சரி”விடியட்டும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என நினைத்த குணா ”அங்கே ” படுத்து தூங்கி விட்டாள்.

சிவனும், பார்வதியும் உலகை சுற்றி  வந்தார்கள்.

”உங்கள் பக்திக்கு நடக்கும் கொடுமையைப் பாருங்கள்”

”அம்மாவையும் கழுதையையும் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறான். என்ன..ஏது என்று விசாரிக்காமல் மனைவி சொன்னதை நம்பி ஏமாந்தவன் ” என்று வருத்தப்பட்டாள்பார்வதி.

‘ராமாயி பல புண்ணியங்களை செய்தவள் , தனக்கு தீங்கு செய்யும் மருமகளை  தவறாக கூறினால் மகன் வாழ்வு சுகப்படாது என எண்ணியதால் எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டாள்.

”நல்ல தாய் உள்ளத்திற்கு களங்கம் கற்பித்த மருமகளுக்கு அவள் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டுவோம் வா” என்றார் சிவன்.

ராமாயியை 18 வயது பருவ மங்கையாகவும், கழுதையை ராமாயின் கணவன் 21 வயதிலும் மாற்றிவிட்டு ஆசி கூறி மறைந்தார்கள் .

ராமாயிக்கும் அவள் கணவனுக்கும்  நடந்தவற்றை நம்பவே முடியாமல்  இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் சிந்தி வணங்கி நின்றார்கள்.

காலையில் கதிரவன் வருகையால் வெண்ஒளிக்கதிர்கள் பட்டு விழித்த குணா விடிந்து விட்டதை அறிந்து  தனது மாமியார் இறந்து  போயிருப்பாள்  என்ற ஆர்வத்தில் தனது கணவர் படுத்திருக்கும் அறையைத்   தட்டினாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்த ரகு  கதவைத் திறந்தவன் மனம் படபடத்தது .

என்னதான் கோபத்தில் கழுதையுடன் அம்மாவை அறையில் போட்டு கதவை பூட்டி வைத்தாலும் இரவு தூங்காமல் தவறு செய்து விட்டோமோ ? என்று தனக்கு தானே பல வகையில் நினைத்து விழித்திருந்தவன் காலையில் தான் கண்ணயர்ந்தான் .

அம்மா உயிருடன் இருக்க வேண்டும் என இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு  கதவை திறந்தவனின்  கண்களில் வியப்பு வாயடைத்துப் போனான் .அழகிய பெண்ணும், அழகிய ஆடவரும் நிற்பது கண்டு அம்மா…..எங்கே என்று தேடினான் .

”மகனே/ என்ற ராமாயி நான் தான் உனது தாய்  எனது புண்ணியத்தால் நேற்று இரவு இறைவன் அருளால் இவ்வாறு ஆனோம் ” என்று கூறினாள் ராமாயி .

அம்மா, அப்பா என்று கட்டி அணைத்துக் கொண்டான்  ரகு.

இருவரையும் கண்ட குணாவுக்கு அதிர்ச்சி.”நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்து விட்டதே ” என ஆத்திரப்பட்டாள்.

மாமியார் இப்படி மாறியது குணாவிற்கு பிடிக்காமல் தவித்தாள்

”ஏங்க இங்கே வாங்க என்று தனது கணவரை அழைத்தாள்.

என்ன? என்றான் ரகு

”எங்க அம்மாவிற்கும் ஒரு கழுதையை கட்டி வையுங்கள்” என்றாள் குணா .

”சரி என்ற ரகு” ஒரு கழுதையைக் கொண்டு வந்து மாமியாரையும் , கழுதையையும் ஒரு அறையில் அடைத்து  வைத்தான்.

இதைக்கண்ட  சிவனும், பார்வதியும் ராமாயி  செய்த புண்ணியமே அவளை மாற்றியது.குணாவின் பாவம் அவள் அம்மாவை  அடையும் என்று கூறி மறைந்தனர் .

காலையில் எழுந்து கதவை திறந்தால் கழுதை கால்..கால் ..என்று கத்திக் கொண்டு ஓடியது .

அறைக்குள் குணாவின் அம்மா செத்துக் கிடந்தாள்.

”அம்மா என கதறி அழுதாள் குணா / தனக்கு இந்த தண்டனை வேண்டும் என மனம் வருந்தினாள்.

தனது பாவத்தால் அம்மாவை சாகடித்த பாவியாகிவிட்டேனே என அழுதாள்.

”என்னை மன்னிச்சுடுங்க ” என ரகுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் குணா.

ரகு ஏதும் புரியாமல் ”ஏன்”? என வினாவினான் .

உங்க அம்மாவிற்கு நான் மிகவும் கொடுமைசெய்தேன். அதை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டதால் அவர்களை இளமையாக கடவுள் மாற்றி இருக்கிறார் .

அது புரியாமல் பேராசைப் பட்டு எங்க அம்மாவும் இதுபோல் ஆகட்டும் என நினைத்ததால் எங்க அம்மாவை சாகடித்து விட்டேன்.

நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.

உங்கம்மா ….மீன்தான்  என்னிடம் கேட்டார்கள் .நான் தான் பாவி ”புருசன்”கேட்கிறார்கள் என பொய் சொன்னேன்.

”’அத்தை மிகவும்  நல்லவர்கள் . நான்….தான் என வார்த்தைகள் ‘ வராமல் அழுதாள் குணா .

”எழுந்திரு குணா ” என்றான் ரகு. நீ எப்போது உன் தவறை  உணர்ந்துவிட்டாயோ , அன்றே நீ நல்லவளாகிவிட்டாய்.

இனியாவது நன்மைகள் செய் , என ஆறுதல் கூறினான் .

”முற்பகல் செய்யின் பிற்பகல்  தானே வந்து சேரும் என்பது உண்மையாகிவிட்டது,பார்த்தாயா ,குணா/ இனி நீ நல்லவளாகவே வாழ்” என அறிவுரை கூறினான் ரகு.

இனி ஒரு போதும் பிறருக்கு தீங்கு செய்யவே மாட்டேன்  என உறுதியாக கூறினாள் குணா.’

குழந்தைகளே நாமும் ஒருவருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பதை புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன் .

வீட்டிற்கு போவோம் வாருங்கள் என சிறுவர்கள் புடை சூழ  தாத்தாவும் சென்றார் .

Share.

Leave A Reply