“‘அம்மா…எப்பம்மா அப்பா வருவாங்க என தனது மழலைச் சொல்லால் கேட்டாள் பிரியா .
”குட்டிச் செல்லத்தைப் பார்க்காம அப்பாவுக்கு வேலையே ஓடாதாம் . இன்று இரவு அப்பா வந்திடுவாராம்” எனப் பிரியாவை கொஞ்சிய படி கூறினாள் சாந்தி .
வியாபார விசயமாக வெளியூர் செல்வது சங்கரின் அலுவலக வேலைகளில் ஒன்று. அப்படித்தான் இன்றும் போயிருக்கிறான்.
அவன் வருகையை எதிர் பார்த்துத்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
எட்டுமணி ஆகியும் வராததால் குழந்தைக்கு பசிக்குமே என எண்ணிய சாந்தி…
”பிரியா / சாப்பிடுகிறாயா ?” என்றாள்.”சரிம்மா…’ என கண்ணைக் கசக்கிக் கொண்டே கூறினாள் பிரியா .
தூக்கத்திற்கு அறிகுறி இன்னும் சிறிது நேரம் விட்டால் சாப்பிடாமலே தூங்கி விடுவாள் .
எழுந்தாள் சாந்தி , சமையல் அறைக்குச் சென்றவள் தோசை வார்த்து தேங்காய் சட்னியுடன் ஊட்டினாள் பிரியாவிற்கு…
அப்பா .வருவார் …வருவர் என காத்திருந்த பிரியா தூங்கிப் போனாள்.
நள்ளிரவு நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு சாந்தி படக்கென எழுந்தால் குழந்தையுடன் தானும் தூங்கிவிட்டோம் என்ற உணர்வு அப்போதுதான் வந்தவளாக…கதவைத் திறந்தாள் சாந்தி.
தள்ளாடிய படி நின்றான் சங்கர் .
”ஏண்டி …எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் .என்னடி செய்து கொண்டு இருந்தே/” என்றவன் பெட்டியை தூக்கி அவள் முன் எறிந்தான் .
பெட்டி அவள் காலில் பட்டு கீழே விழுந்தது .
வலியால் துடித்தாள் சாந்தி .”என்னங்க இப்படி குடித்து விட்டு….” என வார்த்தை வராமல் அழுதாள் சாந்தி.
” உங்க அப்பன் கொடுத்த சீர் பணத்திலா குடித்துவிட்டு வந்திருக்கிறேன். நான் அப்படித்தான் குடிப்பேன்…போடி ”என்றவன் பக்கத்தில் இருந்த கேசட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தான் .
சாந்திக்கு புரிந்து விட்டது .அவர் மாலையே ஊரில் இருந்து வந்து விட்டார். வந்தவர் நண்பர்களுடன் குடிக்கச் சென்றிருக்கிறார் என யூகிக்க சாந்திக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை
.
”தீய நட்பு தீராத தொல்லை ”யாக தொடர்ந்து கொண்டு இருந்தது .
ஒரே பையன் ,சொந்த வியாபாரம் ஒரு தங்கை.அவளுக்கும் திருமணமாகி விட்டது.
நல்ல குடும்பம் என கேள்விப்பட்டதால் தான்.சாந்தியைக் கொடுத்தார்கள் .
திருமணமான மறுநாளே குடித்துவிட்டு வந்து நின்றான் சங்கர்.
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் முடிக்கச் சொல்வார்கள்.இவர்கள் சொன்ன ஒரே பொய்யால் வாழ்க்கையே நரகமாகிக் கொண்டு இருக்கிறது சாந்திக்கு .
என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று அடித்துச் சொல்லி குடிப்பதை மறைத்தன் விளைவு….
இன்று கேள்விக்குறியாக நிற்கிறாள் சாந்தி.
கணவர் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் குழந்தை எழுந்து விடக் கூடாதே / என மனதுக்குள் வேண்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள் சாந்தி .
”என்னடி நீலிக் கண்ணீர் வடிக்கிறே/” என்றவன் காரணமே இல்லாமல் கை, முதுகு, கன்னம் என மாறி….மாறி அடித்தான் சங்கர் .
”என்னை ஒரேதா கொன்னு போட்டுரு ….இப்படி சித்திரவதை செய்யாதே ” என அழுதாள் சாந்தி
சாந்தியின் அழுகைச் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த பிரியா ….
அப்பா….அடிப்பதையும்….அம்மா அழுவதையும் கண்டு ”வீர் ”என கத்தி விட்டாள் பிரியா .
குழந்தை தேம்பி…தேம்பி ஓ…எனக் கத்த .ஆரம்பித்து விட்டாள்.
” இந்த சனியன் வேறு உயிரை எடுக்கிறது .” என்ற சங்கர் காலால் குழந்தையை எட்டி உதைத்து விட்டு அப்படியே போய் படுத்து விட்டான் .
குழந்தை பயத்தில் சாந்தியை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
தன் மேல் பட்ட அடியை விட குழந்தையின் மேல் பட்ட அடி சாந்திக்கு ரெம்பவும் வலித்தது…
”என்னடா நாம பாவம் செய்தோம், பெண்ணா பிறந்தது தான் பாவமா?” என்ற சாந்தி குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“‘ அம்மா…. அம்மா…”என அழுது கொண்டே பிரியா சாந்தியின் தோள்களில் தூங்கிப் போனாள்.
தூக்கத்திலும் தேம்பிக் கொண்டே இருந்தாள் பிரியா
சாந்தி கணவனைப் பார்த்தாள் ,ஒன்றுமே நடக்காதது போல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தான் சங்கர்.
இந்த நரக வாழ்க்கை வேண்டாம் என போய்விடலாம் என்றால் ….
இருந்த ஒரே வீட்டை விட்டு அவள் திருமணத்தை முடித்து வைத்தவர்கள்….
அதோடு கடன் வாங்கி தங்கையின் திருமணத்தையும் முடித்து வைத்தார்கள்.
வட்டி கட்டவே முடியாத சூழ்நிலை /இதில் அசலை எப்போது கட்டப் போகிறோம் என்ற கவலையுடன் இருக்கும் தந்தை .
இன்னும் திருமண வயதில் வீட்டுமுகட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கும் தங்கை .
தங்கையின் வருமானத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அங்கு எப்படி செல்வது.
ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையால் மூன்று பெண்ணைப் பெற்றது அவர்கள் தவறு இல்லை தான் .
இன்று/ வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கண்ணீரில் கரைந்து கொண்டு இருப்பது நானும் என் மகளும் தானே / என பல சிந்தனைக் கிடையில் உறங்கிப் போனாள் சாந்தி.
++++ ++++ ++++
காலைக் கதிரவன் தன் தூய கதிர்களால் எழுப்பினான் .
உடல் வலியை விட மனவலி அதிகமாக இருந்ததால்….
சாந்தியால் எழுந்திருக்கவே முடியவில்லை .அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டாள்.
உள்ளம் சுட்டதாலோ என்னவோ உடல் கொதிக்க ஆரம்பித்தது சாந்திக்கு .
காய்ச்சலின் வேகம் தாங்காமல் முணங்கிக் கொண்டு இருந்தாள் சாந்தி .முணங்கல் சத்தம் கேட்டு விழித்த சங்கர் …
தனது மனைவி சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு பக்கத்தில் வந்தான் .
இரவில் நடந்தது எதுவும் அவனை பாதித்து இருக்கவில்லை .
இயல்பாக .”சாந்தி என்ன உடம்புக்கு” என நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான் . உடல் அணலாய் கொதித்தது. அவள் மனம் போல..
சாந்தி/ சங்கரைப் பார்த்தாள். கணவனின் கரிசனமான குரலின் ஒலியைக் கேட்டு அவள் விழியில் நீர் நிறைந்து கண்களின் ஓரத்தில் வடிந்தது .
”சாந்திமா …என்னை மன்னிச்சிருடா .” நான் குடிக்கக் கூடாதுதான் நினைக்கிறேன்..
‘ யாராவது வந்து இழுத்துப் போயிடுறாங்க …என/” சோகமாக முகத்தை வைத்துக் கொண்ட சங்கர் .
சாந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு ,” சத்தியமா இனி குடிக்கவேமாட்டேன் . குடிச்சா நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக் கிறேன்” என கெஞ்சினான் சங்கர் .
சாந்திக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
வானத்தில் அம்மாவாசையும், பெளர்ணமியும் மாறி…மாறி வருவது போல் கணவனின் அடியும், கெஞ்சலும் மாறி…மாறி.. வருவதால் இந்த சிக்கலில் இருந்து விடுபட முடியுமா ? என யோசித்தாள் சாந்தி.
கணவரின் குடிப்பழக்கத்தால் குழந்தை மனநிலை பாதிக்க கூடாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும்….
தனது அன்பால், பொறுமையால் கணவனின் இந்த பழக்கத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வேரூன்ற முகத்தில் பிரகாசம் தோன்றியது சாந்திக்கு ..
இனி பிரியா மட்டும் குழந்தை அல்ல சாந்திக்கு, சங்கரும் ஒரு குழந்தை தான். அவள் காட்டும் அன்பால் ஒரு நாள் மாறுவார் என்ற நம்பிக்கையில் சாந்தி சாந்தமாகி விடியலுக்காக காத்திருக்கிறாள்.