ஒரு ஊரில் அடர்ந்த காடு. அந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலம் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒருமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்தார் . அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார். மற்றும் உடல் நலம் இல்லாத மிருகங்களுக்கு தன் தவ வலிமையால் மூலிகைச் சாறு கொண்டு மருத்துவம் செய்வார் .
இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தைப் போன்ற விலங்குகள் எல்லாம் அந்த ஞானியைத் தினந்தோறும் அங்கு வந்து அவரை வணங்கிச் செல்லுவதை வழக்கமாக கொண்டு இருந்தன .
இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மன்னன் வேட்டை ஆடுவதற்காக காட்டிற்குள் புகுந்து காட்டில் வாழும் விலங்குகளை எல்லாம் கொன்றுகுவித்து வந்தார்.
இதனால் காட்டில் வாழும் விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின .மக்கள் காடுகளுக்குள் வரத் தொடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டம் காட்டில் அதிகரிக்கத் தொடங்கியது .
காட்டை ஆக்கிரமித்த மனிதர்கள் அங்கேயே வீடுகளைக் கட்டிக்கொண்டு வசிக்கத் தொடங்கினர். அவர்கள் வாழ்வா தாரத்திற்கு காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்தும், மற்றும் மான், முயல் போன்ற சதுவான பிராணிகளை கொன்று சாப்பிட்டும் வாழத் தொடங்கினர் .
இதனால் காடு மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது . காடு அழிந்து கொண்டு வந்ததால் சரியான காலத்தில் மழை பெய்யவில்லை . எனவே நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது .
அப்போது சைவ உணவையே உண்டு வாழும் ஒருமுயல் குட்டி இது பற்றி யோசித்தது , காட்டில் கடும் தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் முன்பு வந்து கை,கட்டி நின்றது .
தவம் முடித்த முனிவர் முயல் குட்டியைப் பார்த்து நலம் விசாரித்தார். .’உடனே முயல் குட்டி , ஐயா மனிதர்கள் எல்லோரும் என் போன்ற சாதுவான முயல் , மற்றும் எங்கள் சக தோழர்கள் மான் ஆகியவற்றை விடாமல் விரட்டி விரட்டி கொன்று சாப்பிடத் தொடங்கிவிட்டார்கள் .. அதனால் காட்டில் எங்கு பார்த்தாலும் பசுமை குறைந்து பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது . நாங்கள் இங்கு வாழமுடியாமல் தினம் தினம் செத்துப் பிழைக்கிறோம். இதற்கு தாங்கள் ஒரு தீர்வு காணவேண்டும். எங்கள் இன முயல், மான் போன்றவைகளை மனிதர்களிடம் இருந்து காக்க வேண்டும் ”என்றது முயல்.
இதைக்கேட்ட முனிவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது .அபயம் தேடி வந்துள்ள முயலையும் , மற்ற மிருகங்களையும் , காப்பாற்ற வேண்டும் என்று ஆழ்ந்து யோசனை செய்தார். .
அப்போது காயம்பட்டு நலிந்த உடலோடு ஒரு நரி அங்கு வந்து சேர்ந்தது .அதை கவனித்த முனிவர் அந்த நரியை தன் அருகில் வரவழைத்து அதன் காயங்களுக்கு மருந்து போட்டு குணப்படுத்தினார் .
தனது உடல் பூரண குணம் அடைந்த நரி ,’முனிவரைப் பார்த்து ,”ஐயா நான் இப்போது என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்” என்றது நரி. நரி எப்போதும் தந்திரத்தில் சிறந்தவன் ஆயிற்றே. எனவே அந்த நரியை பயன்படுத்திக் கொள்ள முனிவர் திட்டமிட்டார்.
நரியாரே ,”நீ பக்கத்து நாட்டில் வசிக்கும் மன்னனிடம் சென்று தந்திரமாகப் பேசி , காட்டில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருக்கிறார். அவரை நீங்கள் சென்று சந்தித்தால் சிறிய நாட்டை ஆளும் தாங்கள் பேரரசனாக வாழும் நிலைக்கு உயரலாம் ‘என கூறும்படி முனிவர் தெரிவித்தார்.
‘அப்படியே செய்கிறேன்’ என்று கூறிவிட்டு முனிவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு நரி நாட்டை நோக்கிப் புறப்பட்டது.
நாட்டிற்கு வந்த நரி நேராக அரண்மனைக்கு வந்தது. அங்கு வாயிலில் நின்ற காவலாளியைப் பார்த்து ,”ஐயா நான் வெகு தொலைவில் இருந்து வருகிறேன். ஒரு மிகச்சிறந்த தவ முனிவர் கூறியுள்ள முக்கியச் செய்தியை மன்னரிடம் தெரிவிக்க வேண்டும் , எனவே மன்னரைப் பார்க்க வேண்டும் ‘ அனுமதியுங்கள் என்றது நரி.
நரியின் பேச்சுக்கு மதிப்பளித்து, அரசர் அரண்மனையில் தான் உள்ளார் . நீர் கொண்டு வந்துள்ள செய்தியைச் சொல்லி வாரும்’ என்று அரண்மனைக்குள் செல்ல அனுமதி வழங்கினார் .
உள்ளே சென்ற நரி , மன்னரைப்பார்த்து தனது வணக்கத்தைக் கூறி, தன்னிடம் முனிவர் கூறிய செய்தியை தெரிவித்தது. நரி கூறிய செய்தியைக் கேட்ட மன்னர் மிக்க மனம் மகிழ்ந்தார். அவர் மனதில் தான் சக்கரவர்த்தியாக வாழப்போகிறோம் என்ற பேராசை ஏற்பட்டது.
உடனே நரியாருடன் காட்டிற்குச் செல்ல தனது பரிவாரங்களுக்கு உத்தரவிட்டார். அனைவரும் நரி வழி கூற காட்டிற்குப் புறப்பட்டனர்.
தவம் செய்து கொண்டு இருந்த முனிவருக்கு மன்னர் காட்டிற்கு வரப்போவது தெரியவந்தது. உடனே முனிவர், மன்னனுக்கு நற்சிந்தனை ஏற்படவும், மிருகங்களை காக்கவும், காட்டை அழிக்காமல் இருக்கவும் மன்னனுக்கு புத்தி புகட்ட முடிவு செய்தார்.
எனவே, மன்னனுக்கு தனது தவ வலிமையால் வயிற்று வலி வரும் படி செய்தார். வயிற்றுவலியால் அவதிப்பட்ட உடலோடு மன்னர் முனிவர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார் .
முனிவரைப் பார்த்து மன்னன் ,”தபோசீலரே எனக்கு வயிற்றுவலி ,மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது . நான் எப்படி பக்கத்து நாட்டுடன் போரிடச் செல்ல முடியும். அவர்களை வெல்லமுடியும்.பேரரசனாக முடியும் ‘ எனவே என்னைக் குணப்படுத்தி எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வினாவினான் .
‘மன்னா , நீங்கள் காட்டில் வாழும் முயல், மான் போன்றவற்றின் இறைச்சிகளை உண்பீர்களா?” என்று கேட்டார். ”ஆமாம்” என்று மன்னன் பதில் கூறினார்.
உங்கள் வியாதிக்கு காரணம் இப்போது தெரிந்து விட்டது . ஆகவே நீங்கள் இன்று முதல் சைவ உணவை உண்டு வாருங்கள் , உங்கள் பரிவாரங்களுக்கும் அவ்வாறு உத்தரவிடுங்கள். நீங்கள் முன்பு இருந்ததை விட அதிக பலம் வாய்ந்தவராக விளங்குவீர்கள் . ‘ என்று முனிவர் கூறினார் .
மன்னனும் சைவ உணவையே உண்டு வந்தான். நாளடைவில் மகாபலம் வாய்ந்தவனாக விளங்கினான். முனிவரின் ஆலோசனையின் பேரிலும் ஆசீர்வாத்திலும் பல நாடுகளை தன் வீரபராக்கிரமத்தால் வென்று பேரரசனாக வாழ்ந்து வந்தான் .
எனவே வாசக அன்பர்களே நாமும் சைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சைவ உணவுகளை உண்டு , பிற உயிர்களிடத்திலும் சகோதர பாசத்தோடு வாழ்ந்து வந்தால், இறைவன் நம்முள்ளே உறைந்து நமக்கு நல்ல பலன்களை அருள்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை . ஆகவே ஜீவா காருண்யத்துடன் வாழ்ந்து நமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்வோம்.