9-ஏமாற்றுபவன் ஏமாறுவான்
செட்டியாரும் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமசாமி வீட்டிற்கு சென்று உணவு அருந்தினார்கள். சாப்பிடும் போது அந்த பெட்டியில் அமைப்பையே பார்த்துக் கொண்டே இருந்தார் செட்டியார்.
ராமசாமியிடமும்,
ரமணியிடமும் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.
ராமசாமியின் வீட்டில் இருந்த பெட்டி போல் மாடல் வரைந்து கொடுத்து செய்யச் சொன்னார் செட்டியார்.
மாதிரி பெட்டி வந்தவுடன் ராமசாமிக்கும், அவன் மனைவிக்கும் தெரியாமல் இந்த பெட்டியை வைத்துவிட்டு உணவு படைக்கும் மாயைப் பெட்டியை எடுத்து வந்து விட்டார் செட்டியார்.
மறுநாள் ராமசாமியும், ரமணியும் அமர்ந்து கொண்டு பெட்டியை திறந்து உணவுப்படை பதுமையே எனக் கூறினார்கள்.
பதுமையும் வரவில்லை, உணவும் வரவில்லை. என்ன ஆயிற்று இந்த பெட்டிக்கு! என பல தடவை சொல்லியும் வரவே இல்லை.
இருவரும் கவலையுடன் என்ன ஆயிற்று என யோசித்தார்கள்.
அப்பொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது. செட்டியாருக்கு தான் கடைசியாக உணவு படைத்தோம். பின் ஒருவரும் நம் வீட்டிற்கு வரவில்லை. இந்த முறையும் ஏதோ சூது செய்து செட்டியார் நம்மை ஏமாற்றிவிட்டார் என புரிந்தது.
இனி என்ன செய்வது நிம்மதியாக சாப்பிட்டு கொஞ்ச நாள் வாழ்ந்தோம். இனி பழையபடி பஞ்சம் தான் என ரமணி வருத்தத்துடன் சொன்னாள்.
“கவலைப் படாதே ரமணி”. நான் மகள் வீடு வரை போய் வருகிறேன். என்றவர் மிகவும் சோர்வுடன் புறப்பட்டார்.
நரியின் குகை வரும் போது ராமசாமி மிகவும் களைப்பகை இருந்தார்.
அவரைப் பார்த்த
ராமவுக்கும், மருமகனுக்கும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை அறிந்து. “என்ன அப்பா! அம்மா எப்படி இருக்கிறார்கள்? என்ன உடம்புக்கு என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள் ரமா.
“அம்மா உடம்புக்கு எல்லாம் ஒன்றும் இல்லை. இப்போதும் செட்டியார் எங்களை ஏமாற்றி விட்டார். அதுதான் மிகவும் கவலையாக இருக்கிறது.” என்றார் ராமசாமி.
“ மாமா கவலையை விடுங்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது வாருங்கள் சாப்பிடலாம் என அழைத்துக் கொண்டு சென்றார்” நரி மருமகன்.
இரண்டு நாள் இருந்துவிட்டு ராமசாமி வீட்டிற்கு போக கிளம்பினார்.
இந்தாங்க மாமா இந்தப் பெட்டியை வீட்டிற்கு கொண்டு போய் ஊர் மக்கள் எல்லோரையும் கூப்பிடுங்கள்.
அந்த செட்டியாரையும் கூப்பிடுங்கள். “என்னை ஏமாற்றிவனை கவனி” என சொல்லி பெட்டியை திறங்கள். பின் பாருங்கள் என்ன நடக்கிறது என்பதை ஊர் போய் தெரிந்து கொள்வீர்கள், என்றது நரி மருமகன்.
ராமசாமியும் பெட்டியை வாங்கிக்கொண்டு இருவரிடமும் விடைபெற்ற ஊர் வந்து சேர்ந்தார்.
ரமணியை கூப்பிட்டு, “ஊரில் உள்ள எல்லோரையும் நம் வீட்டு முன் கூப்பிடு” என்று கூறினார் ராமசாமி.
எதற்கு என்று ரமணி கேட்டாள்.
“கூப்பிடு நடப்பதை பார்க்கலாம்” என்றார் ராமசாமி.
ரமணியும் செட்டியார் வீடு முதல் ஊரில் எல்லோரையும் அழைத்து வந்தாள்.
“இந்த முறையும் நரி மருமகன் ஏதாவது கொடுத்திருப்பார். அதை பார்த்து வருவோம் வாங்க என்று எல்லோரும் ராமசாமி வீட்டு முன் கூறினார்கள்.
பெட்டியை எடுத்துக் கொண்டு ராமசாமி வந்தார். அவர் பின் ரமணியும் என்ன என்று பார்க்க வந்தாள்.
என்னை “ஏமாற்றியவனை கவனி” என பெட்டியை திறந்தார் ராமசாமி.
பெட்டிக்குள் இருந்து ஒரு தடி வந்தது. செட்டியார் பக்கம் சென்று செட்டியாரை துரத்தி… துரத்தி அடித்தது.
“ஐயோ! அம்மா… அப்பா… என்னை அடிக்காதே… வலிக்கிறது விட்டு விடு என செட்டியார் கதறினார்.
தடி விடுவதாக இல்லை. செட்டியார் மனைவி தடுக்கப் போனாள் அவளுக்கும் சேர்த்து அடி விழுந்தது.
ஊர் மக்கள் எல்லாம் என்ன. எது என்று ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.
வலி பொறுக்க முடியாத செட்டியார். என்னை விட்டு விடு நான் உண்மை எல்லாம் சொல்லிவிடுகிறேன் என்று கதறினார்.
அப்போது தான் தடி அடிப்பதை நிறுத்தியது.
பூசணிக்காய் வாங்கி ஏமாற்றியதில் இருந்து, பெட்டி திருடியது வரை எல்லாவற்றையும் ஊர் மக்கள் முன் செட்டியார் சொன்னார். அவர் மனைவியும் ‘ஆம்’ என்று கூறி வெட்கி தலை குனிந்தாள்.
ராமசாமியிடம் எடுத்தது, வாங்கியது எல்லாவற்றையும் கொடுக்கச் சொன்னார்கள் ஊர்மக்கள்.
செட்டியாரும் வேறு வழியில்லாமல் பூசணிக்காயில் இருந்த தங்கக் காசுகளையும், பதுமை உள்ள பெட்டியையும் கொண்டு வந்து ஊர் மக்கள் முன்னிலையில் ராமசாமியிடம் கொடுத்தார்.
திருட்டும்,பொய்யும் ஒரு நாளும் நிரந்தரம் அல்ல.
ஒரு உண்மை வெளிவரும். என்பதை செட்டியார் மட்டுமல்ல அந்த ஊர் மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.
ராமசாமி எல்லோருக்கும் நன்றி கூறினார்.
அங்கு ஒரு பெரிய சத்திரம் கட்டி வழிப் போக்கர், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்க பதுமை பெட்டியை பயன் படுத்தினார் ராமசாமி.
அவ்வூரில் திருட்டு, பொய் எல்லாம் மறைந்து விட்டது. தப்பு செய்தால் “தடியடி” கிடைக்கும் என்று எல்லோரும் “தடி” பெட்டிக்குப் பயந்தனர்.
எப்படியோ நரி மருமகன் செட்டியாரை மட்டும் இல்லை. இந்த ஊர் மக்களையே நல்வழிப் படுத்தி விட்டார். என்று ராமசாமியும், ரமணியம் மகிழ்ந்தனர்.
பார்த்திர்களா சிறுவர்களே! ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஒருநாள் பிடிபடுவான். என்பது இக்கதை நமக்கு உணர்த்திவிட்டது.
நல்ல கதைகளை கேட்ட நீங்களும் நல்லவர்களாக மாறிவிட்டீர்கள் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம் எங்க தாத்தா தனது வீட்டிற்குச் செல்ல எழுந்தார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.