மன்னரின் முகம் மலர்ந்தது.

காவலா! என அழைத்தார் மன்னர்.

என்ன அரசே! என அடுத்த நொடியில் வந்த காவலாளி பணிவுடன் நின்றான்.

“ஒரு லட்சம் பொற்காசுகள் வாங்கி வா” என கட்டளை இட்டார் மன்னர்.

திரும்பி வரும்போது பொற்காசுகளுடன் வந்தான்.

ஒரு வேலையாளிடம் கொடுத்த மன்னர். இந்த மூட்டையை எடுத்துச் சென்று, பெண் தருபவர் உண்டா? எனக்  கூவிச் சென்று தருபவர் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் எனக் கட்டளையிட்டார் மன்னர்.

“அப்படியே ஆகட்டும் அரசே” என பணிவுடன் வேலையாள் விடைபெற்றான்.

மந்திரியும் விடைபெற்றுச் சென்றார்.

பொற்காசுகளைச் சுமந்து கொண்டு சென்ற வேலையாள் மீன் ராஜாவுக்கு பெண் தருபவர் உண்டா? மீன் ராஜாவிற்கு பெண் தருபவர் உண்டா? எனக் கூவிக் கொண்டே ஒவ்வொரு ஊராகச் சுற்றி வந்தான்.

ஒரு லட்சம் பொற்காசு என்றால் ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், பெண்ணை எப்படி மீனுக்கு திருமணம் செய்து வைப்பது எனப் பெற்றோர் பின் வாங்கினார்கள். கூடவே, ஒரு பெருமூச்சும் அவர்களிடம் இருந்து வந்தது.

ஆனால், யாரும் பெண் தரம் முன் வரவில்லை.

இருப்பினும் பணியாள் தளர்ந்து விடவில்லை. சுற்றி.. சுற்றி…  ஒரு லட்சம் பொற்காசுக்கு பெண் தருபவர் உண்டா? எனக் கூவிக்கொண்டே வந்தான் பணியாள்.

கல்யாணி வீட்டுப் பக்கம் ஒரு லட்சம் காசுக்கு பெண் தருபவர் உண்டா எனக் கூறி வந்தவனை நிற்கச் சொன்னது  ஒரு குரல்.

ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான் பணியாள்.

தெருவிற்கு வந்த கல்யாணி இங்கே வாப்பா என அழைத்தாள்.

பணியாளர் சென்று பெண் இருக்கிறதா? அம்மா என வினாவினான்.

‘ஆமாம்’ என்றாள் கல்யாணி. உள்ளே வா! என்று வீட்டின் முன் பகுதிக்கு அழைத்துச் சென்று அமரச் சொன்னாள்.

வீட்டின் உட்பகுதிக்குச் சென்ற கல்யாணி, சுதாவை அழைத்தாள்.

என்ன சித்தி என அருகில் வந்தாள் சுதா.

இந்தா இவருடன் சென்று மீன் ராஜாவை திருமணம் செய்து கொள். ஒரு லட்சம் பொற்காசு தருகிறார்களாம். எங்கள் பணக்கஷ்டமும் தீரும், என்றாள் கல்யாணி.

“சித்தி வேண்டாம் சித்தி அப்பா வேறு இல்லை சித்தி” என கண்கள் கலங்க கூறினாள் சுதா.

உங்க அப்பா வந்தா நான் சொல்லிக் கொள்கிறேன். நீ கிளம்பு என உத்தரவிட்டாள் அதிகாரக் குரலில் கல்யாணி.

சுதா கண்களில் நீர் மல்க வேண்டாம் என சொல்ல மாட்டார்களா! என பரிதாபத்துடன் அவளைப் பார்த்தாள்.

கல்யாணி முகத்தை திருப்பிக் கொண்டாள். மனம் கனத்தது  கண்ணீர் வழிந்தது சுதாவிற்கு.

“போறேன்” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு பணியாளுடன் செல்லத் தயாரானாள் சுதா.

பணியாளும் ஒரு லட்சம் பொற்காசை கல்யாணிடம் கொடுத்துவிட்டு சுதவை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

அரண்மனையில் மன்னரைப் பணிந்து வணங்கிய பணியாள் சுதாவை ஒப்படைத்தான்.

சுதாவைப் பார்த்த மன்னரும், ராணியும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். திருமண ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்கள்.

நல்ல நாள் குறிக்கப்பட்டது. ஊரே வியக்கும்படி குறித்த நாளில் சுதாவிற்கும், மீன் ராஜாவிற்கும் திருமணம் நடந்தது.

சித்தியின் கொடுமை இங்கு இல்லை. மகள் போல் அன்பு காட்டி கனிவு மொழி பேசி சுதந்திரமாக இருக்கச் செய்தார்கள்.

மீன் ராஜாவும் அன்பு மொழி பேசியதில் வியப்படைந்த சுதா தான் ஒரு மீனை திருமணம் செய்தோம் என்பதேயே மறந்து விட்டாள். சந்தோசம் என்பதை அறிந்திராமல் வாழ்ந்த சுதா சந்தோசத்தின் எல்லைக்கே போய்விட்டாள்.

இருந்தாலும் ஒரு குறை இருந்தது. தனது தந்தையிடம் சொல்லாமல் வந்து விட்டோமே என்பதுதான்.

சித்தி தண்டிப்பதாக நினைத்து செய்த செயல் தனக்கு நல்வாழ்வு கொடுத்துவிட்டது. இதை தெரிந்தால் தந்தை மகிழவே செய்வார் என்பதை நினைக்கும் போது அந்தக் குறையும் மறைந்து போனது சுதாவிற்கு.

அதே சமயத்தில் சுதாவின் தந்தை, சுதாவை காணாது ‘எங்கே’ என விசாரித்தார்.

அதை ஏன் கேட்கிறீர்கள் அவள் யாருடானோ ஓடிவிட்டாள் என நீலிக் கண்ணீர் வடித்தாள் கல்யாணி.

வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் குணம் உள்ள ராமுவும் கல்யாணி சொல்வது உண்மை என நம்பி விட்டான்.

அழுது…அழுது ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டான் ராமு.

அரண்மனையில் வாழ்ந்த சுதா ஒருநாள் மீன் ராஜாவுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அவள் தொட்டியில் உள்ள மீனைப் பிடிப்பதும். அது நழுவி ஓடுவதும் இவள் விரட்டிப் பிடிப்பதுமாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.

திடீரென வால் பகுதியை பலம் முழுவதையும் செலுத்தி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் சுதா.

திமிரி ஓடிய மீன் ராஜாவின் வால்பகுதி சுதாவின் கையில் இருக்க தலைப் பகுதியுடன் நீந்திக் கொண்டு மீன் ராஜா செல்ல உடல் பகுதியில் இருந்து வால்வரை பாதிப் பகுதி சுதாவின் கையில் இருந்தது.

என்ன இப்படி இருக்கிறதே என நினைத்த சுதா அதை கீழே போட்டுவிட்டு மீன் ராஜாவைப் பார்த்தாள்.

உடல் பகுதியில் இருந்து கால்வரை மனிதர் போல் இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டவள் அப்படியே நின்று விட்டாள் சுதா.

உடனே, சுதாரித்துக் கொண்டு தலைப்பகுதியை பலம் உள்ள மட்டும் பிடித்து இழுத்தாள் சுதா.

என்ன ஆச்சரியம் அந்த தலைப் பகுதியும் அப்படியே அவள் கையில் வந்து விட்டது.

இப்போது அழகான ஒரு வாலிபன் நீரில் நிற்பது கண்டு சந்தோசத்தில் “அத்தை, மாமா இங்கே ஓடி வாருங்கள்” என சத்தமாகக் கூப்பிட்டாள் சுதா.

அவள் கூப்பிடும் குரல் கேட்டு என்னவோ, ஏதோ என காவலாளிகளும், மன்னர், ராணி அனைவரும் அங்கே வர,

அவள் சந்தோசத்தில் பேச முடியாமல் சைகையில் தொட்டியை காட்டினாள்.

தொட்டிக்குள் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் அவர்கள் கண்ணை அவர்களால் நம்ப முடியவில்லை.

கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்கள்.

அழகான இளவரசன் சூரியப் பிரகாசமாய் சிவந்த மேனி ஒளி வீச நின்றிருந்தான்.

எல்லோரும் அதிர்ச்சி கலந்த சந்தோசத்தில் அப்படியே நின்றார்கள்.

மந்திரி சுதாரித்துக் கொண்டு வெளியில் வரும்படி கை கொடுத்தார்.

மீன் ராஜாவும் கையைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்தார்.

தந்தை, தாயை வணங்கினார் மீன் ராஜா.

மகனே, எனக்கட்டி அனைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள் ராணி. அரண்மனை முழுவதும் இந்த செய்தி பரவி. ஊர் முழுவதும் பரவியது.

மீன் ராஜா அழகான இளவரசனாக மாறிவிட்டாராம் என சந்தோசம் அடைந்த நாட்டு மக்கள் இளவரசனைக் காண அரண்மனை முன் கூடி விட்டார்கள்.

மக்களின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட மன்னர், குடும்பத்துடன் அரண்மனை முன்பு வந்து மக்களைக் கண்டார்.

மீன் ராஜா வாழ்க!  மன்னர் வாழ்க! மகாராணி வாழ்க! என மக்கள் ஒரே மூச்சில் வாழ்க கோசமிட்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். பார்த்தவர்கள் பின் செல்ல, பார்க்காதவர் முன்வர அனைவரும் மீன் ராஜாவைக் கண்டு மகிழ்ந்தனர்.

நாடே விழாக் கோலம் பூண்டது. அன்று இரவு மீன் ராஜாவிற்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள் மகாராணியும், மன்னரும்.

தனிமையில் காத்திருந்த கணவனைக் காண பால் செம்புடன் வந்த சுதா வெட்கத்தால் தலைகுனிந்தாள்.

உன் சோகம் தீர்க்கவே இறைவன் எனக்கு மனித உடல் தந்துவிட்டார் போலும் என்ற மீன் ராஜா அவள் முகத்தை நிமித்தினான்.

கண்ணும்… கண்ணும் சந்தித்துக் கொண்டன. நாம் எதற்கு இடையில் என விளக்கு அணைந்து  கொண்டது.

மன்னர் மனதில் இருந்த மாபெரும் கவலை தீர்ந்தது. தனக்குப் பின் இந்த நாட்டை யார் ஆள்வது? என வருந்தி இருந்த மன்னர். மீன் ராஜா முழு உருவம் அடைந்த பின் மன நிறைவு பெற்றிருந்தார் மீன் ராஜாவிற்கு முடிசூட்டும் விழா நடத்தி மன்னர் ஆக்கினார்.

மீன் ராஜாவும் எல்லா கலைகளும் கற்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று மன்னருக்கு வேண்டிய அனைத்து தகுதியையும் பெற்றுக் கொண்டார்.

அப்போது இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மன்னருக்கும், மகாராணிக்கும் எட்டியது.

‘ஆம்’ அவர்கள் தாத்தா பாட்டி ஆகப்போகிறார்கள் என்பதுதான் அது.

தங்கள் குலம் தழைக்க வாரிசு வந்துவிட்டது கண்டு ஆனந்த மிகுதியால் சுதாவை மிகவும் கொண்டாடினார்கள்.

எல்லாம் சுதா வந்த நேரம் அரண்மனையில் இருந்த இருள் விலகி ஒளி வீச தொடங்கிவிட்டது என ஆனந்தப்பட்டார்கள்.

அரண்மனையில் இருந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பிடித்தவளாக இருந்தாள் சுதா.

இந்தச் செய்தி பரவி பரவி கல்யாணி காதிலும்  ஏட்டியது.

இப்படி ஒரு வாழ்வா வாழ்கிறாள். நமது மகளை திருமணம் செய்து கொடுக்காமல் போய்விட்டோமே? என வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டாள் கல்யாணி.

சுமதியை திருமணம் செய்து கொடுத்து அவள் மூன்று மாதமாக இருந்தாள்.

கல்யாணியின் குறுக்கு மூளை வேலை செய்தது.
எப்படியும் நம் மகளை அரண்மனையில் வாழ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினாள்.

உடனே செயல்பட அரண்மனைக்கு பயணம் ஆனால் கல்யாணி.

அரண்மனைக்கு வந்த கல்யாணி தனது நாடகத்தை தொடங்கினாள். மகளைப் பார்க்க வந்திருப்பதாக அரண்மனை காவலாளியிடம் கூறினாள் கல்யாணி.

காவலனும் அரசரிடம்  கேட்டு அவர் உத்தரவின் பெயரில் உள்ளே செல்ல அனுமதித்தான்.

சுதாவின் சித்தி என்பதால் நல்ல விருந்துகள் படைத்து உபசரித்தார்கள்.

“மகள் வாயும், வயிறுமாக இருப்பது தெரிந்து அவளை எனது வீட்டிற்கு அழைத்துப் போக வந்தேன்” என்றாள்.

இங்கே பிரசவம் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள் மன்னரும், அரசியும்.

என்னதான் நாங்கள் ஏழையாக இருந்தாலும் எங்களுக்கும் பாச உணர்வு இருக்கிறது இல்லையா?

அம்மா இருந்திருந்தால் நம்மை வீட்டுக்கு அழைத்துப் போய் இருப்பார்களே, என வயிற்றுப் பிள்ளைத் தாச்சி எண்ணினால் உங்கள் வாரிசுக்குத் தான் குறைவு ஏற்படும். என பாசம் பொழிவது போல் நைசாகப் பேசினாள் கல்யாணி.

சுதாவை அனுப்ப மனம் இல்லாமல் அனுப்பி வைக்க முடிவு செய்தார்கள்.

மீன் ராஜா தனது மனைவியை அழைத்தார். ஒரு சந்தன கிண்ணத்தில் குழைத்த சந்தனத்தை கையில் தொட்டு சுவரில் பதிக்கச் சொன்னார்.

கையில் அணிந்திருந்த கணையாழியை கழற்றி இதை பத்திரமாக வைத்து விட்டு வா எனக்கொடுத்தார் மீன் ராஜா.

வாங்கிய சுதா உள்ளே சென்று பத்திரமாக வைத்து விட்டுத் திரும்பினாள்.

பின் அவள் சித்தியுடன் பிரிய மனமின்றி வழி அனுப்பி வைத்தார்கள்.

கல்யாணி சுதாவை அழைத்துக் கொண்டு போகும் வழியில் ஒரு கிணறு இருந்தது. அதை கண்ட கல்யாணி, தாகமாக இருக்கிறது தண்ணீர் அருந்தி விட்டுப் போவோம் என அழைத்தாள்.

சரி சித்தி என்ற சுதாவும் அவளுடன் சென்றாள். 

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply