12-மீன் ராஜா

தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது….

ஓடி வந்தாள் உமா. அவள் முகம் எல்லாம் வேர்த்து, கண்கள் சிவந்து இருந்தது.

துணிகள் ஆங்காங்கே நனைந்து இருந்தது.

உமாவை பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டார் தாத்தா.

உமாவிற்கு அம்மா இல்லை. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார்.

அன்று முதல் உமாவுக்கு சனி திசை தான். சிறுமி உமாவை வேலை வாங்கிக் கொண்டே இருப்பாள் அவள் சித்தி. 

உமாவும் அவளுக்கு செய்ய முடியாத வேலையை எல்லாம் கஷ்டப்பட்டு செய்து கொண்டிருந்தாள்.

இப்போது கூட வேலையை செய்துவிட்டு  வந்திருப்பாள. என நினைத்த தாத்தா உமாவை அருகில் அழைத்து அமர வைத்துக் கொண்டவர்.

குழந்தைகளே! கவனியுங்கள், ஒரு கதை சொல்லப் போகிறேன் என்றவர் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊரில் ராமுவும் ரமாவும் வாழ்ந்து வந்தார்கள்.

ரமா கர்ப்பவதி ஆனாள். பிரசவ காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. ரமா இறந்துவிட்டாள்.

உறவு என்று சொல்லிக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டான் ராமு.

திருமணம் செய்த புதிதில் சொந்தக் குழந்தை போல் நல்ல முறையில் கவனித்து வந்தாள் கல்யாணி.

அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுமதி என பெயர் வைத்தார்கள்.

பெரியவள் சுதாவை வேலை வாங்க ஆரம்பித்து விட்டாள் கல்யாணி.

சுமதியை அன்புடன் வளர்த்த கல்யாணி சுதாவை கொடுமை செய்ய ஆரம்பித்தாள்.

இவ்விதமாக காலச் சக்கர சுழற்சியால் நாட்கள் ஓடின. சுமதியும், சுதாவும் பருவ வயதை அடைந்திருந்தனர்.

பக்கத்து நாட்டு ராஜாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை. எல்லா செல்வமும் இருந்தும் தனக்குப் பின் நாட்டை ஆள குழந்தை செல்வம் இல்லையே என வருந்தினார்.

அந்த நாட்டில் மீன் வியாபாரி கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான்.

வழக்கம்போல் அன்றும் மீன்விற்க சென்றான் கோவிந்தன்.

எல்லாம் மீன்களும் விற்று விட்டன. ஒரு மீன் மட்டும் விற்கவில்லை.

ஒரு மீன் தானே இருக்கிறது. இதை நம் வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடலாம் என நினைத்த கோவிந்தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் மீனைக் கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்ட மங்கா. வீட்டின் பின்புறம் சென்று வெட்டப் போனாள்.

மீனை கையில் எடுத்து வெட்டப் போகும்போது ஒரு சத்தம் வந்தது.

“அம்மா என்னை வெட்டாதே” என்று சத்தம் கேட்டது.

யார் அம்மா என்றது? மங்கா சுற்றி சுற்றிப் பார்த்தாள். யாரும் இல்லை. எனவே, பிரம்மை என நினைத்தபடி மீண்டும் மீனை வெட்டச் சென்றாள் மங்கா.

அம்மா நான் தான் மீன் பேசுகிறேன். என்னை வெட்டாதே என்றது மீன்.

கையில் இருந்த மீனை கீழே போட்டு விட்டாள் மாங்கா.

என்ன மீன் பேசுகிறதா! என ஆச்சரியப்பட்ட மாங்கா, கையில் மீனை எடுத்துக்கொண்டு கணவனிடம் ஓடி வந்தவள்.

மீன் பேசுகிறது இங்கே பாருங்கள் என்றவள் மீனை அவன் கையில் கொடுத்தாள் மங்கா. 

கொடு பார்ப்போம். என வாங்கிய கோவிந்தன். நீ பேசினாயா? எனக் கேட்டான்.

“ஆம் பேசினேன்” என்றது.

கோவிந்தன் வியந்தான், மகிழ்ச்சியில் தடவிக் கொடுத்தான்.

“ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வா” என்றான் கோவிந்தன்.

மங்காவும் ஓடிப்போய் நீர் உள்ள பாத்திரத்தை எடுத்து வந்தாள்.

அதில் மீனைப் போட்ட கோவிந்தன். கையில் பாத்திரத்தை எடுத்துக் கொண்டான்.

“வா மங்கா நம் மன்னரிடம் சென்று காண்பிப்போம்” என இருவரும் அரண்மனையை நோக்கி சென்றார்கள் மன்னரைப் பார்க்க.

அரண்மனை காவலாளியிடம் மன்னரைப்  பார்க்க வேண்டும் ஒரு அபூர்வப் பொருள் கொண்டு வந்துள்ளோம் எனக் கூறினார்கள்.

காவலாளியும் அரண்மனை உள்ளே சென்று மன்னரை வணங்கினான்.

மன்னரும் என்ன விபரம் என விசாரித்தார்.

மன்னா வாயிலில் ஒரு  மீனவத் தம்பதிகள் நிற்கிறார்கள். அவர்கள் ஒரு அபூர்வப் பொருளுடன் உங்களைக் காண வந்திருக்கிறார்கள் என்றான் காவலாளி.

உடனே வரச் சொல் என்றார் மன்னர்.

வாயிலுக்கு வந்த காவலாளி உள்ளே செல்ல அனுமதித்தான்.

மன்னா வணக்கம்! மன்னா!என மன்னர் முன் வந்த இருவரும்.

தாங்கள் கொண்டு வந்த பாத்திரத்தை மன்னரிடம் காண்பித்தார்கள்.

மன்னா மீன்  பேசுகிறது என்றார்கள்  ஒருமித்த குரலில்.

மீன் பேசுகிறதா!என ஆச்சரியப்பட்ட மன்னர் பட்டத்து ராணி ராஜேஸ்வரியைப் பார்த்தார்.

ராணி ராஜேஸ்வரி ஆர்வம் மிகுதியால் எழுந்து வந்து மீனைப் பார்த்தாள்.

அவளைப் பார்த்த மீன் “அம்மா… அம்மா… என அழைத்தது.

அம்மா என அழைக்க குழந்தை இல்லாமல் இருக்கும் தன்னை “அம்மா” என அழைக்கும்
மீனைப் பார்த்த  ராணி கண்களில் நீர்  சுரந்தது.

தனது கைகளால் மீனை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

இக்காட்சியை கண்ட மன்னரும் மகிழ்ந்தார். மீனவத் தம்பதிகளைப் பாராட்டினார்.

பொன்னும், பொருளும்  கொண்டு வர உத்தரவிட்டார் மன்னர்.

கொண்டு வந்த பொன்னும், பொருளையும் கொடுத்து மகிழ வைத்தார் மன்னர்.

பரிசுகளைப் பெற்றுக் கொண்ட கோவிந்தனும், மங்காவும் மன்னரையும், ராணியையும் வணங்கி விடை பெற்றார்கள்.

மன்னரும், ராணியும் மீனுடன் அந்தப் புரத்திற்குச் சென்றார்கள்.

இறைவனே! இந்த மீன் உருவில் நமக்கு ஒரு மகனைத்  தந்திருக்கிறார் என சந்தோசப்பட்டாள் ராணி ராஜேஸ்வரி.

மன்னரும் மீனை எடுத்துப் பார்த்தார். மனதில் சந்தோசம் பாய்ந்தது.

தங்கள் குறை தீர்க்க வந்த செல்வம் என எண்ணி தண்ணீர் நிறைந்த தொட்டியில் மினை விட்டார். மீனும் துள்ளித்துள்ளி நீந்தி தனது மகிழ்ச்சியை தெரிவித்தது.

மீன் வளர வளர தொட்டியையும், பெரிதாக மாற்றிக் கொண்டே வந்தார்கள். மீன் ராஜா பெரியவனாக வளர்ந்து விட்டான்.

மீன் ராஜாவுக்கு திருமணம் செய்து பார்க்க ராணியும், ராஜாவும் எண்ணினார்கள்.

மீனுக்கு யார் பெண் தருவார்கள் என கவலை கொண்டார்கள்.

அதே நேரம் அங்கு வந்த மந்திரி குணசேகரன் மன்னரை வணங்கி நின்றான்.

மன்னரும் தலை அசைத்தார் மனச்சோர்வுடன். உடனே, புரிந்து கொண்ட மந்திரி. மன்னரின் முகச் சோர்விற்கான காரணம் யாது?என வினாவினர்.

மன்னரும் தனது கவலைக்கான காரணத்தை எடுத்துக் கூறினார்.

யோசித்த மந்திரி மன்னா! இப்படிச் செய்தால் என்ன, என சில யோசனைகள் கூறினார்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply