நீ மட்டும் என்னை மோசம் செய்யலாமா? என்றான் கந்தசாமி.

பிறகு இருவரும் கூடிப் பேசி நம்மை ஏமாற்றிய பாட்டியை ஏமாற்ற வேண்டும் என முடிவு செய்தார்கள்.

தந்திரக்கார பாட்டி இவர்கள் தங்களை ஏமாற்றுவதற்குள் தான் முந்திக் கொள்ள வேண்டும். என ஒரு திட்டம் போட்டாள்.

மறுநாள் இருவரையும் அழைத்த பாட்டி அழகிய வேலைப்பாடு நிறைந்த ஒரு பழைய பெட்டியைக் காட்டினாள்.

அப்பெட்டியில் இரண்டு பூட்டுகள் இருந்தன. ஒன்றைத் திறந்து காண்பித்தாள். அதில் பழங்கால நகைகள் பளபளத்தன.

மற்றொரு பூட்டைத்  திறந்து காண்பித்தாள். அதில் இரத்தினமும், தங்கக்காசும் கண்ணைப் பறித்தது.

மீண்டும் பெட்டியை மூடிய பாட்டி, எனக்குப் பின் எல்லாம் உங்கள் இருவருக்கும்தான் கவனமாக வேலை செய்து மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறினாள் பாட்டி.

பொன்னையும், இரத்தினத்தையும் கண்டவுடன் எத்தர்களின் ஆசை அதிகமானது.

சமயம் பார்த்து பாட்டியை ஏமாற்றி அப்பெட்டியை திருடிச் செல்ல திட்டமிட்டு இருந்தார்கள்.

அதனால், வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டார்கள் இருவரும்.

இருவரும் வேலைக்குச் சென்ற நேரத்தில் பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த நகைகள், தங்க காசு இரத்தினம் அனைத்தையும் வேறு பெட்டிக்கு மாற்றி பத்திரமாக மாற்று இடத்தில் வைத்த பாட்டி பெட்டியில் ஓட்டுச் சில்லுகள், கற்கள், மரக்கட்டைகளை நிறைத்து முன்போல் வைத்து விட்டாள்.

அம்மாவாசை வந்தது. இந்த நாள் தான் நமக்குச் சாதகமாக இருக்கும் என எண்ணிய இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

இவர்கள் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பாட்டி. இருவரையும் கூப்பிட்டு அம்மாவாசை நாளாக  இருக்கிறது. கள்வர் பயம் உண்டு இந்த காட்டில்…

எனவே, இந்தப் பெட்டியை கிணற்றில் போட்டு விடுங்கள் பௌர்ணமி வரும்போது எடுத்துக்கொள்ளலாம் என்றாள் பாட்டி.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. சந்தோசமாக அப்படியே செய்கிறோம் பாட்டு என்றவர்கள்.

தூக்க முடியாமல் தூக்கி காயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கி விட்டனர்.

எத்தனுக்கு எத்தனாக  இருக்கவில்லை என்றால் இந்த காட்டில் தன்னந்தனியாக காலத்தை ஓட்ட முடியுமா? பாட்டி இருவரின் எண்ணத்தை உணர்ந்து கொண்டு அவர்கள் கண்ணில் படும் இடத்தில் சாவியை வைத்தாள்.

பின் தூங்குவது போல் குறட்டை விட்டு தூங்கினாள் பாட்டி.

இதுதான் நல்ல சமயம் என எண்ணிய இருவரும் சாவியை எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு வந்தார்கள்.

கயிற்றில் ஒருவன் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குவது என்றும். கீழே சென்ற பின் பெட்டியை கட்டி மேலே அனுப்பி விட்டு மறுமுறை கயிற்றில் கட்டி மேலே வந்து விடுவது எனவும் திட்டம் போட்டார்கள்.

கந்தசாமி இறங்குவது என்றும். மாடசாமி மேலே இழுப்பது  எனவும் முடிவு செய்து கந்தசாமி கயிற்றை கட்டிக் கொண்டு கீழே இறங்கினான்.

மாடசாமியை நம்பாத கந்தசாமி சாவியை தன்னுடனே வைத்துக் கொண்டான்.

கீழே இறங்கிய கந்தசாமி கிணற்றின் அடியில் இருந்த பெட்டியை தூக்க முடியாமல் தூக்கினான்.

ஒரு சின்ன ஆசை வந்தது கந்தசாமிக்கு. பெட்டியை திறந்து பார்க்கலாம் என்று.

தயங்காது உடனே, பெட்டியை திறந்து பார்த்தான். பார்த்தவன் திடுக்கிட்டான் பெட்டிக்குள் ஓட்டுச் சில்லும், கற்களும், மரக்கட்டைகளும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

இந்த உண்மை தெரிந்தால் தன்னை மேலே இழுக்க மாட்டான் மாடசாமி என உணர்ந்த கந்தசாமி ஒரு தந்திரம் செய்தான்.

பெட்டியில் இருந்த கற்களையும், ஓடுகளையும் கீழே கொட்டினான் கந்தசாமி.

என்ன சத்தம் என மேலே இருந்து குரல் கொடுத்தான் மாடசாமி. 

பெட்டியை கட்டி  நிமிர்த்துகிறேன் கெட்டியாகப் பிடித்துக் கொள். என பதில் கொடுத்தான் கந்தசாமி.

நிமித்தும்போது காசுகளும், நகைகளும் மோதும் சத்தம் தான் கேட்டிருக்கும் என மகிழ்ந்தான் மாடசாமி.

மேலே வரட்டும் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம். கந்தசாமி எப்படியோ போகட்டும் என நினைத்தவன்.

சத்தமாகப் பேசினால் பாட்டி விழித்துக் கொண்டாலும் விழித்துக் கொள்வாள் என நினைத்து அதற்கு மேல் பேசவில்லை.

பெட்டியை காலி செய்த கந்தசாமி அதற்குள் ஒடுங்கி உட்கார்ந்து கொண்டு கயிற்றை அசைத்து சிக்னல் கொடுத்தான் கந்தசாமி.

மாடசாமியும் கயிறு அசைவது கண்டு பெட்டியை கட்டி விட்டதை உணர்ந்து கொண்டு கயிற்றை மேலே தூக்கினான்.

மேல் விளிம்பு வருவதற்கு சற்று முன் கந்தசாமி பெட்டியை மூடிக் கொண்டான்.

மேலே வர வர பெட்டி கனமாக இருப்பது கண்டு மாடசாமி  சந்தோசப்பட்டுக் கொண்டு தனது சக்தி முழுவதையும் கொண்டு பெட்டியை மேலே இழுத்து இறக்கினான்.

பெட்டி நன்றாக மூடிக்கொண்டதால் உடனே திறந்து வெளியே வர முடியவில்லை கந்தசாமிக்கு.

அதற்குள் கயிற்றை கழட்டிவிட்ட மாடசாமி, பெட்டியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு விரைவாக நடந்தான்.

கிணற்றுக்குள் இறங்கி மேலே வந்த அலுப்பு கந்தசாமிக்கு இருந்தமையால் சரி! இவன் தூக்கிச் சுமக்கட்டும் நாம் சற்று ஓய்வாக இருப்போம் என எண்ணி பேசாது இருந்தான் கந்தசாமி.

சூரியக் கதிர்கள் தனது வெண் கீற்றுகளை பரப்பவே பளபள
என விடியும் சமயம் வந்தது.

பின்னால் யாரோ துரத்துவது போல் இருக்கவே ஓடினான் மாடசாமி.

ஏன்? இவ்வளவு வேகமாக ஓடுகிறாய் மெதுவாக போ! என்றான் கந்தசாமி.

பாவிப்பயல் அவ்வளவு பெரிய கிணற்றில் இருந்து எப்படியோ ஏறி பங்கு கேட்க வந்துவிட்டான் என இன்னும் வேகமாக ஓடினான்.

தலையில் இடிக்கிறது, வயிறு வலிக்கிறது, மெதுவாகப் போ!இல்லை என்றால் பெட்டியை கீழே இறக்கு என்றான் கந்தசாமி.

தலையில் இருந்து குரல் வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட மாடசாமி பெட்டியை கீழே இறக்கி கதவை திறந்தான்.

உள்ளே இருந்து கந்தசாமி வந்தான்.

கந்தசாமியைப் பார்த்த மாடசாமிக்கு கோபம் வந்தது இவ்வளவு தூரம் உன்னையா சுமந்து வந்தேன். உள்ளே இருந்த நகைகள் எங்கே? எனக் கேட்டான் ஆத்திரம் மாறாத குரலில்.

பாட்டி பெரிய கில்லாடி, நாம் இரண்டு பேரும் சேர்ந்தால் கூட பாட்டியின் சாமர்த்தியத்தில் கால் பங்கு கூட வரமாட்டோம். பாட்டியை நாம் காட்டிக் கொடுத்தால் பாட்டியுடன் நாமும் தண்டனை அடைய வேண்டும்.

மேலும், நாம் இருவரும் ஒருவரை ஒருவர்  ஏமாற்றவே முயற்சிக்கிறோம் அதனால், தான் நமக்கும் மேலே ஒரு பாட்டி நம்மை ஏமாற்றிவிட்டது.

இனியாவது நாம் திருந்தி அவரவர் ஊர் சென்று உழைத்து குடும்பம் நடத்துவோம்.

இனியும் நாம் திருந்தவில்லை என்றால் நாம் மனிதர்கள் இல்லை. பட்ட கஷ்டங்கள் உழைப்பின் உண்மையை உணர்த்திவிட்டது.

நமக்காக நாம் உழைத்திருந்தால் கூட முன்னுக்கு வந்திருக்கலாம். ஏன் திருடி நாமும் கஷ்டப்பட்டு, பிறரையும் கஷ்டப்பட வைக்க வேண்டும் என்றான் கந்தசாமி.

நானும் திருட மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன் இனி உழைத்து வாழ்வேன் எனக் கூறிய மாடசாமி.

கந்தசாமியிடம்  விடை பெற்று தனது ஊருக்கு செல்லலானான்.

பாட்டி நம்மை ஏமாற்றினாலும் நமது தவறை  உணர வைத்து விட்டாள். என எண்ணியபடி இருவரும் அவரவர் இல்லம் சென்றார்கள். என தாத்தா கதை சொல்லி முடித்தார்.

சுமித்ரா பாத்தியா ஒருவரை நாம் ஏமாற்ற நினைத்தால் நம்மை விட வலிமை மிக்கவன் நம்மை ஏமாற்ற முற்படுவான். நாம் நல்லவர்களாக இருந்தால் நமக்கு எந்த துன்பமும் வருவதில்லை.
என்றார் தாத்தா.

“இனி அப்படி செய்ய மாட்டேன் தாத்தா” என்றாள் தன் தவறை உணர்ந்த சுமித்ரா.

கதை முடிந்து எல்லோரும் அவரவர் வீட்டிற்குச் செல்ல எழுந்தார்கள்.

கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply