9-ஏமாற்றுபவன் ஏமாறுவான்
நரியும் ஒரு குகைக்குள் கூட்டிச் சென்றது. அந்த குகையில் ஒரு பக்கம் தங்க காசுகள். மறுபக்கம் நெல், பருப்பு போன்ற உணவு வகைகள். மற்றொரு பக்கம் பணம், நகைகள் இப்படி ஏராளமாக குவிந்து கிடந்தன.
இதைப் பார்த்த இருவரும் என்ன ஏது என்று அறிய முடியாமல் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றனர்.
முழு நூறு ரூபாய் கூட இருவரும் பார்த்ததில்லை. இவ்வளவையும் பார்த்தவுடன் பயம் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது.
தன் மகளை நரிக்கே கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் ராமசாமி.
பிறகு என்ன… நரிக்கும், ரமாவிற்கும் காட்டில் ஆடல், பாடலுடன் திருமணம் நடந்தது.
சில நாட்கள் தங்கினார் ராமசாமி. நரி தன் மகளை நல்ல முறையில் வைத்திருப்பது கண்டு சந்தோசத்தில் ஊருக்கு செல்ல கிளம்பினார்.
இருங்க மாமா என்று நரி உள்ளே போய் பூசணி விதைகள் கொஞ்சம் எடுத்து வந்து கொடுத்தது. இதை வைத்து சந்தோசமாக இருங்கள். என அனுப்பி வைத்தது.
ராமசாமிக்கோ மிகவும் ஏமாற்றமாக போய் விட்டது. இவ்வளவு பொன், பொருள் இருக்கிறதே, அதை எல்லாம் கொடுக்காமல் இந்த பூசணி விதையை கொடுக்கிறதே, என மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் சொல்லாமல் வீட்டிற்கு சென்றார்.
தன் கணவர் மட்டும் வந்திருக்கிறாரே மகள் எங்கே என வாசலில் போய் பார்த்தாள் ராமசாமியின் மனைவி ரமணி.
ரமணி உன் மனதை தேற்றிக் கொள். நான் சொல்வதைக் கேட்டு துயரப் படாதே என்றவர்…
நடந்தவற்றை எல்லாம், சொல்ல ஆரம்பித்து பூசணி விதையை கையில் கொடுத்து முடித்தார்.
“அடப் பாவி மனுசா…” என் பெண்ணை இப்படி நரியிடம் விட்டு விட்டு எனக்கு கதை வேறு சொல்லுகிறாரே என்ற ஆத்திரத்தில்….
கையில் கொடுத்த பூசணி விதையை தூக்கி வீட்டின் பின்புறத்தில் எறிந்தால் ரமணி.
வீசிய பூசணி விதைகள் சில நாட்களில் முளைத்து நிறைய காய் காய்த்தது.
சாப்பாட்டிற்கு ஒன்றும் இல்லாததால் வேறு வழியே இல்லாமல் பூசணிக்காய் ஒன்றை பறித்து சென்று செட்டியார் வீட்டில் இரண்டு ரூபாய்க்கு விற்று அரிசி, பருப்பு எல்லாம் வாங்கி வந்து சமையல் செய்து சாப்பிட்டார்கள்.
பூசணிக்காயை வாங்கிய செட்டியார் தன் மனைவியிடம் கொடுத்தார்.
அவளும் அதை வாங்கி நறுக்கினாள். உள்ளே விதைக்குப் பதில் அத்தனையும் தங்க காசுகள்.
ஓடி வந்து செட்டியாரிடம் காண்பித்தாள்.
இதை பார்த்த செட்டியார் ராமசாமியை வரவழைத்தார். உன் வீட்டில் காய்க்கும் பூசணிக் காய் எல்லா வற்றையும் என்னிடமே கொடுத்து விடு. இந்த ஐம்பது ரூபாய் என அட்வான்சாக கொடுத்து விட்டார்.
நல்ல மகராசன் எவ்வளவு பெரிய மனசு என ராமசாமியும் அவன் மனைவியும் புகழ்ந்து கொண்டார்கள்.
காய்க்கும் காய்களை எல்லாம் பிடிங்கி செட்டியாரிடமே கொடுத்து விட்டார்கள்.
கொடி வாட ஆரம்பித்தது கடைசியாக ஒரு காய் மட்டும் சூம்பி போய் இருந்தது. இதை எப்படி செட்டியாரிடம் கொடுப்பது நாமே சமைப்போம் என நினைத்தாள் ரமணி.
பூசணிக் காயை பறித்து வெட்டினாள். பார்த்தவள் வாயடைத்துப் போனாள். அதில் விதைக்கு பதில் தங்க காசுகள்.
தன் கணவரிடம் இதை காண்பித்தாள். நமக்கு நரி மருமகனாக வந்தாலும் நமக்கு நன்மையே செய்து இருக்கிறார். இது நமக்குத் தெரியாமல் போய் விட்டது என்று கூறினாள்.
செட்டியார் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார் என இருவரும் வருந்தினார்கள்.
இருந்த தங்க காசுகளை விற்று கொஞ்ச நாள் வாழ்க்கையை ஓட்டினார்கள்.
ஒரு நாள் தன் மகளைப் பார்த்து வருவதாக கூறிவிட்டு ராமசாமி காட்டை நோக்கி நடந்தார்.
தன் மகள் இருக்கும் குகைக்கு வந்தார்.
அங்கு தன் மகள் சந்தோசமாக இருப்பது கண்டு ஆனந்தப் பட்டார் ராமசாமி.
மகளும், மருமகன் நரியும் நன்கு உபசரித்தார்கள்.
நரி, மாமா நீங்கள் வசதியாக இருப்பீர்கள் என நினைத்தேன். முன்பு பார்த்தது போல் தான் இருக்கிறீர்கள். நான் கொடுத்த விதைகள் முளைத்து காய்த்ததா? என கேட்டது.
அதை ஏன் கேட்கிறீர்கள்.. என்று ஆரம்பித்தவர் மனைவியிடம் கொடுத்தது முதல், கடைசியாக தங்க காசு பார்த்த விபரத்தையும், தான் ஏமாற்றப் பட்டதையும் சொல்லி வருந்தினார்.
கவலைப் படாதீர்கள் மாமா இப்போது ஒரு பெட்டி தருகிறேன். அதை வைத்து நீங்க மட்டும் இல்லை எத்தனை பேர் வந்தாலும் வயிறார சாப்பிடலாம் கொண்டு போங்கள். என்ற நரி ஒரு பெட்டியை கொடுத்து அதை எப்படி பயன்படுத்துவது என சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தது.
ராமசாமியும் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
தன் மனைவியை அழைத்து அருகில் அமரச் செய்து. தன் மருமகன் கொடுத்த பெட்டியை திறந்தார்.
எங்களுக்கு அறு சுவையுடன் சாப்பாடு கொண்டு வாருங்கள், என்றார் ராமசாமி.
உடனே, பெட்டிக்குள் இருந்து பல பதுமைகள் வந்தன. ஒன்று இலை போட்டது, மற்றொன்று தண்ணீர் தெளித்தது, ஒரு பதுமை இனிப்பு வைத்தது, பொரியல், சாப்பாடு என அடுத்தடுத்து வந்து திக்கு, முக்காட வைத்துவிட்டது. எங்குமே சாப்பிட்டு இருக்காத ருசியுடன் சமையல் இருந்தது.
இருவரும் சாப்பிட்டு முடித்த உடன் ஒரு பதுமை தாம்பூலம் மடித்துக் கொடுத்தது. பின் எல்லா பதுமைகளும் பெட்டிக்குள் சென்று மறைந்தன.
ராமசாமியும் திருப்பதியுடன் பெட்டியை மூடி வைத்தார்.
ரமணிக்கு ஆச்சரியம். இது உண்மையா! அல்லது கனவா! என தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
“ரமணி…ஏய்… ரமணி” என சத்தமாக கூப்பிட்ட பின் தான் சுய நினைவுக்கு வந்தாள் ரமணி.
“ எப்படி முருகன் மருமகன் விருந்து சாப்பாடு போட்டிருக்கிறார் பார்த்தியா?” என்றார்.
ஆமாங்க! என்னால் நம்பவே முடியவில்லை. நம்மை யாரும் ஏமாற்ற முடியாதுங்க என சந்தோசப் பட்டாள் ரமணி.
தன் மருமகன் கொடுத்த பெட்டி பற்றி தன் பக்கத்து வீட்டுக் காரர்களிடம் சொல்லி பெருமைப் பட்டாள் ரமணி.
அவர்களுக்கும் சாப்பிட வேண்டும் போல் ஆசையாக இருந்தது. ரமணியிடம் சொன்னார்கள்.
அதற்க எண்ண, என்னுடன் வாருங்கள் என அழைத்து போய் சாப்பிடச் சொன்னாள்.
அவ்வளவுதான். அந்த ஊரில் எல்லோருக்கும் இதே பேச்சு தான். பதுமைகள் வந்து சாப்பாடு கொடுப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனக் கூறி வியந்தனர்.
“ மருமகன் நரியாக இருந்தாலும் இப்படி மருமகன் யாருக்கு கிடைக்கும் என”ஆள்… ஆளுக்குப் பேசினார்கள்.
இந்த பேச்சு செட்டியார் காதிலும் விழுந்தது. அவருக்கு ஆசை தலைக்கேறியது.
சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் செட்டியார் கடைப் பக்கமாக ராமசாமி சென்று கொண்டிருந்தார்.
இதை கவனித்த செட்டியார், “ராமசாமி.. ஓ.. ராமசாமிஇங்கே வாய்யா!” எங்களை எல்லாம் மறந்து விட்டாயா! என்னமோ… ஒரு மாயப் பெட்டி
இருக்குதாமே.எங்களை எல்லாம் சாப்பிட கூப்பிட மாட்டாயா? “ என கேட்டார்.
செட்டியாரே விரும்பி கேட்கும் போது மறுக்க முடியாமல். “நாளைக்கு வாருங்கள் எனச் சொல்லி விட்டு வந்தார்” ராமசாமி.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்