9-ஏமாற்றுபவன் ஏமாறுவான்
உம்…உம்… என கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் ரமா.
அங்கு வந்து அப்பளக் குடுமி தாத்தா. ஏன்? ரமா அழுது கொண்டு இருக்கிறாய் என அன்புடன் கேட்டார்.
ம்…ம்..என தேம்பிக் கொண்டே “தாத்தா… தாத்தா என்னுடைய பேனாவை எடுத்துக் கொண்டு அவளுடையது என்று சொல்கிறாள் இந்த உமா” என அழகைவுடன் தட்டுத் தடுமாறி கூறி முடித்தாள் ரமா.
உமா…உமா… என கூப்பிட்டார் தாத்தா.
என்ன! தாத்தா என அருகில் வந்தாள் உமா.
ரமாவுடைய பேனாவை உன்னுடையது என்கிறாயா! என கேட்டார் தாத்தா.
இல்லை தாத்தா! அது வந்து… என்னுடையது என வார்த்தைகள் தடுமாற கூறினாள் உமா.
அப்போது அங்கு ஓடி வந்த லலிதா, உமா நீ உட்கார்ந்த இடத்தில் கிடந்தது. என பேனாவை நீட்டினாள் லலிதா.
உமா வாங்க கையை நீட்டினாள்,
தாத்தா இந்தப் பேனா தான் என்று ரமா கத்தினாள்.
உமா கண்கலங்க தாத்தாவைப் பார்த்தாள்.
பொய்யும், புரட்டும் நீண்ட நேரம் நிற்காது என்ற தாத்தா. இனி இப்படி செய்யக் கூடாது என்றவர்.
பேனாவை வாங்கி ரமாவிடம் கொடுத்தார்.
எல்லோரும் உட்காருங்கள் ஒரு கதை சொல்கிறேன் என சொல்ல ஆரம்பித்தார் தாத்தா.
ஒரு ஊரில் ராமசாமி என்ற ஏழை தொழிலாளி வாழ்த்து வந்தார்.
ராமசாமி தன் தங்கையின் வீட்டிற்கு தன் மகள் ரமாவுடன் வந்து பார்த்துவிட்டு தனது ஊருக்கு பயணம் ஆனார்.
பஸ்,கார் எல்லாம் அந்த கிராமத்திற்கு வராது. எனவே கால்நடையாக வயல் காட்டுப் பக்கமாக தகப்பனும், மகளும் நடந்து கொண்டு இருந்தார்கள்.
ரமாவிற்கு கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.
வலி பொறுக்க முடியாமல் அப்பா கால் வலிக்கிறது.. அப்பா என அழ ஆரம்பித்து விட்டாள்.
ரமா சிறிது தூரம் நடந்தாள். பின் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள் ராமசாமி என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டே நடந்து வந்தார்.
ரமா அழுகையை விடுவது போல் தெரியவில்லை. சின்னப் பெண் என்றாலும் தூக்கிக் கொண்டு வரலாம். வயதுப் பெண்ணை என்ன செய்வது?
“ரமா நீ சின்ன பெண் அல்ல அழுவதற்கு. இப்படி அழுது கொண்டு இருந்தால் நரிக்கு கல்யாணம் செய்து கொடுத்து விட்டு போய் விடுவேன்” என்று மிரட்டினார்.
நரி என்றாலே ரமாவிற்கு பயம்.
சிறு வயதில் ஒரு முறை தோட்டத்தில் வளர்த்த கோழியை கழுத்தில் கவ்வி இழுத்துக் கொண்டு போனதையும். கோழி தன் உயிரை காப்பாற்ற முடியாமல் கத்தியதையும், இன்று நினைத்தாலும் பயத்தில் உடல் நடுங்கியது.
சிறிது நேரம் கால் வலியை சகித்துக் கொண்டு நடந்து வந்தாள்.
பின் மீண்டும் கால் வலிக்கவே அழ ஆரம்பித்து விட்டாள்.
ராமசாமி.. ரமா.. உன்னை நரிக்கு கல்யாணம் செய்து கொடுக்கப் போகிறேன் பார்.. என சொல்லிக் கொண்டே வந்தார்.
இவர்கள் உரையாடலை சற்று தூரத்தில் இருந்து ஒரு நரி கேட்டுக் கொண்டே வந்தது.
ராமசாமி சும்மா மிரட்டுகிறார் என்பது தெரியாத நரி. உண்மையில் நமக்கு ரமாவை கட்டிக் கொடுக்கப் போகிறார் என நினைத்து பின்னாலேயே வந்து கொண்டு இருந்தது.
இன்னும் சிறிது தூரம் நடந்தால் ஊர் வந்து விடும். இதை கவனித்து நரி.
இவளை விட்டால் நமக்கு இப்படி பெண் கிடைக்காது என நினைத்தது.
நரி வேகமாக ராமசாமியின் முன் ஓடி வந்து வழியை மறித்தபடி நின்றது.
மாமா பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டு ஊருக்குள் போக போகிறீர்களே இது என்ன நியாயம்? என நரி கேட்டது.
இதை சற்றம் எதிர் பார்க்காத ராமசாமி என்ன சொல்வது என தெரியாமல் வாயடைத்துப் போனார்.
ரமாவோ நரியை மிக அருகில் பார்த்த பயத்தில் வேர்த்து விறுவிறுத்து நின்றாள்.
நரியே மீண்டும் பேச ஆரம்பித்தது. மாமா! என்னுடன் வாருங்கள். என அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடக்க ஆரம்பித்தது.
“தப்பிக்க முடியாது” என இருவரும் நடப்பது நடக்கட்டும் என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நரியின் பின் நடக்க ஆரம்பித்தார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.