மன்னர் தந்த பரிசுகளுடன் பெரிய வீட்டிற்குப் போனார்கள் கமலாவும், ராமனும். பால் மாடு, ஆடை, அணிகள், நல்ல உணவு என்று குறை இல்லாமல் வாழ்ந்தார்கள்.

இதைப் பார்த்த அடுத்த வீட்டு கிழவிக்குப் பொறாமையாக இருந்தது.கமலாவின் பெருமைகளைக் குறைக்க ராமனை கொல்வதே சிறந்தது என முடிவு செய்தான்.

“ராமனிடம், ராமா எனக்கு வயதாகிவிட்டது. தள்ளாமையாய் இருக்கிறேன். நகரத்தில் இருக்கும் என் பேத்தி கர்ப்பமாய் இருக்கிறாள். அவளுக்கு அப்பம் என்றால் உயிர் அப்பம் சுட்டுத் தருகிறேன் கொடுத்து விட்டு வருகிறாயா?” என்று கேட்டாள்.

“ ஆகட்டும் பாட்டி… எனக்கும் வழியில் செல்லும்போது சாப்பிடுவதற்கு அப்பம் தர வேண்டும். அப்பம் என்றால் எனக்கும் பிடிக்கும்” என்றான் ராமன்.

உனக்கு நூறு அப்பம் தருகிறேன் என்றவள், அப்பம் சுடச் சென்றாள் மாவில் கொடிய விஷம் கலந்து அப்பம் செய்து ராமனிடம் கொடுத்தாள். ராமனும் வழிலையே இறந்து விடுவான். ஊர் போய் சேரமாட்டான் என்பது அவளது நம்பிக்கை.

அதனால், எல்லாமே நஞ்சு கலந்த அப்பங்கள். ராமனுக்கு எல்லாஅப்பங்களையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வர வேண்டும் என்பதற்காக நெய்யில் சுட்டுக் கொடுத்தாள்.

ராமனும் அப்பக் கூடையுடன் பயணப்பட்டான். காட்டு வழியில் நடந்தான். நல்ல வெயில் ஒரு மரத்தடியில் இளைப்பாறினான்.

  தூங்கி எழுந்து ஏதாவது சுனையோ, நதியோ தென்பட்டால் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியவன். அப்படியே தூங்கி விட்டான்.

அப்போது கொடிய கள்வர்கள் சிலர் அவ்வழியில் வந்தனர். அவர்களுக்கு பசி. ராமனின் அப்பம் மூட்டையில் நெய் கசிந்து மூக்கை துளைத்தது. கூடையைப் பிரித்து அப்பங்களைப் பங்கிட்டுத் தின்று முடித்தனர்.

அடுத்த நிமிடமே மயங்கிச் சாய்ந்தனர். அரை நொடியில் உயிரிழந்தனர். ராமன் உயிர் பிழைத்தான். வெயில் தணிய ராமன் எழுந்தான்.

அப்பக் கூடை காலியாகி கிடப்பதையும் சிலர் இறந்து கிடப்பதையும்  பார்த்த ராமனுக்கு கிழவியின் சூழ்ச்சியும் தனக்கு கடவுளின் கருணை கிடைத்ததையும் எண்ணி வியந்தான்.

பாட்டியின் சூழ்ச்சியை பேத்தியிடம் அம்பலம் ஆக்க வேண்டும் என ஊருக்குள் வந்தான்.

ஊர் எல்லையில் ஒரு பெரிய விளம்பரப் பலகை அதில் சில மனிதர்களின் படங்கள். கீழே இவர்கள் பெரும் கொள்ளையர்கள். இவர்கள் கொலை, கொள்ளை என்று செய்யும் அட்டகாசங்கள் பொறுக்க முடியவில்லை. இவர்களை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து தருபவர்களுக்கு பாதி ராஜ்ஜியமும், மன்னர் மகளும் பரிசாக வழங்கப்படும் என்று எழுதி இருந்தது.

அதைப் படித்த ராமன் படங்களைப் பார்த்ததும் திகைத்தான்.
அவர்கள் தான் அப்பங்களை திருடித் தின்று இறந்தவர்கள்.

தீட்டிய அரிவாள் ஒன்று வாங்கிக் கொண்டு, வந்த வழியே திரும்பினான்.

வீரன் போல செத்து கிடந்த கொள்ளையர்கள் தலையைவெட்டி சாய்த்தான். அவைகளை கோணிகளில் போட்டு கட்டி சுமந்து வந்து அரண்மனையை அடைந்தான்.

கள்வர்களின் தலையைப் பார்த்த மன்னர் திகைத்தார். அசடு போல் இருக்கும் இவன் இத்தனை பேருக்கும் எமனா? என்றால் நம்ப முடியவில்லை. ஆனால், எதிரில் இருந்த தலைகள் நிஜம் என்று உணர்த்தின வாக்கு தந்தபடி பாதி அரசைக் கொடுத்தார் மன்னர்.

ஆனால், மகளை மணம் முடிப்பதற்கு முன் ஒரு சோதனை செய்வது என தீர்மானித்தார் அரசர்.

அந்த நகரத்தில் ஒரு பெரிய ஏரி. அதற்குள் ஒரு முதலை இருந்தது. ஏரியின் அருகில் ஒரு பெரிய நாவல் மரம் நின்றது. அதன் பழத்தை சாப்பிடும் ஆசையில் சிறுவர்கள் அந்த மரத்திற்கு வருவார்கள். அந்த முதலே அவர்களின் இரையாக்கிக் கொண்டு வந்தது. 

பயங்கரக் கொள்ளையர் தலையை சீவியவனுக்கு இந்த முதலை ஒரு பொருட்டல்ல. முதலையை எங்கள் கண்ணெதிரில் கொன்று விட்டால் என் மகளை உனக்கு மணம் செய்து வைக்கிறேன் என்று ராமனுக்கு நிபந்தனை விதித்தார் மன்னர்.

இப்போது பின்  வாங்கினால் மன்னர் சந்தேகப்படுவார். அதோடு பாதி ராஜ்ஜியமும் போய்விடும். அவமானப்படவும் நேரிடும் இதுவரை நடந்ததெல்லாம் நம் செயலா. இதுவரை துணை வந்த கடவுள் இதற்கும் கை கொடுப்பார் என இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு கூரிய ஆயுதங்களான குத்தீட்டிகள், அரிவாள் என பலவற்றை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டு ஏரிக் கரையை அடைந்தான் ராமன். 

அவனைப் பார்த்த முதலை “இன்று நமக்கு நல்ல விருந்து”
எப்போதாவது பையன்கள் வருவார்கள் இப்போது கொழுத்த ஆள் வந்திருக்கிறான் என சந்தோசத்தில் வாலை வீசி நீந்தி கரையோரம் வந்தது.

மக்களும், மன்னனும் அமைச்சர்களும் வெகு தூரம் தள்ளி நின்று நடப்பதை கவனித்தார்கள்.

ராமனும் பயந்தபடி நாவல் மரத்தில் ஏற ஆரம்பித்தான். மக்கள் இவன் மரத்திலிருந்து அம்பெய்யப் போகிறான் என்று நினைத்தார்கள்.

முதலை வேகமாக மரத்தடிக்கு வந்து விடவே ராமன் நடுங்கிய வேகத்தில் குத்தீட்டி ஒன்று திறந்தபடி வந்த முதலையின் வாயில் விழுந்தது.முதலை சிவலோக பதவி அடைந்து விட்டது.

இது தெரியாத ஜனங்கள் இவன் ஆயுதம் எறிந்ததாக எண்ணி கோஷமிட்டனர். முதலை துடிக்கவும் அதன் மேல் மேலும் குத்தீட்டிகளை எறிந்து கொண்டான் ராமன்.

மக்கள் “முதலைக்கு  மறலி” வாழ்க என இவனைக் கொண்டாடினர். மன்னர் தன் மகளை ராமனுக்கு வெகு விமர்சையாக மணம் முடித்து வைத்தார்.

அப்பய்ய ராஜன் என்பவன் அடுத்த நாட்டரசன். அவன், இவன் மருமகன் ராமனின் பெருமைகளைக் கேள்விப்பட்டு பொறாமை கொண்டு இவன் மீது படையெடுத்து வந்தான்.

இதைக் கேள்விப்பட்ட அரசன் ராமனை அழைத்து “கொள்ளையர் தலையை சீவியது போல்,கொடிய முதலையைக் கொன்றது போல், கடலைப் போன்ற அப்பய்யன்  படைகளை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

நாய் வேடம் போட்டுக் கொண்ட பின் குரைக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு மன்னரின் படையை கண்டு பயப்படுவதை விட எதிர்த்துப் போர்க்களத்தில் மடிவது என முடிவு செய்தான்.

“வேகமாகச் செல்லக் கூடிய ஒரு குதிரையில் நல்ல நூல் கயிறுகளைக் கொண்டு என்னை கட்டி விடுங்கள்” என்றான் ராமன்.

மாப்பிள்ளை மகா சூரன் அவர் எது செய்தாலும் ஏதாவது காரணம் இருக்கும் என்ற உறுதியுடன் இருந்த மன்னர் அப்படியே செய்ய காவலர்களுக்கு ஆணையிட்டார்.
மன்னரிடம் முரட்டு பஞ்ச கல்யாணி குதிரை ஒன்று இருந்தது. அது அடங்காப்பிடாரி. ஆதலால், யாருமே அதில் சவாரி செய்வதில்லை.

அதில் ராமனை வைத்து நூல் கயிற்றால் கட்டி கையில் ஒரு கத்தியுடன் அனுப்பிவிட்டனர். மதம் கொண்ட குதிரை பறக்கத் தொடங்கியது.

இன்று தான் வாழ்வில் கடைசி நாள் என முடிவு செய்த ராமன். கமலாவிற்கு செய்தி சொல்லாததற்கு இந்த தண்டனை வேண்டியதுதான் என நினைத்தான்.

கடவுள் விட்ட வழி என குதிரையின் பிடரியை கெட்டியாய்  பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply