ஆத்திசூடி கதைகள்
55- தக்கோ னெனத்திரி

பொங்கல் விடுமுறை முடிந்து அப்பா வேலைக்கு கிளம்பி விட்டார். அக்கா பள்ளிக்கு போய்விட்டாள்.

அம்மா எல்லாரையும் அனுப்பிவிட்டு ஓய்வாக  அமர்ந்து இருந்தாள்.

அமுதா, மட்டும் விளையாட யாரும் இல்லாமல் தனியாக விளையாடியவள்.. கண்ணுக்கு எறும்பு வரிசையாகச் செல்வதைக் கண்டு வியப்பாக இருந்தது.

கரும்பு வெட்டி சாப்பிட்டதை ஒரு கூடையில் அம்மா போட்டு வைத்து இருந்தார்கள். அந்த கரும்பில் சிறு… சிறு துண்டுகளை எறும்பு வரிசை… வரிசையாக எடுத்துச் செல்வதைப் பார்த்த அமுதா வியப்பில் இருந்து விடுபடவே இல்லை.

இந்த சின்னஞ்சிறு எறும்புக்கு இவ்வளவு ஒழுங்காகச் செல்ல யார் சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். வியப்பு மேலிட அம்மாவிடம் போய் கேட்டாள் அமுதா.

அம்மாவும் குழந்தை கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாள்.

இந்த சிறிய எறும்பு மழைக்காலத்திற்கு தேவைக்கான உணவை தனது கூட்டத்துடன் சென்று சேகரித்து வைத்துக் கொள்ள ஒழுங்காக சிறுக… சிறுக சேமிக்கிறது.

நேர்மையும், ஒழுக்கமும் இருப்பதால் மழைக்காலங்களில் அமைதியாக சேமித்த உணவை உண்டு வாழ்கிறது.

அது போல், நாமும் ஒழுக்கத்துடனும், நேர்மையாகவும் பெரியவர்கள் வாழ்த்தும்படி வாழ வேண்டும். என்று அம்மா சொன்னார்கள்.

இதைக் கேட்ட அமுதா! அம்மா நானும் சுறுசுறுப்பாக உழைத்து  ஒழுக்க நெறியுடன் வாழ்வேன் அம்மா என்றாள்.

இதைத்தான் புலவர் ஔவையாரும் “தக்கோ னெனத்திரி” என்று கூறியுள்ளார்கள். பிறர் உன்னை யோக்கியன் என்று சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும். என்று கூறி இருக்கிறார்கள் என்றாள் அம்மா. 

Share.

Leave A Reply