45. புளி

    புளியமரம்  நிழல் கொடுப்பதுடன் புளியங்காய், புளியம்பழம்  கொடுத்து உதவுகிறது .புளியம் பூ சிறியதாக அழகாக  இருக்கும். இதை சாப்பிட்டால் புளிப்பு சுவை இருக்கும். புளியம்பிஞ்சு அளவான புளிப்பில் இருப்பதால் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தது . புளியங்காய் கல்  எடுத்து எறிந்து பறிப்பதும், மரத்தில் ஏறி பறித்து உண்பதும் சிறுவர்களுக்கு விளையாட்டும்  சந்தோசமும் கூட. இது அவர்களது உடற்பயிற்சிக்குக்கூட காரணமாகிறது.

புளியங்காயுடன் உப்பு, மிளகாய்த்தூள்  வைத்து சாப்பிடுவார்கள் .பழமாக மாறும்போது   சேருபழம் என்பார்கள்.அது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும் .

மேல்தோல்  கூடுபோல் முதிர்ந்து உள்ளே பழம் தனியாக இருக்கும் புளியம்பழம்  தோல் நீக்கி விட்டு , புளியிலுள்ள கொட்டையை நீக்கி விட்டு பயன்படுத்துவார்கள் .புதுப்புளி  இனிப்பாக இருக்கும். நாள்பட நாள்பட புளிப்பு சுவை கூடி விடும் .

 புளி இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. உப்பு, புளி, காரம்   சேர்ந்தால்தான் குழம்பின் சுவை கூடும் .

    சிலருக்கு  புளிப்புச்சுவை  சுருக்கென்று இருக்க வேண்டும் . சிலருக்கு சப்பென்று இருக்க  வேண்டும். எப்படியோ புளி சேர்க்க வேண்டும் .

அள்ளுனு சுள்ளுனு .  

அகப்பை துனுக்குனு

சாப்பிடுவேன் என்பார்கள்

எல்லாமே அதாவது , புளிப்பு , உப்பு காரம் தூக்கலாக  சாப்பிடுவார்கள் என்பது பொருள் .

புளி நாவிற்கு சுவை சேர்க்கும்  தான் ஆனால் புளி ரத்தத்தை சுண்ட வைக்கும் தன்மையுடைத்து. எனவே குறைத்து சாப்பிடுவது நலம் தரும் .

புளிப்பு சுவையை கட்டுப்படுத்தத்   தெரிந்தால் நோயை வென்றவர்களாகலாம் . உப்பு, புளி, காரம் இவை மூன்றுமே அளவுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் ஏற்படும். எந்த நோயும் நெருங்கப் பயப்படும் .

நோயைக் கண்டு நாம் பயப்படுவது போய் நோய் நம்மைக்  கண்டு பயப்படும் . புளிப்பு குறைவாக அளவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் பளபளப்பாகத் தோன்றும் .

வில்வமரத்தின் பூக்களுடன் புளி சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் குடல் வலிமை பெரும். புளிய இலை கொழுந்தை  இரு கண்களின் மேல் வைத்துக் கட்டி ஒருமணி நேரம் கழித்து எடுத்தால் கண் சிவப்பு மாறும் .புளிய இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து இளஞ் சூட்டில் ஒத்துக் கொடுத்தால்  கால், கை வீக்கம் குறையும்.

புளியமரத்துப் பட்டையை  எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் .காயங்கள் ஏற்பட்டு புண் ஏற்பட்டால் அதன்மீது பொடியைத்  தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும் .

46.முருங்கை         

” பிள்ளையை அடித்து வளர்க்கணும்

முருங்கையை ஒடித்து வளர்க்கணும் ” என்பார்கள்

முருங்கையை ஒடிக்காமல் வளர்த்தால் உயரமாக வளர்ந்து உதவாமல் போய்விடும் என்பதற்காகத்தான்  ஒடித்து வளர்க்க வேண்டும் என்பார்கள் .மேலும் ஒடிக்கும் போது கீரையை சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் .

முருங்கையில் பல மருத்துவக் குணங்கள் இருக்கிறது .மிக எளிதான மருத்துவமும் கூட எப்படி என்பதைப் பார்ப்போம்.

வயிற்று வலி  வந்தால் முருங்கை இலையை  சிறிது உருவி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு சிறிது நீர் ஊற்றி மற்றொரு கையையும் உள்ளங்கையினால் நன்கு கசக்க வேண்டும் .அப்போது வரும் முருங்கை சாற்றை வயிற்றில் தடவி விட்டால் சிறிது நேரத்தில் வயிற்று வலி நீங்கி விடும் .

சற்று அதிகமான வயிற்று வலி  என்றால் முருங்கை இலை சாற்றை கசக்கி எடுத்து குடித்துவிட்டு கசக்கிய முருங்கை இலையை வயிற்றில் தடவிக் கொண்டால்  சிறிது நேரத்தில் வயிற்று வலி முற்றிலும் குணமாகும் .

சளிப்பிடித்தால்  முருங்கை பிஞ்சை சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன்  கலந்து மூன்று நாட்கள் காலை, மாலை இரண்டு நேரம் குடித்து வந்தால்  சளி தொல்லையில் இருந்து விடுபடலாம் .

தோலில் படைபோன்று வந்தால் முருங்கை இலையுடன் சிறிது உப்பு சேர்த்து கசக்கி படை உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் எடுக்கும்.பின் சிறிது சிறிதாக மறைந்துவிடும். மறையும் வரை தொடர்ந்து தேய்க்க வேண்டும் .

முருங்கைப் பூக்களைப்  பறித்து சுத்தம் செய்து நீர் விட்டு காய்ச்சி 1/2 டம்ளர்  அளவு எடுத்து சிறிது பால் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தியாகும் .

முருங்கை கீரையை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பிரசவ வலி குறையும் .காலில் ஏற்படும் வீக்கம் குறையும் .

குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் மார்கள் முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் பால் சுரக்கும். முருங்கை கீரையில் இரும்புச் சத்து  இருக்கிறது .

முருங்கைக்காய்   எளிதில் சீரணமாகும் .நார் சத்து நிறைந்தது .சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள் .

முருங்கைகாய்  பொரியல், அவியல் , மண்டி , குழம்பு , வற்றல் இப்படி உணவில் சேர்த்து உண்ணலாம் .

குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை முருங்கை இலைச்சாறு கொடுத்தால் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்படும் .

=====================மருத்துவம்  தொடர்ச்சி வரும் )

Share.

Leave A Reply