முன்கதை சுருக்கம்
கோடை விடுமுறைக்கு கிராமத்தில் உள்ள தத்தா வீட்டிற்கு வரும் அவரது பேரன்கள் இராஜா, ரகு கிராமிய சூழ்நிலையில் பலவிதமான சம்பவங்களைக் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் .
வியப்புதரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் அவர்கள் அங்குள்ள மலை மீது ஏறி அங்குள்ள மர்மங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். மலைமீது ஏறுவதுகடினமான செயல் என்பதால் ,அவர்கள் அதில் இருந்து பின்தங்கி விடாமல் மேலே செல்வதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து தங்களது நம்பகமான வேலையால் மாரியப்பனுடன் ஆலோசிக்கிறார்கள்.
மலை அடி வாரத்தில் உள்ள கருப்பசாமி கோவில் பற்றி அங்குள்ள வயதான ஒருவர் கூறும் சம்பவங்களைக் கேட்டு மெய் மறந்து வியந்து போகிறார்கள். அங்குள்ள வழிபாட்டு முறைகள் மிகவும் வித்தியாசமாக இவர்களுக்குத் தெரிகிறது. இதுகுறித்து மாரியப்பனிடம் கேட்கவேண்டும் என்று இராஜா மனதிற்குள் நினைத்துக் கொண்டான் .
இராஜா ,அந்தப்பெரியவரிடம் ,” ஐயா நீங்கள் இங்கே தான் வாழ்ந்து வருகிறீர்கள் .இந்த மலை மீது என்ன இருக்கிறது ? இதற்கு யாரும் மேலே ஏன் செல்வதில்லை ? நீங்கள் எப்போதாவது இந்த மலை மீது ஏறிப் போய் இருக்கிறீர்களா ? என்று கேட்டான்.
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத அமாவாசை என்ற அந்த ஆடு மேய்ப்பவர் , இந்தக்கேள்விக்கு உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம் அமைதியாகவே இருந்தார்.
சிறிது நேரம் கழித்து.” இந்தமலை மீது உனக்கு என்ன ஆர்வம் தம்பி” என்று கேட்டார்.
ஐயா ,”இந்த மலை பற்றி பலரும் பலவிதமான கதைகளைச் சொல்கிறார்கள். அது பற்றி உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது ஆனால் சரியான வழிகாட்டி இல்லாமல் இந்த மலைமீது ஏறிச் செல்வதற்கு யோசனையாக உள்ளது.நீங்கள் உங்களுக்கு தெரிந்தவைகளை கூறினால் , நாங்கள் மாரியப்பன் மாமாவுடன் மேலே ஏறிச் சென்று பார்த்து வரலாம் என்று எண்ணுகிறோம்., என்றான் இராஜா.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இவர்களுடன் வந்த இவரது கிராமத்து நண்பர்கள் அங்குள்ள கிணற்றில் குதித்து குளித்து மகிழ்ந்தனர் .. அத்துடன் சிலர் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து கரும்பு ஒடித்துக் கொண்டு வந்தனர் .,
ஒன்றிரண்டு பேர் சோளக் கொல்லையில் இருந்து சோளத்தை பறித்து வந்து , காய்ந்த சருகுகளை எல்லாம் ஒன்றாகப் போட்டு நெருப்பு மூட்டி சோளக் கதிர்களை நெருப்பில் வாட்டி சாப்பிட்டனர் .இவற்றை எல்லாம் சாப்பிட கிராமத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்களுக்கு பழக்கம் இருந்தது .

இவற்றைஎல்லாம் பார்க்கும் இராஜா, ரகுவுக்கு வியப்பு தாங்கவில்லை.அவர்களும் சோளக்கதிர்களையும்,, கரும்பையும் அசை போட்டனர் .
அப்போது திடீரென்று மேகம் கருக்கத் தொடங்கி விட்டது .சற்றும் எதிர் பாராத விதமாக அங்கு மழை பெய்யத் தொடங்கி விட்டது. அமாவாசை உள்பட இராஜா, ரகு மற்றும் அனைவரும் பெரிய மரத்தின் அடிப்பகுதியில் நின்றனர்.
மரம் பெரிய குடைபோல் விரிந்து அடர்த்தியாக இருந்ததால் இவர்கள் மீது மழை தாக்கம் தெரியவில்லை. அப்போது புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் மே…மே…..என்று கத்தியபடி மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றன.
ஆனால் மலை மீது மழை பெரும் அளவில் பெய்ததை இங்கிருந்தே அவர்களால் காண முடிந்தது . அடிவாரத்தில் குறைந்த அளவு பெய்ததால் இவர்களுக்கு மழையின் தாக்கம் தெரியவில்லை .
அரை மணி நேரம் அளவுக்கு பலத்த மழை பெய்ததால் மலையின் ஒருபகுதியில் இருந்துமழைத் தண்ணீர் அடிவாரப் பகுதியில் பாய்ந்து ஓடி வந்தது .அத்துடன் மழையும் நின்று விட்டது .மழை நின்றும் தண்ணீர் வரத்து நிற்கவில்லை .
இப்போது அந்தப்பெரியவர் ,”இராஜா , ரகு இருவரும் வாருங்கள். இந்த மலைக்கு மேல் செல்வதுமிகவும் ஆபத்தானது, .மலை ஏறுவதும் கடினம். நீங்கள் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டும் என்றால் தகுந்த துணையுடன் தான் செல்ல வேண்டும்….
….மலை மீது ஏற எந்தப்பக்கமும் சரியான வழியில்லை . வழிநெடுக பாறைகளும், மரங்களும், செடி கொடிகளும் உள்ளன. நீங்கள் மலை ஏற ஒரு வழி உள்ளது. அது மிகவும் சிறந்த வழி விரைவாகவும் மலை மீது ஏறி விடலாம்.
நான் தினசரி இங்கு தான் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பேன். நீங்கள் எப்போது மலை ஏற விரும்பினாலும் .உங்களுக்கு துணையாக உங்களது மாமா மாரியப்பனுடன் வாருங்கள். அப்போது நான் உங்களுக்கு மலை மீது ஏறுவதற்கான வழியைக் காட்டுகிறேன்.
மலை உச்சி மீது சில அபாயங்கள் உள்ளன.அங்கு சுனை ஒன்றும் உள்ளது .பேய், பிசாசு என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கிராமத்து மக்கள் இவைகளில் எல்லாம் நம்பிக்கை உள்ளவர்கள் . அதனால் இந்த முயற்சியில் எல்லாம் இறங்கவில்லை .

அதோடு மலை மீது சில ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அங்கு இருளடைந்தகோவில் உள்ளது.அந்த கோவில் உள் பகுதியில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் அவற்றை எடுக்க பலர் முயன்றும் இதுவரை அங்கிருந்து எந்தப் பொருளையும் எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை . மலை மீது உள்ள கோவில் கல் மண்டபத்தில் துணிச்சலாக சென்று யாரும் பார்த்தார்களா என்றும் தெரியவில்லை .
அங்குதான் இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய காலத்தில் விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதோடு அங்குள்ள கல் கோவில் உள்பகுதியில் சில ரகசிய அறைகளும் உள்ளன.
இந்த ரகசியங்கள் அனைத்தும் இங்குள்ள மக்களால் பேசப்படுகின்றன. எனக்கு நினைவு தெரிந்து எழுபது ஆண்டுகளில் இங்கு அவ்வப்போதுசிலர் வருகிறார்கள். ஆனால் மலை மீது ஏறியும் சென்று இருக்கிறார்கள். ஆனால் எதையும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை .
நீங்கள் இப்போது மலை மீது ஏறி பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் .அங்கே இருப்பவைகளைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் ? சரி வாருங்கள் , நான் மலை மீது ஏறுவதற்கான வழியை உங்களுக்கு காட்டுகிறேன்.
இதன் தொடர்ச்சி வரும்.