
முன்கதை சுருக்கம்
.
நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்களுடன் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்துள்ளார். சரவணன் மகன்கள் இராஜா, ரகு, கிராமத்தில் தங்கி கிராமத்து சிறுவர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு இருக்கும்போது அங்குள்ள ஒரு மலைக்குச் செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாகச் சொல்வதைக் கேட்டு அந்த மலைக்குச் சென்று பார்க்கிறார்கள். பலவிதமான கேள்விகளுக்கு அந்த மலையில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கிறார்கள்.
அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை சில அடையாளங்களைவைத்து தெரிந்து கொள்ளும் அவர்கள் அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள் .அதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா? என்பதை பார்க்கலாம்.
கல் மூக்கன் தன்னுடன் இருந்த கருப்பனிடம் கொல்ல ஆறுமுகம் பேயை ஒட்டிய கதையைச் சொல்லி முடித்தார்.. ஐயா ‘ கொல்லஆறுமுகம் ஐயாவும் நம்மோடு இருப்பது ரெம்ப நல்லது தான்” என்று கூறியபடி தலையாட்டினான் கருப்பன் .
கல்மூக்கன் மறுநாளைக்கு மலையடிவாரம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்..அங்குவந்த வேறு சில வேலையாட்களும் சில இடங்களில் இருந்து குறிப்பிட்ட காய்ந்த வரகுவைக்கோல், மற்றும் சில வகை காய்ந்த மூலிகை கொடிகளையும் சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து வைத்தனர்.
மறுநாள் காலையிலே முத்துச்சாமி மற்றும் அவரது ஆட்கள், மற்றும் பெயரன்கள் இராஜா, ரகு,, வேலையாள் அமாவாசை ஆகியோர் மலை அடிவாரம் செல்ல தயார் நிலையில் வந்தனர். அவர்களுடன் தண்ணீர், சாப்பிடும் பொருட்களுடன் அமாவாசையும் வந்து சேர்ந்தான். அங்கு வந்த கல் மூக்கன் , அவரது உதவியாளர் கருப்பன் ,இவர்களுடன் இராஜா, ரகு ஆகியோருக்குப் பாதுகாப்பாக மாரியப்பனும் சேர்ந்து கொண்டார். .
அவர்கள் அனைவரும் ஒரே குழுவாக மலையடி வாரம் புறப்படத் தாயாராகினர். அப்போது அங்குவந்த சில கிராமத்து இளைஞர்கள் துணைக்கு தாங்களும் வருவதாக குழுவில் இணைந்து கொண்டனர். ஆனால் முத்துச்சாமி அவர்கள் ஒருகுறிப்பிட்ட இளைஞர்களை மட்டும் வந்தால் போதும் மற்றவர்களை வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்..
அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்படி சிலர் மட்டும் அவருடன் செல்ல முன் வந்தனர்.
இதற்கிடையில் கொல்ல ஆறுமுகம் , அவருடன் எப்போதும் இருக்கும் சம்மட்டி வெள்ளையன் இருவரும் மிக அதிகாலையிலேயே புறப்பட்டு மலையடி வாரம் சென்று விட்டனர்..மலையடி வாரத்தில் ஆட்டுக்கார அமாவாசை முன்கூட்டியே அங்கே வந்து காத்து இருந்தார்..
அதிகாலை நேரம் கருமையாக காட்சி தந்த அந்தி வானம் தனது கருப்பு போர்வையை விலக்கிக்கொண்டு மெல்ல மெல்ல ஒளியை உமிழத் தொடங்கியது .நேரம் ஆக ஆக கீழ்வானத்தின் அனல் குழம்பில் இருந்து தனது சிவந்த பொன்னிற மேனியுடன் உயிர்த்தெழுந்தது போல் மேலே எழுந்தது சூரியன். மேலே எழுந்த சூரியனின் உடலில் இருந்து தோன்றிய பொன்னிறக் கதிர்கள் பரவிய இடம் முழுவதிலும் தகதக என மின்னிக்கொண்டு இருந்தது.
கிராமத்தில் இருந்து முத்துச்சாமி, கல் மூக்கன் மற்றும் சிலர் அப்போதுதான் மலைஅடிவாரத்தை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கிக்கொண்டு இருந்தார்கள்..
இந்த இடைப்பட்ட நேரத்தில் கொல்ல ஆறுமுகம், சம்மட்டி வெள்ளையன் , அமாவாசை ஆகியோர் அந்த மலையின் அடிவாரப்பகுதியில் மலையின் நுழைவு வாயிலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். வரகு வைக்கோல் மற்றும் மூலிகை செடிகளை மலையின் தீ வைத்து எரிப்பதன் மூலமே இப்போதைக்கு கீறல் போல் காட்சி அளிக்கும் இடங்களில் உள்ள மலையின் பாறாங் கற்களை அகற்ற முடியும் என்று நம்பி இருந்தார்கள்.
அப்போது ஆட்டுக்கார அமாவாசை ஒரு சந்தேகத்தை கொல்ல ஆறுமுகத்திடம் கேட்டு வைத்தார்.’ஐயா ஒவ்வொரு தடவையும் இது போல் மலைப்பாதையை உடைப்பதும் பின்னர் மீண்டும் அவற்றை சரி செய்வதும் சாத்தியமா? ” இதை விட எளிதான வழி ஏதாவது இருக்குமா ? மற்றவர்கள் கவனத்தை திருப்புவதற்காக அந்தக்காலத்தில் இப்படிசெய்து இருக்கலாமா ? என்ற ஐயத்தை கொல்ல ஆறுமுகத்திடம் கேட்டார்.
கொல்ல ஆறுமுகம், ‘சரியாய் சொன்னாய் அமாவாசை நானும் அதுபற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இங்கே மலையின் உள்புறம் செல்வதற்கு வேறு எதாவது எளிதான வழி இருக்கிறதா’ என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார்.
அதன் பின்னர் மீண்டும் மலையின் சுற்றுப் புறங்களை ஆராய்ந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள் அவ்வாறு சொல்லிவிட்டு மீண்டும் வேறு ஏதாவது வழி தென்படுகிறதா என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மலையின் அடிப்பகுதி சுற்றளவு ஏறக்குறைய 3 கல் தொலைவு இருக்கும் .இதில் எந்தப்பகுதியில் இருந்து அந்தக்காலத்தில் வீரர்கள் உள்ளே சென்று இருக்க முடியும்?உள்ளே பொருட்களை வைக்க என்ன ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளனர் என்பதே இப்போது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த மலைப்பகுதி அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இப்போது பார்த்தால் மூன்று நான்கு நூற்றாண்டுகளாகி விட்டன.அதனால் வழிகள் இருந்ததற்கான சுவடுகளே தென்படவில்லை .
அதன் பின்னர் தொடர்ந்து பெய்த பெருமழை , வெள்ளம் போன்றவைகளால மலையின் அடிப்பாகத்தில் பெரும் மணல், உடைந்த பாறைகள் குவியல்களாக சேர்ந்து இருந்தன .அவைகள் மலையின் அடிப்பகுதி முழுதும் மண்ணில் இருந்து புதிதாக மலை முளைத்தது போல் காட்சி அழித்தது .
மலையின் ஒரு பகுதியைப் பார்த்துவிட்டு மீண்டும் ஏற்கனவே உள்ள பாறை முன்பு வந்தனர். அப்போது கிராமத்தில் இருந்து கல்மூக்கன் முத்துச்சாமி உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு . வந்துசேர்ந்தனர்.