“அம்மா நான் தான் மீன் பேசுகிறேன் என்னை விட்டுவிடு அம்மா உனக்கு குழந்தையாக இருப்பேன்” எனப் பேசியது மீன்.
“அம்மா எனக் கூப்பிட குழந்தை இல்லாத என்னை அம்மா என கூப்பிட ஒரு மீனாவது கிடைத்ததே” என மகிழ்ச்சியில் மகிழ்ந்த பூவாத்தாள் தன் கணவனிடம் எடுத்துச் சென்று காட்டினாள்.
பண்ணையார் பெரியசாமிக்கு ஒரே ஆச்சரியம், சரி நாம் வளர்ப்போம் என்பவர் ஒரு தொட்டி செய்ய ஏற்பாடு செய்தார்.
அதில் மீனைப் போட்டு வளர்த்து மகிழ்ந்தார்கள் இருவரும்.
மீனும் நாள் ஆக.. ஆக.. பெரியதாக வளர்ந்து கொண்டே வந்தது.
பூவாத்தாளுக்கு ஒரு ஆசை தன் மீன் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று.
யார் பெண் கொடுப்பார்கள். எனக் கவலையாக உட்கார்ந்து இருந்தாள். கவலையாக இருக்கும் பூவாத்தாளிடம் வந்த பெரியசாமி என்ன கவலை என அன்புடன் விசாரித்தார்.
மீன் மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும். எனத் தன் ஆசையை கூறினாள் பூவாத்தாள்.
இதற்கா கவலைப் படுகிறாய். எவ்வளவு செலவு செய்தாவது நம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோம். எனக் கூறியவர் எழுந்து சென்றார்.
என்ன செய்யப் போகிறார் என பூவாத்தாளும் எழுந்து சென்றாள். ஒரு மூட்டையாகப் பணத்தைக் கட்டி வேலையாளிடம் கொடுத்தார்.
“இந்தா ஒரு மூட்டை பணத்திற்கு பெண் கேட்டுப்பார். யார் பெண்ணைக் கொடுத்தாலும் அழைத்துக் கொண்டு வா!” என வேலைக்காரனை அனுப்பினார் பண்ணையார்.
பணத்துடன் சென்ற வேலைக்காரன் ஊர் ஊராகச் சென்று ஒரு மூட்டைப் பணத்திற்கு மீனுக்குப் பெண் கொடுப்பவர் யார்? எனக் கூறிக் கொண்டே போனான்.
யாரும் பெண் தர முன் வரவில்லை. கடைசியாக குப்புசாமி இருக்கும் ஊருக்கு வந்த வேலையாள் அவர்கள் வீட்டு வீதியில் கூவிக்கொண்டே வந்தான்.
இதைக் கேட்ட கருப்பாயி, ஒரு மூட்டை பணமும் கிடைக்கும். இந்த சனியனும் ஒழியும் என நினைத்தவள். “இங்கே வா என அழைத்தாள்”
மீனுக்குப் பெண் வேண்டுமா? என ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ஆமாம் அம்மா” எனக் கூறியவன் விரிவாக எடுத்துக் கூறினான்.
சரி என் மகளைத் தருகிறேன். இந்த ஒரு மூட்டைப் பணத்தை தந்து விடுவாய் அல்லவா, என சந்தேகத்துடன் கேட்டாள் கருப்பாயி.
கண்டிப்பாக தந்துவிடுவேன் பெண்ணைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுங்கள். எனக் கூறினான் வேலைக்காரன்.
இருங்கள்,என உள்ளே சென்றாள் கருப்பாயி.
மலர்கொடிக்கு நல்ல உடைகளைக் கொடுத்து அணியைச் செய்து கூட்டி வந்தாள். ‘எதுக்கு சித்தி’ என ஒன்றும் புரியாமல் திகைத்தாள் மலர்கொடி.
மலர்கொடியை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒரு மூட்டைப் பணத்தை வாங்கிக் கொண்டாள் கருப்பாயி.
இவர் கூடப் போய் வா! என கட்டளை இட்டாள் கருப்பாயி.
சித்தி சொல் கேட்டே பழகிய மலர்கொடி அவனுடன் புறப்பட்டாள். பண்ணையார் வீட்டிற்கு மலர்கொடியை அழைத்து வந்தான் வேலைக்காரன்.
அவளுக்கு அங்கு ஒரே வரவேற்பு.பின்பு தான் தெரிந்து கொண்டாள். மீனுக்கு திருமணம் செய்யப் போவதும், சித்தி பணத்திற்கு ஆசைப்பட்டு விற்று விட்டாள் என்பதும்.
அன்புக்காக ஏங்கிய மலர்கொடியிடம் பெரிய சாமியும், பூவாத்தாளும் காட்டிய அன்பால் எதுவும் சொல்லாமல் மீனை மணக்க சம்மதித்தாள்.
நல்ல நாள் பார்த்து மீனுக்கும்,
மலர்கொடிக்கும் திருமணம் முடிந்தது.
முதலிரவில் மீனும், மலர்கொடியும் தனி அறையில் இருந்தார்கள்.
அப்போது மலர் என்னை பிடித்திருக்கிறதா? எனக் கேட்டது மீன்.
மீன் பேசியதை முதன் முறையாகக் கேட்ட மலர் வியந்தாள். பின் பேச ஆரம்பித்தாள். என் மேல் அன்பாய் இருந்தால் போதும். உங்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் என்றாள் மீனின் செதில்களை வருடியபடி.
மலர் நானும் ஒரு மனிதன் தான். எனது மீன் ஓட்டைக் கழற்றி நெருப்பில் நீ போட்டால், நான் மனிதனாகவே இருப்பேன், எனக் கூறியது மீன்.
அப்படியா! என மகிழ்ந்த மலர் உடனே நெருப்பை மூட்டி மீன் ஓட்டை மெதுவாக கழற்றி இரண்டு பாகத்தையும் நெருப்பில் தூக்கிப் போட்டு எரித்தாள் மலர்கொடி.
மீன் ஓட்டுக்குள் இருந்த ‘ராஜா’ ஒரு ராஜகுமாரன் போல் கம்பீரமாக அழகாக இருந்தான். அவனைப் பார்த்த மலருக்கு ஒரே ஆனந்தம். அப்படியே கட்டிக்கொண்டாள்.
உன் போன்ற பொறுமையான பெண் என் செதில்களை வருடினால்தான் எனது ஓடு உடையும் என ஒரு முனிவரின் சாப விமோசனம். முனிவரின் சாபத்தால் தான் இப்படி இருந்தேன்.
உன் விரல் என்னை வருடிய உடனே ஓடு உடைவதை உணர்ந்தேன். நீ எனக்காகவே பிறந்தவள். என அணைத்துக் கொண்டான் ராஜா.
பொழுது விடிந்தது மலர் மிகவும் வெட்கத்துடன் வெளியில் வந்ததைக் கண்ட பூவாத்தாள்…
மலர்! உன்னை எங்கள் சுயநலத்தால் எனது மகன் மீன் ராஜாவுக்கு கட்டி வைத்தது தவறுதான். எங்களை மன்னித்து விடம்மா! இரவு உன்னை நினைத்து எங்களுக்கு வருத்தமாக இருந்தது. என கண்ணில் கண்ணீர் மல்க புலம்பினாள் பூவாத்தாள்.
அத்தை நான் மிகவும் கொடுத்து வைத்தவள். நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இறைவன் அன்பான குடும்பத்தில் வாழ வழி செய்து விட்டார்.
நீங்கள் வருந்த வேண்டாம். இங்கே வந்து பாருங்கள் உங்கள் மகனை,என்றபடி கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அழைக்கச் சென்றாள்.
அறையில் அழகான வாலிபனைக் கண்ட பூவாத்தாள் இவன் யார்? என மலரைக் கேட்டாள்.
பூவாத்தாளைப் பார்த்த மீன் ராஜா அம்மா! என எழுந்து வந்தான்.
அம்மாவா நீ… என் மகன் மீனா? எனத் தடுமாறினாள் வார்த்தைகள் வராமல்.
அம்மா நான் தான் மீன் ராஜா எனக் கூறியவன் முனிவர் சாபத்தின் விளைவால் மீனாக இருந்தேன்.
மலர்கொடியின் கைபட்டு மனிதனாக வெளியில் வந்த விதத்தையும், விவரமாகச் சொன்னான்.
இதைக்கேட்ட பூவாத்தாள் மிகவும் சந்தோசப்பட்டு மகனே! என கட்டி உச்சி முகார்ந்தாள்.
பண்ணையாரிடம் சிறுபிள்ளை போல் ஓடி விபரத்தைச் சொன்னாள் பூவாத்தாள்.
அந்த ஊரே விழாக் கோலம் கொண்டது. மலர்கொடி வந்த நேரம் என எல்லோரும் அவளை மிகவும் அன்போடு வைத்துக் கொண்டாடினார்கள்.
மகளுக்கு நல்ல வாழ்வு கிடைத்த சந்தோசத்தில் இறந்து போன அம்மாவின் மனம் சாந்தி அடைந்தது.
பொறுமையாக இருந்தால் முடிவில் சந்தோசம் அடையலாம். என்பது இக்கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. என தாத்தா கதையை நிறுத்தினார்.
அப்புறம் என்ன தாத்தா என ஆவலாக கேட்டாள் ரமா.
“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பதற்கு இணங்க மலர்கொடியும் மீன்ராஜாவும் வெகுகாலம் இனிது வாழ்ந்தார்கள், என முடித்தார்.
ரமா கண்களில் சந்தோசம் தாண்டவம் ஆடியது. அதைக் கண்ட தாத்தா மன நிறைவுடன் எழுந்தார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.