தாத்தா சிறுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து தானும் அமர்ந்து கொண்டார்.
குழந்தைகள் புத்தாடையில் மிகுந்த சந்தோசமாக அமர்ந்திருந்தனர்.
எல்லோரும் கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்தீர்களா? என கேட்டார்.
“ஆமாம் தாத்தா” என்றனர் ஒருமித்த குரலில்.
நல்லது, என்ற தாத்தா, குழந்தைகளே! மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வத்திற்கும் வாக்கு கொடுத்தால் மாறக்கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா.
*****
“சொல்லுங்க தாத்தா” என்றனர் குழந்தைகள்.
ஒரு ஊரில் கந்தனும் அவன் மனைவி விமலாவும் வயலில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.
சொத்து சுகம் கொடுக்கவில்லை, அது கூடப் பரவாயில்லை. கொஞ்சி மகிழ ஒரு குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கவில்லையே! என இருவரும் கடவுளை நினைத்து நொந்து கொள்வார்கள்.
ஒரு நாள் இருவரும் கூலி வேலைக்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோயில் இருப்பதைப் பார்த்தனர்.
பிள்ளையாரைப் பார்த்த விமலா “பிள்ளையாரப்பா நீயாவது கருணை காட்டக் கூடாதா?”எனக்கு ஒரு குழந்தையைக் கொடு உனக்கு ஒரு தேங்காய் உடைக்கிறோம்” என வேண்டிக் கொண்டாள் விமலா.
தலையில் கொட்டி காதைப் பிடித்து கரணம் போட்டு பயபக்தியுடன் மீண்டும் மனதில் வேண்டிக் கொண்டு வேலைக்குச் சென்றாள்.
நாட்கள் மாதங்களாயின ஒரு நாள் விமலா வாந்தி எடுத்தாள்.
“ வாய்க்குப் பிடிக்காததை எதையாவது சாப்பிட்டாயா?” என வீட்டின் உள்ளே இருந்து வந்தான் கந்தன்.
“இல்லைங்க” என்றவள் நாணத்தால் முகம் சிவந்தாள்.
“என்ன பிள்ள? என்னைக்கும் இல்லாம இப்படி வெட்கப்படுற” என்றவன் அவள் அருகில் அமர்ந்தான்.
“வந்து, நீங்க அப்பா ஆகப் போகிறீர்கள்” என்றாள் விமலா.
சந்தோசப்பட்ட கந்தன் வீட்டில் இருந்த சர்க்கரையை கையில் எடுத்து விமலா வாயில் போட்டான்.
பக்கத்து வீட்டுக்காரர்களை எல்லாம் அழைத்துச் சொன்னான். வீதியில் போகிறவர்களையும் அழைத்து பெருமை பொங்கத்தான் அப்பாவாகப் போகும் விபரத்தை சொன்னான்.
முடவன் கையில் கொம்புத்தேன் கிடைத்தால் எப்படி பல மடங்கு ஆனந்தப்படுவானோ! அதைவிட பல மடங்கு சந்தோசப்பட்டான் கந்தன்.
விமலா என்ன ஆசைப்பட்டாலும் வாங்கிக் கொடுத்தான். அவள் ‘எள்’ என்றால் இவன் ‘எண்ணெயாக’ நின்றான்.
குழந்தை உண்டானால் தேங்காய் உடைக்கிறோம் என வேண்டியதை சந்தோசத்தில் மறந்தே போனார்கள் இருவரும்.
ஒரு நாள்…
விமலா கனவில் பிள்ளையார் வந்து தோன்றினார்.
அப்போதும் வேண்டியது நினைவுக்கு வரவில்லை விமலாவிற்கு. மாதம் ஓடிக்கொண்டே இருந்தது. பத்தாம் மாதமும் பிறந்தது.
தேங்காய் உடைப்பதை அடியோடு மறந்து போன நிலையில் குழந்தை பிறந்தது.
ஆம்…
விசித்திரமான குழந்தை! தேங்காய் குழந்தை பிறந்தது.
எல்லோரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்தார்கள். எட்டு வருடத்திற்குப் பின் குழந்தை பெற்றாளே! ஆண்டவன் இப்படியா சோதிப்பது. வந்தலோ, தொத்தலோ பிறந்து இருக்கக் கூடாது. தேங்காய் அல்லவா? பிறந்து இருக்கிறது பாவம் விமலா என அனுதாபப்பட்டனர்.
தேங்காய் குழந்தையைப் பார்த்த விமலாவிற்கு அழுகை அழுகையாக வந்தது.
கந்தனுக்கு சந்தோசம் காணாமல் போய் முகம் வெளுத்து விகாரமாய் இருந்தான்.
ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.
மாதங்கள் வருடங்களாக ஓடின. தேங்காயும் பெரிதாக வளர்ந்து கொண்டே வந்தது.
அறுவடை காலம் வந்தது. விமலாவும், கந்தனும் வேலைக்குப் புறப்பட்டார்கள்.
அப்போது அங்கு உருண்டு வந்த தேங்காய் “நானும் வருவேன்” என்றது.
“உன்னைக் கூட்டிக் கொண்டு சென்றால் வேடிக்கை பார்ப்பார்கள். வேலை செய்ய மாட்டார்கள். எனவே, நீ வர வேண்டாம்” என்றாள் விமலா.
அவளுக்குத் தெரியாமல் தேங்காய் உருண்டு வந்து வீட்டிற்கு வெளியில் மறைந்து கொண்டது.
தேங்காய் உள்ளே தான் இருக்கிறது என்று நினைத்த விமலாவும், கந்தனும் கதவை பூட்டிவிட்டு வயலுக்குப் போனார்கள்.
அவர்கள் பார்வையில் படாமல் தேங்காய் அவர்கள் பின் உருண்டு வந்து கொண்டே இருந்தது.
விமலாவும், கந்தனும் தேங்காய் வந்தது தெரியாத நிலையில் கதிர் அறுக்க வயலில் இறங்கிவிட்டார்கள்.
அப்போது அவ்வழியாக வந்த பண்ணையார் பரமசிவம் தேங்காய் தனியாக கீழே கிடப்பதை பார்த்தார்.
கையில் எடுத்தவர் நல்லா முற்றிய தேங்காயாக இருக்கிறதே! வீட்டிற்கு எடுத்துப் போகலாம் என எண்ணியவர் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தார்.
அன்று இரவு பண்ணையார் பரமசிவம் தூங்கிக் கொண்டு இருந்தார்.
யாரோ எழுப்புவது போல் இருக்கவும் எழுந்து சுற்றம், முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று திரும்பவும் படுத்துக்கொண்டார்.
மறுபடியும் யாரோ எழுப்புவது போலிருக்கவும் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தார் பண்ணையார்.
எதிரில் தேங்காய் இருந்தது. இங்கு எப்படி தேங்காய் வந்தது என்று நினைத்த பண்ணையார் எடுக்க கையை நீட்டினார்.
“பிள்ளையார் கோயில் நிலத்தில் விளைந்த நெல் மூட்டை எல்லாவற்றையும் உன் வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறாயே! இது என்ன நியாயம்” என்று கேட்டது தேங்காய்.
அதிர்ந்து போன பண்ணையார் பரமசிவம் கையை இழுத்துக் கொண்டார்.
தேங்காய் தான் பேசுகிறதா? எனக் கண்ணை இமைக்க மறந்து பார்த்தார் பண்ணையார்.
“ உனக்கு எப்படி தெரியும்?” என வார்த்தைகள் தடுமாறக் கேட்டார் பண்ணையார்.
எனக்கு எல்லாம் தெரியும். பிள்ளையாருக்கு சேர வேண்டிய நெல் மூட்டைகளை கந்தன் வீட்டிற்கு கொடுத்துவிடு.
இல்லை என்றால் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டச் சொல்லி ஊருக்கே உன் திருட்டுத்தனத்தை சொல்லி விடுவேன் என்றது தேங்காய்.
வேண்டாம்…வேண்டாம் நான் கந்தன் வீட்டில் நெல் மூட்டைகளை கொடுத்து விடுகிறேன், என்றார் பண்ணையார்.
தேங்காய் உருண்டு வீட்டிற்கு வந்து விட்டது.
மறுநாள் காலையில் பண்ணையார் வீட்டு வேலையாள் வண்டியில் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து கொடுத்தார்.
எதற்காக பண்ணையார் நெல் மூட்டைகளை கொடுக்கிறார் என கந்தனும் அவன் மனைவி விமலாவும் திகைத்து கேட்டார்கள்.
எல்லாம் இந்த
தேங்காய்காக என்று சொல்லச் சொன்னார் பண்ணையார் என்றான் வேலையாள்.
அதுவரை வெறுத்து ஒதுக்கிய தாயும், தந்தையும் தேங்காயை வாஞ்சையுடன் நோக்கினார்கள்.
தேங்காய் குழந்தைக்கு அது ஆனந்தத்தை தந்தது.
கவிஞர் ச மல்லிகா எழுதும் கதை தொடரும்.