மறுநாள் கோவில் தர்மகர்த்த வீட்டிற்கு சென்றது.

தனி அறையில் ஓய்வாக இருந்த தர்மகர்த்தா கனகலிங்கம் முன் தேங்காய் தோன்றியது.

மெதுவாக காலின் மேல் உருண்டது.

என்ன காலில் எனக் குனிந்து பார்த்த கனகலிங்கம். தேங்காய் இருப்பதைப் பார்த்து யார் தேங்காயை இங்கே வைத்தது என வேலையாட்களைத் திட்டிக் கொண்டே எடுத்து மேஜையின் மேல் வைத்தார்.

“கோயிலுக்கு நகை செய்யக் கொடுத்த தங்கத்தில் பாதியை எடுத்துக் கொண்டு, பாதியில் நகை செய்யச் சொல்லி நல்ல பெயருடன் நடமாடும் கனகலிங்கம் நீதானே” என்றது தேங்காய்.

பதறிய படி எழுந்த கனவலிங்கம் என்ன தேங்காய் பேசுகிறது! அதுவும் தான் மறைத்த தங்கத்தையும் பார்த்தது போல் கூறுகிறதே! என பயத்தில் நடுங்கி “நீ யார்?” என நடுங்கிய குரலில் தடுமாறிக் கேட்டார் கனகலிங்கம்.

எல்லாம் கோயில் தூதுவன் தான் நான் எடுத்த தங்கத்தை கந்தன் வீட்டில் ஒப்படைத்து விடு இல்லை, ஊரைக் கூட்டி உன் திருட்டை அம்பலப்படுத்தி விடுவேன். என அதிகாரக் குரலில் கூறியது தேங்காய்.

“வேண்டாம்… வேண்டாம். ஊரைக் கூட்ட வேண்டாம் நான் திருட்டு வேலை செய்தது வெளியில் தெரிந்தால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள். நீ சொன்னது போல் கந்தன் வீட்டில் நகைகளை ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறினான் கனகலிங்கம்.

“சொன்னபடி செய்” என உத்தரவு போட்டுவிட்டு என்னைக் கீழே எடுத்து வை எனக் கூறியது தேங்காய்.

கனகலிங்கமும் பயபக்தியுடன் தேங்காயை எடுத்து கீழே வைத்தார்.

மறுகணம் தேங்காய் உருண்டு சென்றது.

கண் இமைக்காமல் பார்த்த கனகலிங்கம் இது என்ன நிசமா? இல்லை  கனவா? என மீண்டும் கண்ணைக் கசக்கிப் பார்த்தார்.

நடந்தது அனைத்தும் உண்மை என அறிந்த பின் வேலையாட்களில் ஒருவனை கூப்பிட்டார் கனகலிங்கம்.

கோயில் நகைகளின் பதுக்கிய தங்கத்தில் செய்த நகைகளை எல்லாம் எடுத்து கந்தன் வீட்டில் கொடுக்கச் சொன்னார் வேலைக் காரனிடம்.

தர்மகர்த்த முகம் வேர்த்து படபடப்பாக இருப்பதைப் பார்த்த வேலையால் என்ன என்பது போல் பார்த்தான்.

அந்த தேங்காய் பாவமடா! அதுக்காகக் கொடுப்பதாக போய் சொல் என விரட்டிவிட்டார் கனகலிங்கம்.

தேங்காய் வீட்டிற்கு வந்த வேலையாள் கந்தனிடம் அந்த நகைகளைக் கொடுத்தான்.

எதற்கு என்று ஒன்றும் புரியாமல் பார்த்தான் கந்தன்.

“எல்லாம் இந்த தேங்காய் குழந்தைக்காக கொடுக்கச் சொன்னார்” தர்மகர்த்தா என்றவன் போய்விட்டான்.

வியப்பு மாறாத குரலில் விமலா! இங்கே வா! என அழைத்தான் மனைவியை கந்தன்.

கை வேலையாக இருந்த விமலா அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள் என்ன? என்ற படி.

இதை பார் விமலா “நம் ஆயுளுக்கும் இப்படி நகை செய்ய முடியாது” உன் தேங்காய் குழந்தை தேடிக் கொடுத் திருக்கிறது என்றான் கந்தன்.

வாங்கிப் பார்த்த விமலா சந்தோசத்தில் உச்சிக்கே போய்விட்டாள்.

பொட்டுத் தங்கம் இல்லாத இந்த ஏழைக்கு இவ்வளவு நகைகளா? என தேங்காயை எடுத்து முதல் முதலாக உச்சி முகர்ந்தாள் விமலா.

தேங்காய் என்று வெறுத்த  அன்னையின் அணைப்பில் மெய் மறந்து தேங்காயும் மகிழ்ச்சியில் திளைத்தது.

அடுத்து பஞ்சாயத்துத் தலைவர் வீட்டிற்கு சென்றது தேங்காய்.


தனகோடி அங்கு இல்லாததை அறிந்த தேங்காய்.
தோட்டத்து வீட்டிற்கு உருண்டு உருண்டு  சென்றது.

அங்கு பஞ்சாயத்துத் தலைவர் தனகோடி தன் நண்பர்களுடன் இறைச்சி, கோழியுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

தேங்காய் உருண்டு நாற்காலியின் அடியில் மறைந்து கொண்டது.

அவர்கள் அடித்த ஆட்டமும், கூத்தும் இரவு பன்னிரண்டை தாண்டியவுடன் நின்றது.

தள்ளாடி தள்ளாடி ஒவ்வொருவராக விடை பெற்றார்கள்.

போதையில் தள்ளாடிய படியே நண்பர்களை அனுப்பி வைத்த தனகோடி கட்டிலில் வந்து விழுந்தார்.

மறைந்திருந்து தேங்காய் உருண்டு அவர் மேல் விழுந்தது.

நேரமோ
பன்னிரண்டுக்கும் மேல், இருப்பதோ தனி ஆளாக, காத்தோ, கருப்போ எனப்பயத்தில் போதை தெளிந்து திரு திரு என விழித்துக் கொண்டு அமர்ந்தார் தனகோடி.

“நான்தான் குருக்கள் மகள் கோகிலா” என்றது குரல்.

கோகிலா…கோகிலா வா! நீ எப்படி இங்கே?
என வாய் தந்தி அடித்து வார்த்தைகள் சிதறின.

“உன்னால் களங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட கோகிலா தான் பேசுகிறேன். என்னையும் கலங்கப்படுத்தி, எங்கள் பரம்பரைக்கு  கொடுத்த கோயில் நிலத்தையும் எடுத்துக்கொண்ட பாவி உன்னை சும்மா விடப்போவதில்லை” என்ற தேங்காய் குதித்து குதித்து வந்தது.

ஆவி தேங்காய்க்குள் புகுந்து கொண்டு பயமுறுத்துகிறது என எண்ணிய தனகோடி பயத்தில் நடுங்கியபடியே…

கோகிலா நான் செய்ததெல்லாம் தப்புதான். என்னை மன்னித்துவிடு. என்னை பலிவாங்கி விடாதே கோகிலா என நடுங்கினான் தனகோடி.

உன்னை ஒன்றும் செய்யக்கூடாது என்றால் நீ ஒன்று செய்ய வேண்டும் என்றது குரல்.

என்ன செய்ய வேண்டும் சொல் கோகிலா என நடுங்கிக் கொண்டே கேட்டார் தனகோடி.

கோயிலுக்கு சொந்தமான  அந்த நிலத்தையும், வீட்டையும் கந்தன் வீட்டில் பிறந்திருக்கும் தேங்காய் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும்.

திடீர் என எழுதிக் கொடுக்கிறீர்கள் ஏன்? எதற்கு? என ஊரார் கேட்டால் என்ன பதில் சொல்வது என பயத்தில் நடுங்கிக் கொண்டே கேட்டார் தனகோடி.

  தப்பு செய்வதற்கு மட்டும் யோசிக்கத் தெரிகிறது. நல்லது செய்யும்போது யோசிக்க முடியவில்லை? எனக் கேட்ட கோகிலாவின் குரல் சரி! நானே சொல்கிறேன் என்றது.

நமது ஊரில் தேங்காய் குழந்தை பிறந்து இருப்பது கடவுளின் அருளால். எனவே, விநாயகருக்கு சொந்தமான வீட்டையும், நிலத்தையும் எழுதி வைப்பதாகக் கூற வேண்டும். என்ற கோகிலா அவி பயங்கர சத்தத்துடன் சிரித்துக்கொண்டே மறைந்தது.

கோகிலாவின் ஆவி கொன்றுவிடும் என பயந்து போய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தனகோடி ஆவி மறைந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

கோகிலா ஆவி சொன்னது போல் கந்தன் வீட்டிற்கு வந்த தனகோடி நிலத்தையும், வீட்டையும் தேங்காய் குழந்தை பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்தார்.

விநாயகருக்கு சொந்தமான வீட்டையும், நிலத்தையும் பெற்றுக் கொண்ட கந்தனும், விமலாகவும் அப்போது கூட விநாயகருக்கு தேங்காய் உடைக்க வேண்டும் என்ற நினைவு வரவில்லை.

நாட்கள் ஓடின. கந்தனும் நல்ல வசதியாக வாழ்ந்தான். தேங்காயும் பெரியதாகிவிட்டது இந்த நிலையில்.

கந்தன் வீட்டு வசதியைப் பார்த்து தேங்காய்க்கு பெண் கொடுக்க முன் வந்தார் பரமசிவம்.

தந்தையின் வறுமைக்கு தன்னை பலிகடாவாக்கும் தந்தையை நினைத்து வருத்தம் வந்தாலும்,

எட்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் தந்தை நிலையை நினைத்து சம்மதித்தாள் உமா.

திருமணமும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

மறுநாள் குளிப்பதற்காக அண்டாவில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்கள் உமா குளித்து விட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராக குளிக்க ஆரம்பித்தார்கள்.

தேங்காய் நானும் குளிக்கிறேன் என்றது.

சரி என்றவள் தண்ணீரை எடுத்துக் குளியல் அறையில் வைத்தாள் தேங்காயும் குளிக்கச் சென்றது.

உமாவிற்கு திடீர் என ஒரு விபரீத ஆசை வந்தது.

தேங்காய் எப்படி குளிக்கும் அதை பார்க்க வேண்டும் என எண்ணினாள்.

தேங்காய் ஓட்டைக் கழற்றி வைத்துவிட்டு   குளித்துக் கொண்டு இருந்தது.

மெதுவாக வந்து எட்டிப் பார்த்தாள் உமா. மன்மதனோ! என வியாக்கும்படி மிக அழகாக இருந்தான்.

இவ்வளவு அழகானவர் இந்த ஓட்டுக்குள் ஒழிந்து கொண்டு இருக்கிறாரே
என எண்ணியவள் சட்டென முடிவு செய்தாள்.

கதவை படீர் என திறந்தாள். திறந்த வேகத்தில் தேங்காய் ஓட்டை எடுத்துக் கொண்டு ஓடியவள் எரிந்து கொண்டு இருந்த அடுப்பில் போட்டு விட்டாள்.

தேங்காய் ஓடு எரிந்து சாம்பல் ஆகியது இதை சற்றும் எதிர்பார்க்காத தேங்காய், வெளிஉலகை பார்க்காது ஓட்டுக்குள் வளர்ந்ததால் வெளியே வர வெட்கப்பட்டான்.

“எல்லோரும் இங்கே வாங்க” என உமா மகிழ்ச்சியில் வார்த்தைகள் தடுமாற்றத்துடன் கூப்பிட்டாள்.

என்னவோ, ஏதோ என்று ஓடி வந்தார்கள் எல்லோரும்.

என்ன? என்ன? என ஆளாளுக்கு விசாரித்தார்கள்.

உமா பேச முடியாமல் குளியல் அறைப் பக்கமாகக் கையைக் காட்டினாள்.

எல்லாரும் அங்கு சென்று பார்த்தார்கள். அழகான வாலிபன் நின்று கொண்டு இருந்தான்.

கம்பும், தடியும் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைக் கண்ட உமா தடுத்து நிறுத்தி நடந்துவற்றை கூறினாள்.

இதைக் கேட்ட விமலாவிற்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது. தான் வினாயகருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டியது.

இனியும் தாமதிக்கக் கூடாது, நாம வேண்டிய படி நடக்கவில்லை என்பதற்காக, ஒவ்வொன்றாய் கொடுத்து ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

அவர் வேண்டச் சொல்லி வேண்டவில்லை. நம் தேவைக்கு வேண்டுகிறோம். பின் அதன்படி நடக்காதது நமது தவறுதான். இருந்தாலும் அவர் நமக்கு எல்லா நன்மைகளும் செய்து ஞாபகப்படுத்தி இருக்கிறார்.கடவுளை நம்பியவர் கைவிடப்படார் என எண்ணிக் கொண்டாள் விமலா.

எல்லோரும் கோயிலுக்குப் போய் வேண்டிய படி தேங்காய் உடைத்து சாமி தரிசனம் கண்டார்கள்.

“பார்த்தீர்களா, குழந்தைகளை! இதில் இருந்து என்ன தெரிகிறது சொன்ன வாக்குப்படி நடக்க வேண்டும், மறக்க கூடாது. கோயில் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது என்று தெளிவாகத் தெரிந்திருக்குமே!” என்றார் தாத்தா.

ஆமாம் தாத்தா! என்றார்கள் சிறுவர்கள்.

தாத்தாவும் நேரமாகி விட்டதை உணர்ந்து எழுந்தார்.

குழந்தைகளும் எழுந்து துள்ளி ஓடினார்கள் வீட்டிற்கு.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply