5- புத்திசாலியின் வெற்றி

குழந்தைகள் எல்லாம் தாத்தா வருகைக்காக காத்திருந்தார்கள்.

பசியால் முகம் வாடி கண்கள் குழி விழுந்து மிகச் சோர்வுடன் அமர்ந்திருந்தான் விஜயன்.

தாத்தா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் கண்களுக்கு விஜயனின் சோர்வு தான் தெரிந்தது.

“விஜயா என்னப்பா? ஏன் இவ்வளவு சோர்வாக அமர்ந்திருக்கிறாய்” என தாத்தா கேட்டது தான் தாமதம்.

விஜயனின் கண்கள் துக்கத்தால் கண்ணீர் சிந்தியது.

“ஏனப்பா! இங்கே வா… விஜயா” என அழைத்த தாத்தா, அருகில் உட்கார வைத்துக்கொண்டு கண்ணில் வடியும் நீரைத் துடைத்து விட்டார்.

“தாத்தா எனது தந்தை நல்லா வேலை செய்வார். ஆனா, அவருக்கு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம் தாத்தா, காலையில் இருந்து சாப்பிடவில்லை தாத்தா” என்றான் விஜயன்.

தாத்தா நான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் எதுவும் சாப்பிடவில்லை என்று அம்மா பழம், ரொட்டி கொடுத்து அனுப்பினார்கள். இதை விஜயனுக்கு கொடுங்கள் எனக் கொடுத்தாள் சுமதி.

தாத்தாவும் சுமதியின் நல்ல குணத்தை பாராட்டினார். பின் சுமதியிடம் வாங்கி பழம், ரொட்டிகளை விஜயனிடம் சாப்பிடக் கொடுத்தார்.

சாப்பிட்டவுடன் தண்ணீர் கொடுத்தார். இப்போது விஜயனின் முகவாட்டம் போயிருந்தது.

சரி இப்போது கதை சொல்ல ஆரம்பிக்கலாமா? என்றார் தாத்தா.

“சொல்லுங்கள் தாத்தா” என எல்லோரும் குரல் கொடுத்தார்கள்.

தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
                    *****
ஒரு ஊரில் மதிவாணன் என்ற புத்திசாலி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்காமல் மனைவி குழந்தைகளுடன் வறுமையில் வாடினான்.

ஒரு நாள் இரவு தன் மனைவியிடம் இவ்வாறு கூறிக்கொண்டு இருந்தான்.

“எவ்வளவு அறிவு இருந்தும் என்ன ஒரு வேலையும் கிடைக்கவில்லையே! குடும்பம் வறுமையில் இருந்து மீள பேனா முனை இடம் கிடைத்தால் போதும் பெரிய பணக்காரன் ஆகிவிடுவேன்” என அலுத்துக் கொண்டான் மதிவாணன்.

மாறுவேடத்தில் சோதனைக்காக வந்த அரசன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

மறுநாள் காவலாளியை அனுப்பி மதிவாணனை அழைத்து வரச் சொன்னார் அரசர்.

மதிவாணன் அரசர் முன் வந்து என்ன அரசே! என பணிவுடன் கேட்டான்.

மதிவாணா! பேனா முனைக்கு இடம் கிடைத்தால் பணம் சம்பாதித்து விடுவேன் என நீ கூறியது எனது செவிகளுக்கு எட்டியது.

நான் ஒரு வேலை தருகிறேன். அதில் உன் பேனாவிற்கு தான் அதிக வேலை. ஆனால், ஒரு பைசா சம்பளம் தர மாட்டேன். நீ எப்படி சம்பாதிக்கிறாய் பார்க்கிறேன் என்றார் அரசர்.

அப்படியே ஆகட்டும் அரசே! என பணிவாக கூறினான் மதிவாணன்.

உனக்கு என்ன வேலை என்றால், ராணுவத்தில் உள்ள யானைகள், குதிரைகள், ஆடு, மாடுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு சாணமும், புழுக்கையும் போடுகிறது என கணக்கு எடுத்துக் கூற வேண்டும்….

என்ற அரசர் அரசு வேலையில் இருப்பதற்கான பத்திரத்தில் அரசாங்க முத்தரையிட்டுக் கொடுத்தார்.

அரசரை வணங்கி பத்திரத்தைப் பெற்றுக் கொண்டான் மதிவாணன்.

பத்திரத்தை எல்லோரிடமும் காட்டி அரசாங்க வேலை கிடைத்திருக்கிறது.பெரிய உத்தியோகம். என எல்லோரையும் நம்ப வைத்தான் மதிவாணன்.

அந்த பத்திரத்தை காண்பித்து வட்டிக்கு பணம் வாங்கி பெரிய வீடாக வாடகைக்கு எடுத்து குடிபோனான்.

அந்த பத்திரத்தையே காட்டி முதல் மாத சம்பளம் வந்தவுடன் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என கடைக்காரர்களிடம் சொல்லி ஆடை ஆபரணம், பொருட்கள் என வாங்கிக் கொண்டான் மதிவாணன்.

தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்ட மதிவாணனைக் கண்டு எல்லோரும் மதிக்க ஆரம்பித்தார்கள்.

“ தனக்கு கீழ் வேலை செய்ய ஆட்கள் தேவை” என அறிவிப்பு விட்டான் மதிவாணன்.

பலர் வேலை கேட்டு வந்தார்கள். வந்தவர்களிடம் ஒரு நிபந்தனை போட்டான் மதிவாணன்.

மூன்று மாதம் சம்பளம் கேட்கக் கூடாது. நன்றாக பணிபுரிபவர்களுக்கு சம்பளத்துடன் பல பரிசுப் பொருட்களும் கொடுக்கப்படும் என்பதே அந்த நிபந்தனை.

நிபந்தனைகளை ஒப்புக் கொண்டவர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டான் மதிவாணன்.

வாடகைக்கு குதிரை ஒன்றை எடுத்துக் கொண்ட மதிவாணன். தராசு, எடைக்கற்களுடன் அரண்மனையில் உள்ள இராணுவ படைகள் அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்றான்

லத்திகள், புழுக்கைகள், சாணங்கள் என தனித்தனியாக நிறுத்து கணக்கு எழுதிக் கொண்டான் மதிவாணன்.

தன் கீழ் வேலைக்கு அமர்த்திய வேலையாட்களை அனுப்பி யானைப் படை, குதிரைப்படை, ஆடு, மாடுகளுக்கு தீனி வாங்கும் அதிகாரிகளை அழைத்து வரச் சொன்னான் மதிவாணன்.

எல்லோரும் வந்த பின் “நீங்கள் வாங்கும் தீனிகளுக்கும் அவைகள் போடும் கழிவுகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

இவ்வளவு உணவு சாப்பிடும் விலங்கு இவ்வளவு கழிவு போடும் என்ற கணக்கு இருக்கிறது.

ஒரு நாளைக்கு இவ்வளவு  ரூபாய் வித்தியாசம் என்றால், ஒரு வாரத்திற்கு இவ்வளவு, ஒரு வருடத்திற்கு இவ்வளவு என அரசாங்கத்திற்கு நஷ்டம் ஆகிறது. நான் இந்தக் கணக்கை அரசரிடம் காட்டப் போகிறேன் என்றான் மதிவாணன்.

அதிகாரிகள் பயத்தில் நடுங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொய் கணக்கு எழுதி வைத்திருந்தார்கள்.

எனவே, அரசருக்கு உண்மை தெரிந்தால் பதிவி பறிபோய்விடும் என பயந்தார்கள் அதிகாரிகள்.

ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மதிவாணனை சந்தித்து தங்கள் தவறை அரசனிடம் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் பணம் தருவதாக கூறினார்கள். அதில் பங்கும் தருவதாக கூறி தலையை சொறிந்தார்கள்.

மதிவாணன் முதலில் மறுத்து வேகமாக பேசி மேலும் பயத்தில் நடுங்க வைத்தான்.

பிறகு போனால் போகிறது என்றவன். ஆனால்,என நிறுத்தினான் மதிவாணன்.

இவ்வளவு இறங்கி வந்தது பெரியதாக நினைத்த அதிகாரிகள் என்ன என்றனர் பணிவாக.

“ வாயால் கூறியதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.எழுதிக் கொடுத்தால் தான் ஒப்புக் கொள்வேன்” என கூறினான் மதிவாணன்.

அவர்களும் அவ்வாறே ஒப்புக்கொண்டு பணத்தையும் ஒப்பந்தப் பத்திரத்தையும் கொடுத்தார்கள்.

அவர்களுக்குத் தெரியாமல் அரசரிடம் காட்டினான் மதிவாணன்.

அரசே! எனக்கு பணத்தேவை அதிகம் இருப்பதால் இவற்றையே சம்பளமாக வைத்துக் கொள்ளட்டுமா? எனக் கேட்டான்.

அரசரும் மதிவாணனின் திறமையைப் பாராட்டியவர் இரட்டிப்பு  சம்பளமும், பரிசுகளும் வழங்கினார்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply