குழந்தைகள் எல்லோரும் கதை கேட்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தார்கள்.
தாத்தாவும் அமர்ந்து கொண்டு குழந்தைகளை ஆராய்ந்தார். இரண்டு சிறுவர்கள் அவர்களுக்குள்ளாக மெதுவாக பேசிக்கொண்டு மற்றொரு சிறுவனை சீண்டிக் கொண்டு இருப்பது அவர் கண்களில் பட்டது.
அவர்களைப் பார்த்து “என்ன குழந்தைகளே” என்றார் தாத்தா.
தாத்தா!இவனைப் பாருங்க தாத்தா என் பெயரைச் சொல்லிக் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறான் என்றான் மண்ணாங்கட்டி.
“குழந்தைகளே! அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்து… பிறந்து இறந்து கொண்டே இருந்ததால் மண்ணாங்கட்டி என பெயர் வைத்தால் குழந்தை தங்கும் என்ற நம்பிக்கையில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதை கிண்டல் செய்யாதீர்கள்” என்ற தாத்தா.
பெற்றோர் இப்படி ஏதாவது ஒரு பெயர் வைப்பதால் இளைஞர்கள் ஆகும்போது அப்பெயர் அவர்களுக்கு மனவேதனையை கொடுக்கிறது. இது மாதிரி நடந்த ஒரு கதையை உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா.
*****
ஒரு ஊரில் ‘குப்பய்யா’ என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பெயர் ‘விளக்குமாறு’ இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவன் பெயர் ‘பால்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘பழம்’ என பெயர் சூட்டி வளர்த்தார்கள்.
பாலும், பழமும் பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள்.
பழத்திற்கு மாப்பிள்ளை தேடினார்கள். அரசுப் பணியில் இருப்பதாகச் சொல்லி ஒரு மாப்பிள்ளை முகவரி கொடுத்தார் தரகர்.
மாப்பிள்ளை வீட்டாரை வரச் சொல்லி தரகர் மூலம் தகவல் அனுப்பி வைத்தார் குப்பய்யா.
மாப்பிள்ளைக்கு விடுமுறை கிடைக்காததால் மாப்பிள்ளையின் பெற்றோர் மட்டும் பார்த்துச் சென்றார்கள்.
பெண் பிடித்திருந்தது. மாப்பிள்ளையை அனுப்பி வைக்கிறோம் என தகவல் சொல்லி அனுப்பினார்கள்.
மாப்பிள்ளை அன்று வருவதால் பரபரப்பாக இருந்தார்கள் பெண் வீட்டினர்.
மாப்பிள்ளை வந்துவிட்டார் அந்த சமயம் பார்த்து மகன் ‘பால்’ வெளியில் சென்றிருந்தான்.
“உட்காருங்கள் மாப்பிள்ளை” என வரவேற்று உபசரித்தார் குப்பய்யா.
மாப்பிள்ளையும் உட்கார்ந்து சுற்றும், முற்றும் பார்த்தார். பெண் கண்ணுக்குப் படுகிறாளா என்று.
இதை கவனித்த குப்பய்யா ‘பால்’ வரட்டும் என்றார்.
பெண் பால் எடுத்து வருவாள் என காத்திருந்தார் மாப்பிள்ளை.
வெளியில் சென்ற மகன் வரவே, பால்! பழத்தை அழைத்து வா! என்றார் குப்பய்யா.
பழத்தை அழைத்து வருவதா! என குழம்பிய மாப்பிள்ளை. பாலும், பழமும் எடுத்து வர சொல்கிறார் போலும் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார் மாப்பிள்ளை.
அந்த சமயம் பார்த்து தோட்டத்தில் கட்டியிருந்த நாய் கயிற்றை அறுத்துக் கொண்டு வந்துவிட்டது.
அந்த நாயிற்கு செல்லமாக ‘குடுமி’ என பெயர் வைத்திருந்தார்கள்.
‘குடுமி’ வந்த வேகத்தில் மாப்பிள்ளை பக்கம் ஓடியது.
மாப்பிள்ளை புதிய ஆடை உடுத்தி இருந்ததால் நாய் மேல் உள்ள தூசி ஆடையில் பட்டுவிடும் என ஒதுங்கு… ஒதுங்கி உட்கார்ந்தார்.
இதை கவனித்த குப்பய்யா, “ஏய்… விளக்கமாறு குடுமியைப் பிடித்துக் கட்டு” என்றார்.
இது என்னடா! வம்பா போச்சு… பெண் பார்க்க வந்து இவ்வளவு நேரமாச்சு, பெண்ணை கண்ணில் காட்டவே இல்லை. வந்த மகனிடம் பால், பழம் எடுத்து வரச் சொன்னார் அவர் சென்றவர் சென்றவர் தான்.
இந்த நிலையில் குடுமியைப் பிடித்து கட்டு என்கிறார். குடுமியைப் பிடித்துக் கட்டி விளக்கு மாற்றால் அடிக்கப் போகிறார்கள் போலும்.
நான் என்ன தப்பு செய்தேன். இவர்கள் இப்படி நடந்து கொள்ள. என பலவாறு சிந்தித்து குழம்பிப்போன மாப்பிள்ளை இனி ஒரு நிமிடம் கூட இங்கு இருக்கக் கூடாது என ஓட ஆரம்பித்தார்.
அவர் ஓடுவதைப் பார்த்த ‘குடுமி’ துரத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தது.
அந்த நாய் அவர் மனைவிக்கு மட்டும்தான் கட்டுப்படும் என்பதால், “விளக்கமாறு குடுமியைப் பிடி… விளக்குமாறு குடுமியை பிடி என கத்தினார் குப்பய்யா.
குப்பய்யா இவ்வாறு கத்த கத்த பயத்தில் பெண்ணும் வேண்டாம், மண்ணும் வேண்டாம் என ஓடினார் மாப்பிள்ளை.
மாப்பிள்ளை நில்லுங்க..! குடுமியை விளக்குமாறு கட்டிவிடுவாள். பழத்தைப் பார்த்து விட்டு போங்க என பின்னால் ஓடினார் குப்பய்யா.
“உங்கள் பாலும் வேண்டாம், உங்க பழமும் வேண்டாம்.என்னை குடுமியை பிடித்து கட்டி விளக்குமாற்றால் அடிக்காமல் இருந்தால் சரி” என்று மாப்பிள்ளை ஓடிக்கொண்டே இருந்தார்.
அப்போதுதான் குப்பய்யாவிற்குப் புரிந்தது.நம்ம வீட்டில் உள்ளவர்கள் பெயர் தெரியாமல் மாப்பிள்ளை தப்பு தப்பாக அர்த்தம் ஆக்கிக் கொண்டு ஓடுகிறார் என்று.
பின்னாலேயே சென்ற குப்பய்யா மாப்பிள்ளை வீட்டாரிடம் நடந்தவற்றைக் கூறி தங்கள் வீட்டினர் பெயர்களையும் கூறினார்.
இதை எல்லாம் பெற்றோர் உடன் கேட்டுக் கொண்டு இருந்த மாப்பிள்ளை நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்றவர்.
மீண்டும் பெண் வீட்டிற்கு வந்து பெண்ணைப் பார்த்து திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்.
திருமணமும் நல்ல முறையில் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை மறுவீட்டுக்கு வந்தார்.
‘குடிமி’ அவரைச் சுற்றி சுற்றி வந்தது. விளக்கமாறு குடுமியைப் பிடித்து கட்டு என்றார் குப்பய்யா.
அந்த சமயம் பால், “என்ன மாப்பிள்ளை” என கிண்டலாக கண்சிமிட்ட பழைய நினைவுகளை நினைத்து அனைவரும் சிரித்தார்கள்.
*****
கதை கேட்ட குழந்தைகளும் சிரித்தார்கள். “பெயரால் எத்தனை குழப்பம் வந்தது” என்று நிறுத்தினார் தாத்தா.
மண்ணாங்கட்டியும் கண்கலங்க தாத்தாவைப் பார்த்தார்.
“இங்கே வா” என அழைத்த தாத்தா “வருத்தப்படாதே! உன் வீட்டிற்கு வந்து நல்ல தமிழ் பெயர் சூட்டுகிறேன்” என்றார் தாத்தா.
“ என்ன பெயர் தாத்தா” எனக் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
மண்ணாங்கட்டிக்கும் தன் பெயர் மாற்றப்படுவதில் சந்தோசம்.அதைவிட தனக்கு வேறு என்ன பெயர் தாத்தா வைக்கப் போகிறார் என்ற ஆர்வத்தில்….
சொல்லுங்க தாத்தா சொல்லுங்க என்றான் கெஞ்சலாக மண்ணாங்கட்டி.
‘ அழகன்’ என்றார் தாத்தா.
‘அழகன்’ என்று சொல்லிப் பார்த்த மண்ணாங்கட்டி தனக்கு அழகே கூடிவிட்டதாக மகிழ்ந்து போனான். அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
இதைக் கவனித்த தாத்தா பெற்றோர் பெயர் சூட்டும் போது குழந்தைகள் மகிழும் பெயராக வைக்க வேண்டும் என எண்ணினார்.
‘அழகன்’ மிகுந்த சந்தோசத்துடன் வீட்டிற்கு ஓடினான். பெற்றோரிடம் சொல்வதற்காக.
அவன் மகிழ்ச்சியை நிரந்தரமாக்க தாத்தாவும் அழகன் வீட்டை நோக்கிப் போனார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.