காவலாளிகள் மன்னரிடம் விடைபெற்று யானையை அடக்கிய வீரனைத் தேடினார்கள்.
இரவு முழுவதும் யானையை அடக்கிய அசதியில் விடிந்தது கூடத் தெரியாமல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்
சங்குராஜா.
“எழுந்திரு, ஐயா! எழுந்திரி! யார் நீ! எந்த ஊர்! புதிதாக இருக்கிறாயே” எனக் காவலாளிகள் எழுப்ப…
நெளிந்து கொண்டு கண்களைத் திறக்க முடியாமல் கொட்டாவி போட்டபடி மெதுவாக எழுந்தான் சங்குராஜா.
கைகளால் கண்களை கசக்கியபடி காவலாளிகளை சங்கராஜா பார்த்தான்.
எங்கிருந்து வருகிறாய்?இங்கு எப்போது வந்தாய்? யானையை இரவு அடக்கினாயா? எனக் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே போனார்கள்.
“நான் பக்கத்து நாட்டில் இருந்து வருகிறேன். இரவு நான் தான் யானையை அடக்கினேன்” என்றான் சங்குராஜா.
அரசரிடம் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள். உங்கள் வீரம் தெரியாமல் இந்த சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். என மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
சங்குவைப் பார்த்த மன்னரும் மகிழ்ந்து சிம்மாசனத்தில் இருந்து எழுந்து வந்தவர்
சங்குராஜாவை கட்டித் தழுவிக் கொண்டார்.
“எனது மக்களின் பயத்தைப் போக்கி மகிழ வைத்த மாவீரனே! உம்மை நான் வரவேற்கிறேன்” என்ற மன்னர்.
தனது மகள் நீலாவை சங்குராஜாவிற்கு திருமணம் செய்து வைத்தார் மன்னர்.
“உங்கள் மகள் இங்கு இருக்கட்டும், நான் முக்கியமான பணிக்குச் செல்ல இருக்கிறேன். அப்பணி முடிந்து வரும் போது அழைத்துப் போகிறேன்” எனக்கூரிய சங்குராஜா அவர்களிடம் விடை பெற்று அடுத்த நாட்டிற்குச் சென்றான்.
மங்களாபுரிக்கு வந்த சங்குராஜா மிகவும் களைத்துக் காணப்பட்டான். நாக்கு வறண்டது. தண்ணீர் தாகம் உயிர் போய்விடும் போல் இருந்தது.
“ குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” எனக் கேட்டான் சங்குராஜா.
தண்ணியா!இல்லை… இல்லை” எனக் கதவை மூடிக்கொண்டனர்.
மெதுவாக நடந்து வந்த சங்குராஜா ஒரு குளம் இருப்பதையும். அதன் அருகில் வீடு இருப்பதையும் கண்டு, இங்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கதவைத் தட்டினான்.
வெளியில் வந்த வீட்டின் சொந்தக்காரர், “என்ன வேண்டும்” எனக் கேட்டார்.
“குடிக்க தண்ணீர் வேண்டும்” எனக் கேட்டான் சங்குராஜா.
தண்ணியா? என்றவர், “பொன் பொருள் கேட்டால் கூடக் கொடுத்து விடுவோம், தண்ணீர் மட்டும் கேட்காதீர்கள்” என்றவர் உள்ளே செல்லத் திரும்பினார்.
கொஞ்சம் நில்லுங்கள் ஐயா? என்ற சங்குராஜா
வீட்டின் முன்பு இவ்வளவு பெரிய குளத்தை வைத்துக்கொண்டு தண்ணீர் தர மறுக்கிறீர்களே என நா தடுமாற கேட்டேன்
சங்குராஜா.
நீ வெளியூர் காரன் போல் தெரிகிறது. அதுதான் புரியாமல் பேசுகிறாய். இந்தக் குளத்தில் ஒரு முதலை இருக்கிறது. தண்ணீரில் கால் வைத்தால் குளத்திற்குள் இழுத்துச் சென்று விடும்.
தெரியாமல் எத்தனையோ பேர் இறங்கி இறந்து போயிருக்கிறார்கள்.
கண் முன் தண்ணீர் இருக்கிறது.அதை எடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றவர் உள்ளே சென்று விட்டார்.
மாலையாகிவிட்டது. குளத்துப் பக்கம் யாரும் வரவில்லை. வீதியே வெறிச்சோடிக் கிடந்தது.
இதுதான் சரியான நேரம் என நினைத்த
சங்குராஜா மெதுவாக குளத்துப் படிகளில் இறங்கினான்.
முன் எச்சரிக்கையாக கத்தியை கையில் வைத்துக் கொண்டான் சங்குராஜா.
குளத்தில் தண்ணீர் எடுத்துக் குடிக்க கையை வைத்தான்.
வேகமாக முதலை வருவதைக் கண்டு விலகி கத்தியால் ஓங்கி குத்தினான் சங்குராஜா.
குறி தப்பாமல் தலையில் கத்தி இறங்கியது. மீண்டும்… மீண்டும் உருவி கத்தியால் மாறி… மாறி குத்தினான்.
முதலை இறந்தவுடன் இழுத்து கரையில் போட்டுவிட்டு அவனும் மயங்கி கீழே விழுந்துவிட்டான்.
காலை விடிந்தது சூரியன் தன் கதிர்களை வீசத் தொடங்கினான்.
மக்கள் நடமாடத் தொடங்கினார்கள்.
குளத்துப் பக்கம் வந்த ஒருவர், முதலை செத்துக் கிடப்பதையும் ஒரு இளைஞன் மயங்கிக் கிடப்பதையும் கண்டு ஆச்சரியத்தில் ‘ஆ’என கத்தி விட்டான்.
என்ன எனப்பார்க்க ஓடி வந்த மக்கள் குளத்திற்கு வந்தார்கள்.
சிறிது தண்ணீர் எடுத்து சங்குராஜா முகத்தில் தெளித்தார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.