ஒருவன் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்கும் வரை கவலை இன்றி இருக்கிறான்.

இந்த நாளில் ‘நீ மரணம் அடைவாய்’ என்று தெரிந்து விட்டால் போதும் தினம் இறப்பது போன்ற பயம் அவனைக் கொல்லும்.

அந்த நிலையில் தான் சுரேஷ் தம்பதிகள் இருந்தார்கள்.

ஆறாவது வயதும் வந்துவிட்டது. மாதம் அப்படியே இருக்கக் கூடாதா என்று தாய் உள்ளம் பலவாறு எண்ணித் துடித்தது.

யார் அழுதால் என்ன? யார் சிரித்தால் என்ன? கால தேவன் அவன் கடமையை செய்து கொண்டுதான் இருந்தான்.

வருடங்கள்… மாதங்களாகி மாதங்கள் வாரங்களாகி இன்னும் இரண்டே நாள்தான் இருந்தன.

பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து. தன் கையால் தானம் செய்வதை விட ஒரு துன்பம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

தன் தாய் அடிக்கடி அழுவதையும், கவலையுடன் இருப்பதையும் அறிந்தான் சுதாகர்.

“அம்மா ஏன் வருத்தப்படுகிறீர்கள் அழுகிறீர்கள்? எனக்குச் சொல்ல மாட்டீர்களா?” என்று அன்புடன் தன் தாயின் மடியில் அமர்ந்து கொண்டு தன் தாயின் வாடிய முகத்தையே பார்த்தான் சுதாகர்.

இனி மறைத்து தான் என்ன பயன். நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. சாமியாரிடம் கொடுக்கும் போது இவனுக்குத் தெரியத்தானே போகிறது. அதை இப்போதே சொல்லிவிடலாம் என்று கருதியை சுதா. உண்மையைச் சொன்னாள் மகனுக்கு.

இதைக் கேட்ட சுதாகர் இதற்காகவா, நீங்கள் கவலைப்படுகிறீர்கள். என்னை அழைத்துப் போகும் சாமியாருடன் சென்று நான் உங்களிடமே திரும்பி வருவேன். நீங்கள் வருத்தப்படாமல் என்னை அனுப்பி வையுங்கள். என்று துணியுடன் கூடிய சுதாகர் தனது தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

அவன் உறுதியைக் கண்ட சுதா. தனது மகன் கண்டிப்பாக கிடைப்பான் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

சாமியாரும் தான் சொன்னது போல் சுதாகர் ஏழாவது பிறந்தநாள் அன்று வந்து நின்றார்.

சுதாகரை உச்சி முகர்ந்து கண்ணீர் மல்க சாமியாரிடம் ஒப்படைத்தார்கள்.

சாமியாரும் சுதாகரை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஊரை எல்லாம் கடந்து, வயல் வரப்பு எல்லாம் தாண்டி காட்டுக்குள் அழைத்து வந்தார்.

உன்ன உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் வந்ததால் சுதாகர் மிகவும் களைத்து விட்டான்.

கால்கள் வலித்தது, நாக்கு வறண்டு போனது. “சாமி எனக்கு தண்ணீர் வேண்டும், என்று உட்கார்ந்து விட்டான்.

இந்தக் காட்டில் யார் உனக்கு தண்ணீர் கொடுப்பார்கள் என்னுடன் நடந்து வா! என்றார் சாமியார்.

என்னால் அது ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும்” என்று பேச முடியாமல் கையால் ஜாடை செய்தான்.

நிலைமையைப் பார்த்த சாமியார். எங்காவது புகை தெரிகிறதா? என்று இந்த மாரத்தின் மேலே ஏறிப்பார் என்றார்.

சுதாகரும் மரத்தில் ஏற முடியாமல் மெதுவாக ஏறிப்பார்த்தான்.

தூரத்தில் புகை வருவது தெரிந்தது. அதை சாமியாரிடம் சொன்னான் சுதாகர்.

“கீழே இறங்கு” என்றார் சாமியார்.

சுதாகரும் கீழே இறங்கி வந்தான்.

மண்ணில் எச்சியைத் துப்பிய சாமியார். இந்த எச்சில் காய்வதற்குள் வந்து விட வேண்டும். புகை வந்த பக்கம் போய் தண்ணீர் குடித்து வா! என்று அனுப்பினார்.

சுதாகர் மெல்ல நடந்து… புகை தெரிந்த இடத்தை அடைந்தான்.

அது ஒரு பாழடைந்த மாளிகை. அதற்குள் மனிதர்கள் வசிப்பது போன்ற தெரியவில்லை.

மிக  மெதுவாக மாளிகைக்குள் எட்டிப் பார்த்தான்.

அவன் கண்ட காட்சி சில வினாடிகள் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

மாளிகையின் நடுவில் ஒரு கூடு இருந்தது. அதில் சில முட்டைகள் இருந்தன.

அந்த முட்டையைக் குடிக்க ஒரு நாகம் கூண்டை நோக்கி போய் கொண்டு இருந்தது.

முட்டையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சுதாகர் ஓடிச்சென்று ஒரு பெரிய கல்லை எடுத்து பாம்பின் தலையில் போட்டான்.

“பாம்பு செத்தது”

முட்டையில் இருந்து ‘குஞ்சு’ பொரித்து குஞ்சுகள் வெளிவந்தன.

குஞ்சுகள் பெரியதாக இருப்பது கண்டு சுதாகர் வியந்தான்.

அன்றன்டா பட்சி குஞ்சுகள் சுதாகரை கண்டவுடன் சந்தோஷத்தில் கத்தின.

“எங்கள் உயிரைக் காப்பாற்றிய உங்களை நாங்கள் சும்மா அனுப்ப மாட்டோம்” என்றது ஒரு குஞ்சு.

“எங்கள் அம்மா,அப்பா வரும் வரை இங்கு ஒளிந்து இருங்கள் நாங்கள் கூப்பிடும் போது வாருங்கள்.” என்றது மற்றொரு குஞ்சு.

  சிறிது நேரம் கழித்து அன்றன்டா பட்சிகள் வந்தன. “உள்ளே வரும்போது ஆண் வாடை அடிக்குது, பெண் வாடை அடிக்குது” யார் நம் கோட்டைக்குள் ஒளிந்திருப்பது என்று கூறிக் கொண்டே வந்தன.

பாம்பு கல்லடி பட்டு இறந்திருப்பது கண்டு வியப்பால் இரு பட்சிகளும் பார்த்துக் கொண்டன.

பின் கூட்டின் அருகில் பறந்து வந்தன. கூட்டில் குஞ்சுகள் இருப்பது கண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தன.

குஞ்சுகளும் தங்கள் பெற்றோரைக் கண்ட சந்தோஷத்தில் தாவித்….தாவி..  குதித்தன.

அன்றன்டா பட்சிகள் தனது அலகால் குஞ்சுகளை வருடி மகிழ்ந்தது.

இதுதான் சமயம் என யோசித்த குஞ்சுகள்.

“அம்மா, அப்பா எங்களை காப்பாற்றிய வரை காண்பிக்கிறோம் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுங்கள்” என்று கெஞ்சின குஞ்சுகள்.

உங்களை காப்பாற்றியவர் எங்கே? முதலில் அவரை அழையுங்கள். அவருக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். என்ற பட்சிகளின் குரலைக் கேட்டு குஞ்சுகள் ஆனந்தக் கூச்சலிட்டன.

சுதாகர் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.

அவனைச் சுற்றி பட்சிகள் சுற்றி… சுற்றி வந்தன நன்றியுடன்.

அவ்வளவு பெரிய பட்சியை இதுவரை பார்த்ததே இல்லை சுதாகர். மனதிற்குள் பயமாகவும் இருந்தது.

கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply