சுதாகரை உக்கார வைத்து குஞ்சுகளையும் அழைத்து பழங்களை சாப்பிட கொடுத்தன பட்சிகள்.
பசியுடன் இருந்த சுதாகர் களைப்பு தீர சாப்பிட்டான். தாகம் தீர தண்ணீர் குடித்தான்.
தான் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த சுதாகர்.பட்சிகளிடமும், குஞ்சுகளிடமும் சொல்லி விடை பெற முற்பட்டான் சுதாகர்.
நீ எங்கு செல்ல வேண்டும் என்று பட்சிகள் கேட்டன.
சுதாகர் தன் கதையை சுருக்கமாகச் சொல்லி இப்போது சாமியாரிடம் போக வேண்டும் என்று சொன்னான்.
இதைக் கேட்ட பட்சிகள் “குழந்தாய் இந்த சாமியார் சுயநலம் பிடித்தவன்”
“அவன் நலம் பெற உன்னை பலி கொடுக்க அழைத்துப் போகிறான்’ என்றன.
உனக்கு சில யோசனைகள் சொல்கிறேன். அது போல் செய் என ரகசியமாக சொல்லிக் கொடுத்தன.
பறவைகளிடமும், குஞ்சுகளிடமும் விடை பெற்றுக் கொண்டு சுதாகர் நடந்தான்.
வரும் வழியில் ஒரு முள்ளை எடுத்து காலில் குத்திக் கொண்டு நொண்டி… நொண்டி நடந்து சாமியார் முன் வந்தான்.
அவனைப் பார்த்த முனிவருக்கு மிகுந்த கோபம். இவ்வளவு நேரமா தண்ணீர் குடிக்க என்றவனின் கண்கள் கோபத்தில் அனலைக் கக்கின.
விரைவாக வரும் போது முள் குத்திவிட்டது. என்று ரத்தம் சொட்டும் கால்களை காண்பித்தான்.
சரி… சரி என்னுடன் வா! என்று நடக்கலானார்.
மெதுவாக நடங்கள் சாமி என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்று தாங்கி… தாங்கி நடந்தான்.
இருவரும் வெகு தூரம் நடந்து காட்டில் இருக்கின்ற நதிகள் உள்ள ஒரு பழைய கோயிலுக்கு வந்தார்கள்.
கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தை காட்டிய சாமியார் போய் குளித்துவிட்டு வா! என்று கூறினார்.
பயத்துடன் சுதாகர். சாமி எனக்கு எங்கம்மா தான் குளிக்க வைப்பார்கள் குளத்தில் எப்படி குளிப்பது என்று எனக்குத் தெரியாது என்றான்.
சரி என்னுடன் வா, நான் குளிப்பதைப் பார்த்து அது போல் குளி.என அழைத்துச் சென்றார் முனிவர்.
குளத்தில் இறங்கி தண்ணீரில் முங்கி…முங்கி குளிப்பதைப் பார்த்த சுதாகர் அவனும் அப்படியே குளித்துவிட்டு வந்தான்.
“கோயிலை மூன்று முறை சுற்றி வா” என்றார் சாமியார்.
சாமி எனக்கு பயமாக இருக்கிறது
நீங்களும் வாங்க என்றான்.
சரி வா என்றவர் கோயிலை சுற்ற ஆரம்பித்தார்.
அவர் பின்னால் சுதாகரும் சுற்ற ஆரம்பித்தான்.
மூன்று முறை சுற்றி முடிந்ததும் கோயிலின் முன் வந்து நின்றார்கள் இருவரும்.
கும்பிட்டு விழு என்றார் சாமியார்.
சாமி எனக்கு எப்படி வணங்குவது என்று தெரியவில்லை என்றான் பயத்துடன் சுதாகர்.
பிள்ளை இல்லை என்பதற்காக இப்படியா?ஒன்றும் தெரியாமல் வளர்ப்பது என்று சுதாகர் அம்மா, அப்பாவை திட்டினார் சாமியார்.
சரி, இது போல் செய் என்று சாமியார் அம்மனை வணங்கி சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கினார்.
இதுவரை பயந்தவன் போல் இருந்த சுதாகர் அம்மனுக்கு முன் இருந்த அரிவாளை எடுத்து தலையில் ஒரே வெட்டாக வெட்டினான். தலை தனியாக உருண்டு ஓடியது.
அம்மன் கோயில் உள் கதவுகள் படீர்… படீரெனத் திறந்தது.
கோயில் மூலஸ்தானத்தில் பொன், பொருள் எனக் குவிந்து கிடந்தது தெரிந்தது.
சுதாகர் உள்ளே சென்று அம்மனை வணங்கி குங்குமச்சிமிழ் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
சாமியார் தன்னை காளிக்கு ‘பலி’ கொடுத்து பொன்னும், பொருளும் வரங்களையும் பெறவே காளி கோயிலுக்கு அழைத்துப் போவதையும் சாமியாரை பலி கொடுத்து அம்மன் குங்குமத்தை மட்டும் எடுத்துக் கொள்.
அக்குங்குமத்தை வைத்து நீ என்ன நினைத்தாலும் நடக்கும் என்று பட்சிகள் மட்டும் சொல்லவில்லை என்றால்!…
இன்நேரம் காளிக்கு பலியாகி இருப்பேன் என பலவாறு சிந்தித்த வண்ணம் நடந்து கொண்டு இருந்தான் சுதாகர்.
காட்டு வழியாக நடந்து வந்ததில் பல ஆண்டுகள் கடந்து விட்டது. சுதாகரன் வாலிபன் ஆகிவிட்டான்.
அப்போது “அம்மன் குங்குமத்தில் அப்படி என்ன அற்புதம் இருக்கிறது என அறிய சிறிய குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டான் சுதாகர்.
நான் அழகிய இளவரசனாக வேண்டும் என நினைத்தான். அடுத்த கணமே அழகிய இளவரசனாக நின்றான்.
இந்த நிலையில் ஊருக்குப் போனால், அழகுக்காக மயங்குபவர்கள் தான் இருப்பார்கள்.
உண்மையான அன்பு உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணினான் சுதாகர்.
ஒரு நொண்டியாக மாற வேண்டும் என எண்ணினான்.அப்படியே நொண்டியாக மாறினான்.
காளியின் அருளை எண்ணி வியந்து கொண்டு நடந்தான் சுதாகர்.
பல ஆண்டுகள் காட்டுக்குள் சுற்றி வந்ததில் தாடி, மீசையுடன் மிகவும் தாள்ளாடி நொண்டி… நொண்டி வந்தான்.
தாகமாக இருந்தது. தண்ணீர் கிடைக்குமா? என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.
சற்று தூரத்தில் கிணற்றில் பெண்கள் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
நொண்டி…நொண்டி கிணற்றின் அருகில் வந்த சுதாகர் தண்ணீர், தண்ணீர் என்று கையை காண்பித்தான்.
இவனைப் பார்த்தாலே அருவருப்பாக உள்ளது. இந்த நொண்டிக்கு யார் தண்ணீர் கொடுப்பது என்று சொல்லிவிட்டு எல்லோரும் சென்று விட்டார்கள்.
சோர்ந்து போய் அங்கே உட்காந்து விட்டான் சுதாகர்.
அன்பே வடிவாய்! அடக்கமே உருவாய் ஒரு அழகிய பெண் குடத்துடன் வந்தாள் கிணற்றுக்கு.
சுதாகர் தண்ணீர்… தண்ணீர் என்று அமர்ந்திருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு தண்ணீர் இறைத்துக் குடிக்க ஊற்றினாள்.
நீ நல்லா இரும்மா? நல்லா இரு என்று கூறிய சுதாகர். நொண்டி… நொண்டி நடக்கலானான்.
அப்பெண் குடத்தை நிறைத்துக் கொண்டு அன்ன நடை நடந்து அவள் வீட்டை நோக்கிச் சென்றாள்.
அவள் பின்னாலே சென்ற சுதாகர். அவள் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான்.
குடத்தை உள்ளே வைத்துவிட்டு வெளியில் வந்தால் சுபா.
என்னையா? குடிக்க தண்ணீர் கொடுத்தால், இருக்க இடம் கேட்பாய் போல் இருக்கிறது, என்றாள் சுதாகரைப் பார்த்து.
“அம்மா… புண்ணியவதி இந்த ஊரில் என் மேல் இரக்கப்படும் ஒரே ஜீவன் நீ தான்”
“என்னய்யா… வாய் கொழுப்பா”
“ தப்பா… எடுத்துக் கொள்ளாதே தாயே! நான் தண்ணீர் கேட்டு யாருமே கொடுக்கவில்லை அதனால் சொன்னேன்” என்றான் சுதாகர்.
“இந்த ஒட்டுத் திண்ணையில் முடங்கிக் கொள்கிறேன்” என்றான் சுதாகர்.
சுபாவிற்கும் அவனைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது.
“இருந்து கொள் என் அண்ணன்கள் வந்தால் திட்டுவார்கள். எப்படியாவது சமாளித்துக் கொள்” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.
சுபா… சுபா.. என அழைத்துக் கொண்டு ஏழு அண்ணன்கள் வந்தார்கள்.
ஓ… பெயர் சுபாவா! நல்ல பெயர் சுதாகருக்கு பொருத்தமான சுபா என மனதிற்குள் சொல்லிக் கொண்டான் சுதாகர்.
“யாருடா நீ எங்க வீட்டு திண்ணையில் படுத்து இருப்பவன்” என அதட்டும் குரல் கேட்டது.
திடுக்கிட்டு எழுந்து சுதாகர், “சாமி நான் ஒரு அனாதை ஐயா கால் வேறு நொண்டி நடக்க முடியாமல் இங்கு வந்து படுத்து விட்டேன்”.
“என் மேல் கருணை வையுங்கள் ஐயா” என மிக மெதுவாக கெஞ்சிக் கேட்டான் சுதாகர்.
நாம் வெளியில் போகும் போது தங்கைக்கு காவலாக இருந்து விட்டுப் போகட்டும் என எண்ணி அண்ணன்கள் சரி இங்கு இருந்து கொள் என்று உள்ளே போய் விட்டார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.