“மூர்க்கரை மூர்க்கரே முகப்பர்” என்ற பழமொழிப் படி நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம் என்றவர்கள்.

ஒருவரைப் பற்றி ஒருவர் பேசி வீர,தீர செயல்களை சொல்லிக் கொண்டார்கள். நாம் ஒரே தொழில் செய்பவர்கள். எனவே, இனி ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

பிறகு இருவரும் ஒரே திசையில் நடக்கத் தொடங்கினார்கள். வெகு தூரம் நடந்த பின் ஒரு காடு வந்தது.

அந்தக் காட்டில் நடுவில் ஒரு குடிசை தெரிந்தது. அங்கு சென்று சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம்  என இருவரும் அக்குடிசையை  நோக்கிச் சென்றார்கள்.

அக்குடிசையில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். பார்ப்பதற்கு சாது போல் தெரியும் அந்தப் பாட்டி மிகவும் சாமர்த்தியமான கில்லாடி.

இல்லை என்றால் இந்த காட்டில் தன்னந்தனியாக வாழ முடியுமா?

அந்தக் காட்டில் பச்சைப்புல் அதிகமாக இருப்பதால் மாடு மேய்க்க, புல் அறுக்கு வருபவர்கள் அதிகம்.

வழிப்போக்கர்கள், திருடர்கள் கூட அங்கு வந்து பசியாறி, தங்கிச் செல்வதுண்டு.

பாட்டியும் ருசியான பலகாரங்களை செய்து ஒன்றுக்கு இரண்டு விலை வைத்து விற்பாள்.

நடுக்காட்டில் அவளை விட்டால் வேறு கதி ஏது? எனவே, சொன்ன விலைக்கு மறுப்புச் சொல்லாமல் வாங்கி சாப்பிடுவார்கள்.

பாட்டியும் சற்றும் சலியாது நள்ளிரவு ஒரு மணி ஆனாலும் அரிசி ஊறவைத்து மாவாட்டி தோசை சுடுவாள், பலகாரம் செய்வாள்.

இப்படி சம்பாதித்த பணத்தில் நாற்பது காணி நிலம் வாங்கிப் போட்டிருந்தாள் பாட்டி.

பால் மாடுகள்  இருபதுக்கும் மேல் வைத்திருந்தாள் பாட்டி.

அந்தப் பாட்டியின் குடிசைக்குத்தான் மாடசாமியும், கந்தசாமியும் வந்து கதவை தட்டினார்கள்.

இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது? என்று கேட்டுக்கொண்டே பாட்டி கதவைத் திறந்தாள்.

வெளியில் நின்று கொண்டிருந்த மாடசாமியும், கந்தசாமியும் பாட்டியைப் பார்த்தவுடன் நாங்கள் வழிப்போக்கர்கள் ஒரே பசியாக இருக்கிறது பழையதாவது கிடைக்குமா? என்றார்கள் இருவரும்.

பாட்டியும் கதவை திறந்து விட்டவள் உள்ளே வரும்படி வரவேற்றாள். “கொஞ்சம் ஆப்பமாவு இருக்கிறது சுட்டுத் தருகிறேன் இருங்கள்” என்றவள் உள்ளே சென்றாள்.

வரும்போது சுடச்சுட ஆப்பத்துடன் வந்த பாட்டி இருவருக்கும் கொடுத்தாள். சாப்பிட்டு முடித்த பின் சுக்கு காபி வேறு போட்டுக் கொடுத்தாள்.

நாள் முழுவதும் சாப்பிடாமல் நடந்து வந்த இருவருக்கும் அப்பாடா என்று இருந்தது.

“எங்கிருந்து வருகிறீர்கள்” என பாட்டி விசாரித்தாள்.

இருவரும் தங்கள் தில்லு  முல்லுகளை  மறைத்து தொழில் செய்து பிழைக்க வந்திருப்பதாக கூறினார்கள்.

பாட்டியும் அகமகிழ்ந்து அப்பா! நீங்கள் எனது பிள்ளைகளைப் போல இருக்கிறீர்கள், எனக்கோ! வேறு யாரும் இல்லை. நீங்கள் பொறுப்போடு வேலை செய்தால் எனக்குப் பின் இந்த சொத்துக்களை எல்லாம் இரண்டு பேரும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்.

சரியான ஏமாளி பாட்டி என நினைத்துக் கொண்ட இருவரும் மனதிற்குள் மகிழ்ந்து கொண்டு, என்ன வேலை செய்ய வேண்டும் பாட்டி என அன்பொழுகக் கேட்டனர்.

என்னிடம் உள்ள மாடுகளை ஒருவன் மேய்த்து வரவேண்டும். காலையில் மாடுகளை ஓட்டிச் சென்றால் ஓய்வாக படுத்திருந்துவிட்டு மாலையில் மாடுகளை ஓட்டி வரலாம்.

மதியம் வெயிலுக்கு பழைய சாதமும், பச்சை மிளகாவும் தருகிறேன். மா,கொய்யா, நாவல் மரங்களில் கனி பறித்து உண்ணலாம், சுனை நீர் உண்டு நீர் குடித்து மகிழலாம் என்றவள்.

இன்னொருவன் எனது வயலுக்குச் சென்று நீர் ஒரு அங்குலம் தேங்கி இருக்கும் அளவு இறைக்க வேண்டும்.

உங்களுக்கு எந்த வேலையை யார் செய்ய விரும்பினாலும் சரி என்ற பாட்டி நிறுத்தினாள்.

“சரி பாட்டி நாங்கள் வேலையை செய்து கொண்டு உங்களுடனே தங்கி விடுகிறோம்” என மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்கள்.

மறுநாள் சூரிய உதயத்தில் எழுந்தார்கள் பாட்டி சுட்டுக்கொடுத்த தோசையை சாப்பிட்டு விட்டு ஏற்றம் இறைக்கப் போனான்  மாடசாமி.

மாடுகளை ஓட்டிச் சென்றான் கந்தசாமி. மாடுகள் முதலில் ஒழுங்காகத்தான் வந்தன. கொஞ்ச நேரம் ஆனதும் திசைக் கொன்றாக பிய்த்துக் கொள்ளத் தொடங்கின.

சற்று நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாமல் ஓடி.. ஓடி சோர்ந்து போனான் கந்தசாமி.

வயலுக்கு நீர் இறைக்கச் சென்ற மாடசாமி கீரைப் பாத்தியும், கொஞ்சம் காய்கறி செடிகளும் தானே! என அலட்சியமாக ஏற்றம் இறைத்தான்.

ஆனால், என்ன ஆச்சரியம்! பாத்திகளில் இறைத்து விட்ட நீர் எதுவும் இல்லை செடிகள் ஈரமாக இருந்தனவே அன்றி ஒரு அங்குலம் கூட நீர் நிறைய வில்லை.

பாட்டி யாருக்கும் தெரியாதபடி வயல்களில் ஊடே ஒரு சுரங்கப் பாதை அமைத்திருந்தாள்.

மற்றவர்களிடம் வேலை வாங்க இப்படி பாட்டி ஏற்பாடு செய்திருந்தாள். இறைக்கும் நீர் எல்லாம் நாற்பது காணி நிலத்திற்குப் போய் கொண்டிருந்தது.

சூரியன் மாலையில் மறையத் தொடங்கினான். அங்கு வந்த பாட்டி.

அப்பா! மாடசாமி மிகவும் சோர்ந்து விட்டாய்! இன்று இவ்வளவோடு நிறுத்திக்கொள் நாளைக்கு இறைக்கலாம்.

வெகு நாட்களாய் தண்ணீர் காணாத நிலம் நீர் வாங்கி விட்டது கீரைக் கூட்டும் வெண்டைக்காய் குழம்பும் வைத்திருக்கிறேன் கை, கால்களை கழுவிக்கொண்டு சாப்பிட வா! என்றாள் பாட்டி.

பாட்டியின் அன்பு வார்த்தைகளைக் கேட்ட மாடசாமி நன்றியுடன் பாட்டியின் முகத்தைப் பார்த்துவிட்டு கை, கால் கழுவி விட்டு குடிசைக்கு வந்தான்.

சுடச்சுட பாட்டி சமைத்த உணவை உண்டு ஓய்வெடுத்தான்.

மாடுகளுடன் ஒரு வழியாக வந்த கந்தசாமி. மாடசாமி ஓய்வாக இருப்பது கண்டு இவன் பாடு பரவாயில்லை.

வயலுக்கு கொஞ்சம்  தண்ணீர் இறைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். நான் ஏமாந்து விட்டேன். நாளை வேலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தான் கந்தசாமி.

அதே சமயம் மாடசாமியும் அதே சிந்தனையில் இருந்தான்.

நாள் பூராவும் ஏற்றங்கால் பிடித்து கை எரிகிறது. தோள் வலிக்கிறது. இவன் நிம்மதியாக மாடுகளை ஓட்டிக்கொண்டு போய் மேய விட்டு நிழலில் தூங்கிவிட்டு மாலை ஆனதும் மாடுகளுடன் வந்துவிட்டான்.

என் வேலைப் பளுவைச் சொல்லாமல் நாளை மாடு மேய்க்க நாம் போக வேண்டும் என மாடசாமி எண்ணிக்கொண்டான்.

மாடுகள் அலைய விட்டதா கந்தசாமி? என்றான் மாடசாமி.

“அப்படி ஒன்றும் இல்லை ரொம்ப சாதுவான மாடுகள் தானாக வளர்ந்த புல்லை மேய்ந்து சுனை நீர் அருந்து சமத்தாக இருந்தன” என்ற கந்தசாமி.

நாவல் பழம் என்ன ருசி.. என்ன ருசி. என நாக்கைச் சப்புக் கொட்டியவன், என் வேலை இருக்கட்டும் உன் வேலை எப்படி? என்றான் சந்தோசத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்ட கந்தசாமி.

முகத்தில் சந்தோசம் இருந்தால் தானே மாடசாமி நம்புவான் என்பதற்காக செயற்கையாக சிரித்தான்.

மாடசாமியும் சிரித்துக் கொண்டே நீயாவது சுனை வரை நடந்தாய் நான் வயலுக்குச் சென்று சிறிது நேரத்தில் பாத்தி நிறைந்து விட்டது. வந்து கை, கால் கழுவி சுடச்சுட சாப்பிட்டு விட்டேன். உனக்கு ஆறியதுதான் போ! என்றான்.

இருவருக்குமே ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறோம் என்பது தெரியவில்லை.

எல்லாவற்றையும் கேட்காதது போல் இருந்த பாட்டி கவனமாகக் கேட்டுக் கொண்டே மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

இரவு சாப்பிட்டுவிட்டு வேலை செய்த சோர்வில் இருவருமே அயர்ந்து உறங்கிப் போனார்கள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது  கந்தசாமி! நம் வேலையை மாற்றிக் கொள்வோமா? என்றான் மாடசாமி.

நான் நினைத்தேன் நீ சொல்லி விட்டாய் சுனையின் சுகத்தையும் நாவலின் ருசியையும் நீ அறிய வேண்டாமா? என்று சந்தோசமாகச் சொன்னான்  கந்தசாமி.

வேலையை மாற்றிக் கொண்ட சிறுது நேரகத்தில் ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருக்கிறோம் என்பதை இருவருமே புரிந்து கொண்டார்கள்.

மாலை ஆனது குடிசைக்கு வந்த மாடசாமி சோர்வு மாறாத குரலில் இப்படி ஏமாற்றலாமா? கந்தசாமி என்றான்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்

Share.

Leave A Reply