தரையில் இறங்கிய ரவிவர்மா கம்பளத்தின் முன் நின்று, “தாயே காளிகா தேவி உன் கருணையினால் நான் இங்கு வர முடிந்தது குகைக்குள் செல்ல எந்த தடையும் வரக்கூடாது” என வேண்டினான்.

பின் குகைக்குள் செல்லத் தொடங்கினான் ரவிவர்மா.

எந்த தடையும் இன்றி குகைக்குள் சென்றான். அங்கு ஒரு பெட்டி இருப்பதைக் கண்டான். அதைப் பார்த்த ரவிவர்மா அதிர்ச்சியுற்று பின் நகர்ந்தான்.

பெட்டியைச் சுற்றி சிறிதும்,  பெரிதுமாக ஏகப்பட்ட நாகப்பாம்புகள் படம் எடுத்து ஆடியது.

“காளியின் அருள் பெற்ற நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. இப்போது பெட்டியை விட்டு நீங்களாக நகர்ந்து கொள்ளுங்கள்” என்றான்.

“ தர்மம் நிலைக்க நான் இங்கு வந்து இருக்கிறேன். எனக்கு அன்னை காளிகா தேவி அருள்  கிடைத்தமையால் அன்னை வழி காட்டி இங்கு வந்திருக்கிறேன்.

நீங்களும் எனக்கு வழிவிட வேண்டும் என சொன்ன ரவிவர்மா மண்டியிட்டு வணங்கினான்”.

அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்ட பாம்புகள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தன.

“ அன்னையை வணங்கிய ரவிவர்மா எந்த தடையும் இல்லாமல் அப்பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் பறக்கும் கம்பளம் இருக்கும் இடம் வந்தான்.

பறக்கும் கம்பளத்தில் ஏறிய ரவிவர்மா “குரங்கு மலை குகையை” நோக்கி போக கட்டளையிட்டான்.
                    *****
இதற்கிடையில் குகையில்
“பவளவள்ளியிடம் என்று நம் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என கேட்டான் மந்திரவாதி.

பவளவள்ளியும் சிரித்துக் கொண்டே,பௌர்ணமி அன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றாள்.

அவள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பௌர்ணமி வரை காத்திருப்பது அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை மந்திரவாதிக்கு.

பௌர்ணமியும் வந்தது. திருமணத்திற்கு ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

பவளவள்ளிக்கு மனம் ‘படபட’ எனத் துடித்துக் கொண்டிருந்தது. போன காரியம் என்ன ஆனதோ தெரியவில்லையே! தேவி அம்மா…! நீ தான் எங்களை வாழ வைக்க வேண்டும் அம்மா! என மனதிற்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

அங்கு நின்ற பதுமைகளை மந்திரக்கோல் கொண்டு தட்டினான் மந்திரவாதி. அடுத்த நொடியில் அழகிய பெண்களாக மாறினார்கள்.

“ வணக்கம், தலைவா! எங்களுக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள். செய்து முடிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

மந்திரக்கோலை வைத்து ஓம்… க்ரீம்… காளி என தட்டினான். தங்கத் தாம்பலத்தில் வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், முத்து என ஒவ்வொரு தட்டாக வந்தது. வேண்டிய நகைகள் என வந்தபின் தங்கநூலில் நெய்த பட்டுப்புடவை,
உள்ளாடைகள் போன்ற பொருள்கள் வந்தன.

வகை வகையான மலர்கள், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து என்னும் பல மலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

“இவைகளை எடுத்துச் சென்று பவளவள்ளிக்கு அலங்காரம் செய்யுங்கள்” என மந்திரவாதி கட்டளையிட்டான்.

எல்லாப் பெண்களும் தட்டுக்களுடன் பவளவள்ளி இருப்பிடத்திற்கு வந்தார்கள்.

இவர்களைக் கண்ட
பவளவள்ளியின் நிலை “முள்ளின் மேல் நிற்பது போன்று இருந்தது”.

தாயே!என் கணவரை விரைவில் அனுப்பிவிடு என மனதில் வேண்டிய படி எப்படி சமாளிப்பது என யூகித்தாள்.

வைத்துவிட்டு செல்லுங்கள். நானே, என்னை அலங்காரம் செய்து கொள்வேன். என அனுப்பிவிட்டு கதவை தாளிட்டாள். காளியின் கால்களை கட்டிக் கொண்டு அழுதாள்.

இன்னும் சிறிது நேரத்தில் அழகி பவளவள்ளி என் ராணி… என் மனைவி என எண்ணி சந்தோசம் அடைந்த மந்திரவாதி இங்கும்,அங்கும் நடந்தபடி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.

அப்போது…

ரவிவர்மா அங்கு பறக்கும் கம்பளத்தில் வந்து இறங்கினான். அவன் கையில் மந்திரவாதியின் உயிர் பெட்டி இருந்தது.

ரவிவர்மாவையும், கையில் இருந்த பெட்டியையும் பார்த்த மந்திரவாதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன.

“எப்படி நீ இங்க வந்தாய் உன்னை என்ன செய்கிறேன் பார்!”என்றவன் மந்திரக் கோலை கையில் எடுத்தான்.

சிறிதும் தாமதிக்காமல் ரவிவர்மா பெட்டியை திறந்து ‘வண்டை’ கையில் எடுத்து வலது கையைப் பிய்த்தான். பின் கால் என
ஒவ்வொன்றாகப் பிய்க்க ஆரம்பித்தான்.

மந்திரக்கோலை எடுக்க  முடியாமல் “ஐயோ..அம்மா என் கை என்றவன் என் கால் போச்சு என தரையை விழுந்தான்.

என்னை ஒன்றும் செய்து விடாதே! செய்து விடாதே! என்னை விட்டு விடு.. என கெஞ்ச ஆரம்பித்தான்.

இப்போது அவன் கை, கால் இல்லாத முண்டமாக தரையில் கிடந்தான்.

“என்னை உயிருடன் விட்டுவிடு உன்…. மனைவியை அழைத்துச் செல் என்னை ஒன்றும் செய்யாதே” என மந்திரவாதி கெஞ்சினான்.

“ உனக்கு கருணை காட்டுவது தேவிக்கே பிடிக்காது.அவள் கருணையினால் தான் உன் உயிர் என் கைக்கு வந்தது.

காளிகா…தேவி… உன் பக்தனை இப்படி ஒரு நிலைக்கு தள்ளி விட்டாயே தேவி… என கத்தினான்.

அப்போது…ஒரு அசரீர குரல் கேட்டது.

பக்தா.. உன் பக்திக்காக நான் கொடுத்த வரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதால் உனக்கு இந்த தண்டனை. என் வார்த்தையை நல்ல முறையில் பயன் படுத்தினால் நான் பல நன்மைகளைச் செய்வேன்.

நீ எனது வரத்தை உபயோகப்படுத்தி மாற்றான் மனைவியை அபகரித்ததால் உனக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. என்ற குரல் மறைந்து விட்டது.

வண்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் போட்டான் ரவிவர்மா.

மந்திரவாதியும் பல துண்டுகளாக மாறி இறந்து போனான்.

பவளவள்ளி  இருந்த அறைக்குச் சென்றான் ரவிவர்மா.

அவனைக் கண்ட பவளம் ஓடி வந்து கட்டி தழுவிக் கொண்டாள்.

ரவிவர்மா அவள் தலையை அன்புடன் தடவி முத்தமிட்டான்.

பின் இருவரும் தேவியின் சிலை முன் நின்று வணங்கி அக்குகையை விட்டு வெளியில் வந்தார்கள். அவர்கள் வந்த பின் பெரிய சத்தத்துடன் குகை உடைந்து சுக்கு நூறாக விழுந்தது.

மாயத்தால் செய்த குகை இப்போதும் மறைந்து இருந்தது.

இருவரும் நிம்மதி பெரும் மூச்சுவிட்டு தங்கள் நாட்டிற்குச் சென்றார்கள்.

அங்கு இவர்களைக் கண்ட மன்னரும், மக்களும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

ரவிவர்மாவின் திறமையைக் கண்ட மன்னர் தன் மகனுக்கு ‘முடிசூட்டி’ மகிழ்ந்தார்.

ரவிவர்மா வாழ்க! பட்டத்து இளவரசர் வாழ்க! மன்னர் வாழ்க! என்ற வாழ்த்தொலி விண்ணை முட்டியது.

“நாமும் வாழ்த்தி வீட்டிற்கு செல்வோம்” என தாத்தா எழுந்தார்.

ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் சிறுவர்கள் ஓடினர்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply