இப்போது தனிமையில் விடுவது தான் நல்லது என நினைத்த மந்திரவாதி. “ நல்ல முடிவு எடுத்துவை” என்றவன் அறைக் கதவைப் பூட்டிச் சென்றான்.
கவலையே இல்லாமல் வாழ்ந்த இளவரசி இப்போது கலங்கினாள். தன்னை மீட்டிச் செல்ல இளவரசர் வருவாரா? என ஏங்கினாள்.
தினம்…தினம் வந்து மந்திரவாதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளவரசியை கட்டாயப் படுத்தினான்.
“ எனக்கு பொன், பொருள் எல்லாம் இருக்கிறது. நீ மட்டும் எனக்கு வேண்டும். நீ என்னை திருமணம் செய்து கொள் என கத்தினான்” மந்திரவாதி.
அவன் குரல் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது.
பவளவள்ளியோ பதில் கூறாது நடுங்கி, ஒடுங்கி நின்றாள்.
நீயாக என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறேன். இனி யாரும் உன்னைக் காப்பாற்ற வர முடியாது. நினைவில் வைத்துக் கொள். என்றவன் அறையைப் பூட்டிச் சென்றான்.
*****
அவன் சென்ற பின் தட்டுத் தடுமாறி இக்கட்டுகளுக்குப் பின் அந்த குகையை கண்டுபிடித்து வந்தான் ரவிவர்மா.
குகை உள்ளே எப்படிச் செல்வது என சுற்றிப் பார்த்தான். வழி எதுவும் தெரியவில்லை.
கனியை எடுத்து “தாயே நான் குகையின் உள்ளே செல்ல நீ தான் வழி காட்ட வேண்டும்” என வேண்டினான் ரவிவர்மா.
மறு நிமிடமே குகையின் வழி தெரிந்தது. அதன் வழியே உள்ளே சென்றான் ரவிவர்மா.
அங்கு பவளவள்ளியைக் கண்டான். கண்கள் சந்தோசத்தால் விரிந்தன. ‘பவளம்’ என ஓடி வந்தான் ரவிவர்மா.
வந்து விட்டீர்களா? என கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். அவள் உடல் பயத்தால் நடுங்கியது.
பவளம்! பயப்படாதே, மந்தரவாதியை உயிருடன் விட்டால் திரும்பவும் வருவான். எனவே, அவனை தந்திரமாக கொள்ள வேண்டும். என்றான்.
நான் சொல்வதைக் கவனமாக கேள். அவன் வந்தால் தந்திரமாகப் பேசி அவன் உயிர் நிலை எங்கு உள்ளது. என தெரிந்து கொள் என்றான் ரவிவர்மா.
சரி என்றாள் பவளவள்ளி. நீங்கள் என வார்த்தை வராமல் தடுமாறினாள்.
கவலைப்பட வேண்டாம் என்றவன் காளி தேவிக்கு பின் போய் மறைந்து கொண்டான்.
*****
அப்போது அங்கு மந்திரவாதி வந்தான்.
அவன் வந்தாலே நடுங்கி விடுவாள் பவளவள்ளி. இன்று தைரியமாக இருப்பது கண்டு ஆச்சரியமாக இருந்தது மந்திரவாதிக்கு.
சந்தோசத்தால் அவன் முகம் மலர்ந்தது. என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? உனக்கு சம்மதம் தானே என கேட்டு அசடு
வழிந்தான் மந்திரவாதி.
எனக்கு சம்மதம் தான். ஆனால், என நிறுத்தினாள்.
ஆனால்…. என்ன? பவளவள்ளி. எதுவாக இருந்தாலும் சொல் என்றான் உற்சாக மிகுதியால் மந்திரவாதி.
நீயோ மந்திரவாதி உனக்கு மந்திர தந்திரம் தெரியும். நான் உன்னை திருமணம் செய்தால் நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று எப்படி நம்ப முடியும். திடீரென இறந்து விட்டால் இந்த குகையிலேயே நானும் சாக வேண்டியது தான் அதை நினைத்தால் பயமாக இருக்கிறது என்றாள்.
“ஆஹா…ஹா…. ஹா…”என சிரித்தவன்.
இந்த பயமே உனக்கு வேண்டாம்.என் உயிர் ஏழு கடல் தாண்டிச் சென்றால் அங்கே ஒரு அடர்ந்த காடு உள்ளது. அதன் நடுவில் ஒரு குகை இருக்கிறது. அதற்குள் செல்ல வேண்டுமானால் காளியின் அருள் பெற்று இருக்க வேண்டும்.
“அக்குகைக்குள் ஒரு பெட்டி இருக்கிறது. அதைச் சுற்றி நாகம் காவலுக்கு உள்ளது.
அப்பெட்டிக்குள் ஒரு வண்டு இருக்கும். அதை எவன் கொல்கிறானோ அப்போதுதான் நான் இறப்பேன். இவ்வளவும் ஒருவனால் செய்ய முடியும்” காரியமா பெண்ணே!
“ நீ கவலையை மறந்து என்னை ஏற்றுக்கொள் அழகுச் சிலையே! என்றான்.
உன் கரம் என் கரத்தைப் பற்றும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்.
“இன்று நான் மிகவும் சந்தோசத்தின் உச்சிக்கே போய் விட்டேன் பெண்ணே! நீ சம்மதித்தால் ஒரு உண்மையை கூறுகிறேன”. என்றான் மந்திரவாதி.
“நான் எல்லோரையும் போல் சாதாரணமாகத்தான் இருந்தேன். என்னுடைய கோரமான முகத்தைப் பார்த்து எல்லோரும் கேலி
செய்து சிரித்தார்கள்.”
இவனுக்கு ரதியைத் தான் கட்டி வைக்க வேண்டும் என கிண்டல் செய்து சீண்டிவிட்டார்கள்.
அவர்கள் சொன்ன வார்த்தைகள் என் மனதில் புரைபோல் வளர்ந்து விட்டது.
“நகரமே வேண்டாம் என காட்டிற்கு வந்து ‘காளியை’ நினைத்து தவம் செய்து மந்திரவாதியாகி என்னைக் கேலி செய்தவர்களை கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்றான்.
உலகத்திலேயே முதல் அழகி நீதான் என்பதை மாயக்கண்ணாடியில் கண்ட நான் உன்னைத் திருமணம் செய்து மனப்புண்ணை ஆற்ற வேண்டும். உன் காலடியில் மண்டியிட்டு காலம் முழுவதும் கிடப்பேன் பெண்ணே! கிடப்பேன்” என்றவன் அக்குகையை விட்டு சென்று விட்டான்.
அவன் கதை சோகமாக இருந்தாலும், அவன் வழி தவறி செல்கிறான். இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே? என பவளவள்ளி நினைத்தாள்.
*****
அப்போது காளியின் பின் மறைந்து இருந்த ரவிவர்மா வெளியில் வந்தான். நடந்த அனைத்தையும் கேட்டேன். நான் திரும்பி வரும் வரை கவலைப்படாமல் இருக்க வேண்டும் பவளம் என்றான்.
காளி தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு இரு. நாம் இருவரும் ஒன்று சேர தேவி கருணை செய்வாள். என்ற ரவிவர்மா காளியை வணங்கிச் சென்றான்.
குகைக்கு வெளியில் வந்த ரவிவர்மா கனியை கையில் எடுத்து காளியை வணங்கினான்.
தாயே ஏழு கடலையும் தாண்டிச் செல்ல பறக்கும் கம்பளம் ஒன்று கொடு தாயே என வேண்டினான் ரவிவர்மா.
சில வினாடிகளுக்குப் பின் பறக்கும் கம்பளம் ஒன்று அவன் முன் தோன்றியது.
அதில் ஏறிய ரவிவர்மா, ஏழு கடலையும் தாண்டும்படி கட்டளையிட்டான்.
பறக்கும் கம்பளம் ஒவ்வொரு கடலாக பறந்து ஏழாவது கடலை தாண்டி வந்து நின்றது.
அடர்ந்த காடு தெரிந்தது அதன்மேல் பறக்கச் சொன்ன ரவிவர்மா மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டே வந்தான்.
காட்டின் மையப் பகுதி வந்தவுடன் ஒரு குகை தென்பட்டது. அதை கண்ட ரவிவர்மா முகம் பிரகாசமானது.
பறக்கும் கம்பளமே கீழே இறங்கு என கட்டளையிட்டான்.
மறுநிமிடமே கம்பளம் கீழே இறங்கத் தொடங்கியது. குகையின் முன் கம்பளம் இறங்கி நின்றது.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.