அதிர்ந்து போனான் குமார். எவ்வளவு பெரிய வேலையை இவ்வளவு குறுகிய நேரத்தில் செய்து விட்ட பூதத்தை நினைத்து மனதிற்குள் பயம் தோன்றியது.

வெளியில் காட்டிக் கொள்ளாமல், வா! பார்க்கலாம் என அழைத்துச் சென்றான்.

கிணறு தூர் எடுத்து தெளிந்த நீர் நிறைந்து இருந்தது. இறைப்பதற்கு ஏற்றமும்,இறங்கி ஏற வசதியாகப் படிக்கட்டும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.

வியப்பில் ஆழ்ந்த குமார், அடுத்து என்ன வேலை கொடுக்கலாம் என யோசித்தான். கண்களை சுற்றும், முற்றும் சுழல விட்டான்.

பக்கத்தில் உள்ள ஏரி தென்பட்டது.

“பூதமே! இந்த ஏரியை ஆழப்படுத்தி கரை கட்டி முடித்துவிட்டு என்னை வந்து பார்” என்றான் குமார்.

“ அப்படியே செய்கிறேன் எஜமான்” என்ற பூதம், தனக்கு கொடுத்த வேலையைச் செய்ய புறப்பட்டது.

குமாரும் வீட்டிற்கு புறப்பட்டான். வீடு வந்து சேர்ந்தான்.

அவன் முன் பூதம் வந்து நின்றது.

“ நான் சொன்ன வேலையை முடிக்காமல் இங்கு என்ன செய்கிறாய்” என்றான் குமார் மிரட்டலாக.

முடித்து விட்டேன் எஜமான். அடுத்த வேலையைச் சொல்லுங்கள் என்றது பணிவாக பூதம்.

“நிலத்தை உழுது வரப்பு கட்டி வா” என அனுப்பினான் குமார்.

பூதம் கிளம்பியது.

குமார் சாப்பிட்டு எழுந்தான்.

அவள் முன் பூதம் வந்து நின்றது. “அடுத்த வேலையைச் சொல்லுங்கள்” என்றது.

விதை நெல்லைக் கொடுத்து விதைக்க அனுப்பிய குமார், மிகவும் கவலையுடன் இருந்தான்.

கணவன் கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட குமதா, என்ன என விசாரித்தாள்.

நான் சொல்லும் வேலைகளை அரை மணி நேரம், கால் மணி நேரத்தில் முடித்து விடுகிறது பூதம்.
இந்த பூதத்திடம் வேலை வாங்க என்னால் முடியவில்லை.

உழைக்க சோம்பல் பட்டு மந்திரத்தால் பூதத்தைப் பெற்றேன். இன்னும் சிறிது நேரத்தில் பூதம் என்னைக் கொண்டு சாப்பிட்டு விடும். என தன்னையே நொந்து கொண்டு தனது தவறை உணர ஆரம்பித்தான் குமார்.

இதுதான் சமயம் என நினைத்த குமதா இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

நான் பூதத்திடம் வேலை வாங்குகிறேன். அது செய்ய முடியாமல் ஓடிவிட்டால், நீங்கள் உழைக்க வேண்டும் சம்மதம் என்றால் என்னிடம் அனுப்புங்கள் என்றாள் குமுதா.

என் தவறை எல்லாம் புரிந்து கொண்டேன். இனி சும்மா இருந்து சுகம் அனுபவிக்க மாட்டேன். உழைத்து உன்னை காப்பாற்றுவேன் இப்போது பூதத்திடம் இருந்து விடுதலை வாங்கி கொடு அது போதும் என்றான் குமார்.

அந்த சமயம் பூதம் அங்கு வந்தது. “வேலை கொடுங்கள் எஜமான்” என்று கேட்டது பூதம்.

“ என் மனைவி ஒரு வேலை தருவாள் அதை முடித்துவிட்டு வா” என்றான் குமார்.

“எஜமானி அம்மா நீங்கள் வேலை கொடுங்கள்” என்றது பூதம்.

உள்ளே போன குமுதா தனது சுருண்ட கூந்தலில் இருந்து ஒரு முடியை பிடுங்கி எடுத்தாள். அதை பூதத்திடம் கொண்டு வந்து கொடுத்தவள் இதை நிமித்திக் கொண்டு வா என்று கூறினாள்.

“ ஆகட்டும் எஜமானியம்மா” என்ற பூதம் முடியை நிமிர்த்தியது. பின் ஒரு கையில் பிடித்துக் கொண்டு எழுந்தது. உடனே முடி சுருண்டு கொண்டது.

மறுபடியும் நிமிர்த்தியது. கையை எடுத்த போது சுருண்டு கொண்டது. இவ்வாறு முயன்று… முயன்று முடியாமல் போகவே கவலையாக வந்து கொண்டு இருந்தது பூதம்.

ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒருவர் நகை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தது பூதம்.

தங்கக் கம்பியை உலையில் காட்டி  தட்டி… தட்டி நீட்டுவதைப் பார்த்தது பூதம். தானும் அவ்வாறு செய்ய நினைத்தது.

அவர் உள்ளே போன சமயம் பார்த்து, தானும் முடியை உலையில் காட்டியது பூதம். முடி நெருப்பில் கருகி விட்டது. இதைப் பார்த்த பூதம் பயந்துவிட்டது.

“எஜமானி அம்மா கொடுத்த வேலையை செய்யாமல் பாழ் படுத்தி விட்டேன். அது எவ்வளவு முக்கியமோ?” தெரியவில்லை. அவர்கள் இட்ட பணி முடிக்காமல் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பேன். என எண்ணிய பூதம் ஓடிவிட்டது.

ஒரு மணி நேரம் ஆனது. இரண்டு மணி நேரம் ஆனது.அரை நாள் ஆனது.

இனி பூதம் வராது என்ற முடிவுக்கு வந்தாள் குமுதா. தன் கணவனிடம் பூதம் வராது போய்விட்டது என்றாள்.
                    *****
குமாரும் பூதம் இவ்வளவு நேரம் ஆகியும் வராததால் நிம்மதி பெருமூச்சு விட்டான். உழைப்பதற்கும் தயாராகி விட்டான் குமார்.

“பார்த்தீர்களா குழந்தைகளே சோம்பலினால் எப்படி பூதத்திடம் குமார் மாட்டிக் கொண்டான். உழைத்து வாழ்ந்தால் உயர்வு மட்டும் அல்ல பிறருக்கு உதவவும் முடியும். உழைக்காமல் வாழ்ந்தால் உதவாக்கரையாகத்தான் வாழ வேண்டும் புரிந்ததா!” என்றார் தாத்தா.

இனி தூங்கி சோம்பேறியாக மாட்டேன். தாத்தா என்றான் சோமு.

தாத்தாவும் எழுந்தார் குழந்தைகளும் வீட்டிற்குச் செல்ல துள்ளலுடன் ஓடினார்கள்.

கவிஞர் ச.மல்லிகா
எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply