ஒரு வயது குழந்தையை திருமணம் செய்வாயா? என வியப்பாகக் கேட்டாள் கமலா.

“ஆமாம், எனக்கு வெகுகாலமாக அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை, அந்த மாதுளம் பழத்தை சாப்பிடும் கர்ப்பவதிக்கு அழகா பெண் பிறப்பாள் என ஒரு முனிவர் கூறுவதைக் கேட்டேன்.

அன்றிலிருந்து அந்த மரத்தை காத்து வந்தேன். பின் நடந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே? என்றது பூதம்.

இதைக் கேட்ட கமலா சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறாய்” என அதட்டலாகக் கேட்டது பூதம்.

சிரிக்காமல் என்ன செய்வது. பருவ வயதுப் பெண்ணைத் தானே திருமணம் செய்வார்கள். பச்சிளம் குழந்தையை யாராவது திருமணம் செய்வார்களா? என்றாள் கமலா.

அப்படியா! என்ற பூதம். என்னை ஏமாற்ற நினைத்தால் அத்தனை பேரையும் விழுங்கி விடுவேன். என எச்சரித்து விட்டுச் சென்றது பூதம்.

பருவ வயது வரை பூதத்திடம் இருந்து மகளை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதி பெரும் மூச்சு விட்டாள் கமலா.

குழந்தைக்கு கயல்விழி எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

கயல்விழியும் நாளொரு மேனியாகவும், பொழுதொரு  வண்ணமாக வளர்த்தாள். படிப்பு,கலை, விளையாட்டு என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினாள்.

இப்படி நாட்கள் நகர்ந்தாளும் பூதத்தின் நினைவு வேதனையைத் தந்து கொண்டுதான் இருந்தது.

மகளுக்கு பருவ வயது வந்து விட்டதால், அவளிடம் நடந்தவற்றைக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தாள் கமலா.

அந்த சமயம் பார்த்து பூதம் வந்துவிட்டது.

பூதத்தைப் பார்த்த
கயல்விழி பயந்து நடுங்கி அம்மா பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“என் கணவர் வெளியூர் போயிருக்கிறார். வர பதினைந்து நாட்கள் ஆகும். வந்த உடன் திருமணம் செய்து அனுப்புகிறோம்” என கூறினாள் கமலா.

சரி என சம்மதித்து மகிழ்ச்சியாக பூதம் சென்றது.

கயல்விழியைப் பார்த்த பூதம் போவதாகச் சொல்லிச் சென்று சிறிது நேரத்தில் ஆவியாக வீட்டுக்குள் வந்து விட்டது.

யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தது பூதம்.

வேலைக்குச் சென்று திரும்பிய கணவனிடம் நடந்தவற்றை கூறினாள் கமலா.

எங்காவது போய்விடலாம் என்றால் அது எங்கு போனாலும் வந்து நிற்கும். பூதம் வருவதற்கு முன் வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என பார்த்தார்கள்.

இவர்களின் திட்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஆவி பூதம் வெளியே வந்து கயல்விழியை  திருமணம் செய்ய வரும் மாப்பிள்ளைகளை அடித்துக் கொன்றது.

அவள் அழகில் மயங்கி வந்த மாப்பிள்ளை பலரை பூதம் கொன்று விட்டதால், அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை.

இந்த நிலையில் பதினைந்து நாட்கள் கடந்து விட்டது. அன்று மாலை அழகான வாலிபனாக மாறுவேடம் பூண்டு வந்தது பூதம்.

கந்தசாமியிடம் வந்து “நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். பெண் தேடி வந்தேன். தங்கள் வீட்டில் ஒரு பெண் இருப்பதாக…” என நிறுத்தியது பூதம்.

பையனைப் பார்த்தால் நல்லாத்தான் இருக்கிறான்.  நல்ல உத்தியோகத்தில் வேறு இருப்பதாகக் கூறுகிறான். விடிந்தால் பூதம் வந்துவிடும், காலை முகூர்த்தத்தில் திருமணம் செய்து அனுப்பிவிடலாம்”என உள்ளே அழைத்துப் போனார்கள்.

காலை முகூர்த்தத்தில் கயல்விழிக்கும் பூத வாலிபனுக்கும் திருமணம் செய்து அவசரத் தேவைகளுக்கான பொருள்கள், உணவுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

காட்டு வழியாக வரும்போது அங்கு இருந்த ஒரு சோலையும், அதன் அருகில் சுனை நீர் ஓடிக்கொண்டு இருப்பதையும் பார்த்த கயல்விழிக்கு அங்கு அமர்ந்து சாப்பிடலாம் எனத் தோன்றியது.

பூதக் கணவனைப் பார்த்து இங்கு அமர்ந்து சாப்பிடலாமா? என கேட்டாள் கயில்விழி.

பேசாமல் வந்தான் பூதக்கணவன்.

மறுபடியும் சாப்பிடலாமா? எனக் கேட்டாள் கயல்விழி.

மனித உணர்வுகளையோ, நேசத்தையோ தெரிந்திராத பூதத்திற்கு கோபம் வந்தது. “சும்மா வருகிறாயா! சொரூபத்தைக் காட்டட்டுமா?” எனக் கூறியது பூதம்.

நான் ஒன்றும் தப்பாக பேசவில்லை. அப்படி இருக்க இவருக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது, இவர் கோபக்காரராக இருப்பாரோ என எண்ணியபடி பேசாமல் நடந்தாள் கயல்விழி.

வெகு தூரம் நடந்ததில் கால் வலித்தது. பசிவேறு சோர்வு தந்தது. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் வந்த கயல்விழி  “மெதுவாக சாப்பிடலாமா?” என கேட்டாள்.

சும்மா வருகிறாயா! சொரூபத்தை காட்டட்டுமா? என்றது வாலிப வடிவில் இருந்த பூதம்.

சொரூபமா?அது என்ன காட்டுங்களேன் பார்க்கலாம் என்றாள் கயல்விழி துணிச்சலாக!

பூதமாக உருமாறி நின்றது பூதவாலிபன். கயல்விழி மூச்சு விடவும் மறந்து சிலையாக அப்படியே நின்றாள்.

உடனே கயல்விழியை பாதாள குகைக்குத் தூக்கிச் சென்று சிறை வைத்தது பூதம்.

பகலில் அவள் மடியில் படுத்துத் தூங்கியது. இரவெல்லாம் வெளியே சுற்றியது பூதம்.

ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாகக் கழித்து வந்தாள் கயல்விழி.

ஒரு நாள் பூதத்தை பார்த்து “உங்களுக்கு எல்லாம் தலைவர் சிவபெருமான் தானே! நீங்கள் அனுமதி கொடுத்தால் சிவனை வணங்குகிறேன்” என்றாள் கயல்விழி.

பூதமும் கயல்விழி சொன்னதற்கு உடன்பட்டது. மணலால் சிவலிங்கம் பிடித்து தனக்கு பூதத்திடம் இருந்து விடுதலை வேண்டும், என தினமும் வணங்கி வந்தாள் கயல்விழி.

ஒரு நாள் சிவலிங்கத்தின் அருகில் ஒரு எலி வளை தோண்டிக் கொண்டிருந்தது. அதை விரட்டி விட்ட கயல்விழி…

வளையை அடைக்கலாம்  என களிமண்ணை பிசைந்து கொண்டு வந்தாள். அடைக்க… அடைக்கப் பொந்து பெரிதாகி போய் கொண்டே இருந்தது.

சலிப்படைந்தவள்  காலை நீட்டி உட்கார்ந்தாள் கால் பட்டவுடன்  மண் சரிந்து விழுந்தாள் கயல்விழி.

விழுந்த வேகத்தில் எழுந்தவள்  சுற்றும், முற்றும் பார்த்தாள். மெல்லிய வெளிச்சக்கீற்று வருவது கண்டு அதன் வழியில் நடந்தாள் கயல்விழி.

படிக்கட்டுகள் தென்பட்டன. ஒவ்வொரு படியாக மெதுவாக நடந்து வந்தாள் கயல்விழி. ஒரு கதவு தெரிந்தது, அதை திறந்து பார்த்தாள்.

அழகான தோட்டம் கண்ணைக் கவர்ந்தது. நறுமலர்கள், பழங்கள், வண்ண மலர்கள்,
பூங்கொடிகள் என காட்சி தந்தது.

குகையில் அடைத்திருந்த கயல்விழிக்கு இந்த தோட்டம் மகிழ்ச்சியை தந்தது. எல்லாம் சிவன் அருள் என எண்ணியவள்.

பூஜைக்கு வேண்டிய மலர்கள், பழங்களைப் பறித்துக் கொண்டு கதவு வழியாக வந்தவள், முன்பு இருந்தது போல் சாத்தி மூடினாள். கதவின் மேல் இலை,தழைகளைப் போட்டுவிட்டு குகைக்கு வந்தாள்.

பின்னர், சிவனுக்கு அருகில் உள்ள ஓட்டையின் மேல் காட்டு செடிகளைப் போட்டு மூடி அதன் மேல் சிவனை வைத்து மலர்களால் அர்ச்சிக்கவும் பொந்து இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டது. பூதத்தால் கண்டுபிடிக்க முடியாது என நிம்மதி பெருமூச்சு விட்டாள் கயல்விழி.

தினமும் பூதம் வெளியில் சென்றவுடன் சுரங்கப்பாதை வழியாக நந்தவனத்திற்கு வந்து விடுவாள் கயல்விழி.

இரவில் தோன்றும் நிலா ஒளியில் நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு அதற்கு போட்டியாகத் தான் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றியதோ! என எண்ணி மகிழ்வாள். இப்படியே நாட்கள் நகர்ந்தன.

அவள் செல்லும் தோட்டம் அரண்மனை நந்தவனம். அங்கு பூக்கும் செடிகளில் காஷ்மீர் ரோஜா செடியும் ஒன்று. அந்த ரோஜா செடி இளவரசருக்கு பிடித்தமான செடி.

மாலையில் இருக்கும் மொட்டுக்கள் காலையில் இருப்பதில்லை. பழங்கள் காணாமல் போவது கண்டு ஆச்சரியப்பட்ட இளவரசன் கடுமையாக காவல் போட்டான்.

நள்ளிரவில் வந்து பறித்துச் செல்வதால் காவலாளிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தானே கண்டுபிடிப்பது என முடிவு செய்தான் இளவரசன்.

பச்சை உடை அணிந்து கொண்டு உள்ளங்கையில் சிவப்பு வண்ணத்தால் காஷ்மீர் ரோஜா போல் வரைந்து கொண்டு செடிக்குப் பின்னால் போய் செடியோடு செடியாக நின்று கொண்டான் இளவரசன்.

நள்ளிரவு ஆனது கயல்விழி குகையில் இருந்த நந்தவனத்திற்கு வந்தாள்.

வந்தவள் ரோஜா மலர்களை கிள்ளி எடுத்துக்கொண்டே வந்தவள் இளவரசனின் கையில் வரைந்த வண்ண ரோஜாவையும் மலரென நினைத்து கிள்ளப் போனாள்.

மறுகணம் இளவரசனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டாள் கயல்விழி.

வானத்து தேவதையோ என ஐயம் கொண்டு விசாரித்தான் இளவரசன்.

கயல்விழியும் தனது சோகத்தைச் சொல்லி தான் பூதத்திடம் இருந்து விடுதலை அடைய முடியாமல் தவிப்பதை கூறினாள்.

“நான் உன்னை மணந்து கொண்டு பூதத்திற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்” என உறுதி கூறினான்.

ஆட்களை அழைத்து கதவை பெயர்த்து எடுத்து விட்டு சுவர் எழுப்ப கட்டளையிட்டான்

மகன் உத்தரவு என்பதால் மன்னரும் எந்த தடையும் சொல்லவில்லை. பூதத்திற்கு தெரியக்கூடாது என்பதற்காக மிக ரகசியமாக திருமணம் நடந்து முடிந்தது.

இளவரசன் ரவிவர்மாவும் இளவரசி கயல்விழியும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

கயல்விழி கருவுற்றாள். தனது பெற்றோருக்கு சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டாள்.

அதை அறிந்த இளவரசனும் ரகசியமாக ஆள் அனுப்பி நடந்தவற்றைக் கூறி அழைத்து வரக் கட்டளையிட்டார்.

கயல்விழியின் பெற்றோரும் சகோதரர்களும் மகிழ்ச்சி அடைந்து மிகரகசியமாக வந்து பார்த்துச் சென்றார்கள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply