கயல்விழி அரண்மனையில் சந்தோசமாக இருந்தாள்.

வழக்கம்போல் விடிந்து வந்த பூதம் கயல்விழித் தேடியது.சிவலிங்கம் இருந்த இடத்தில் பள்ளமாக இருக்கவே, கயல்விழி பள்ளத்தில் விழுந்து இருக்கக் கூடும் என எண்ணிய பூதம்.

எல்லா இடமும் தேடியது. கயல்விழியை காணாமல் ஊரெல்லாம் சுற்றித் திரிந்தது.

ஒரு நாள் புளிய மரத்தில் பூதம் சோர்வாக அமைந்து இருந்தது.

அம்மரத்து அடியில் ஒரு குடியானவனும் அவன் மனைவியும் கஞ்சி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது, குடியானவனின் மனைவி நீ என் மேல் பிரியமாகவே இல்லை. என்னை பூதம் தூக்கிக் கொண்டு போகும் என்ற நிலை இருந்தால் பிரியமாக இருந்திருப்பாய்…

திருட்டுத்தனமாக கட்டிக்கொண்ட மனைவி மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் நம் இளவரசர்.என சிணுங்கிக் கொண்டே கூறினாள்.

“அடச்சீ…உனக்கு பத்து வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அவ ஒரே வருடத்தில் குழந்தைக்கு அம்மாவாகப் போகிறாளே” என்றான் குடியானவன்.

மேலே இருந்து இவர்கள் உரையாடலைக் கேட்ட பூதம் அப்படியா சமாச்சாரம் எனத் தெரிந்து கொண்டது.

கர்ப்பிணி  பெண்களுக்கு வளையல் போடுவார்களே என எண்ணிய பூதம் வளையல் காரனாக  மாறி வளையல் வளையல் என விற்றுக் கொண்டு கயல்விழி இருக்கும் நகரத்திற்கு வந்தது.

அரண்மனை அருகில் வந்ததும், அரண்மனைப் பணிப் பெண்கள் வளையல் காரனை அழைத்து கயல்விழிக்கு வளையல் போடச் சொன்னார்கள்.

கர்ப்பவதியாக இருந்த கயல்விழி மிக அழகாக இருந்தாள்.

அவளைப் பார்த்த பூத வளையல்காரன் பல்லை நற நற என கடித்தான்.

பயந்து போன கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னையா ஏமாற்றி வந்தாய் இன்று இரவு  எனக்கு இரையாகப் போகிறாய்” என்றது பூதம்.

கயல்விழி உள்ளே போய்விட்டாள்.உடனே பூதம் மறைந்து விட்டது. இது கண்ட பணிப்பெண்கள் திகைத்து நின்றனர்.

கயல்விழி நடந்தவற்றை தன் கணவனிடம் பயத்துடன் கூறினாள்.

தன் மனைவியை தைரியமாக இருக்கச் சொன்ன இளவரசன் சமையல் கலையில் சிறந்தவனை அழைத்து வரச் சொன்னான்.

சமையல் காரனும் உடனே, வந்து பணிவுடன் நின்றான். இளவரசனின் உத்தரவிற்காக..

இளவரசியை போல் பதுமை செய்ய வேண்டும் என கட்டளையிட்டார் இளவரசன்.

உத்தரவு வாங்கிக் கொண்ட சமையல்காரன் சர்க்கரை, மாவு, நெய் சேர்ந்த கலவையில் இளவரசி போன்று பெண் பதுமை செய்தான்.

அப்பெண் பதுமைக்கு இளவரசியின் ஆடைகளை அணிவித்து இளவரசன் இருக்கும் அந்தப்புரத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்பதுமையை தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டார் இளவரசர்.

கயல்விழியை தனி அறையில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு காவல் வீரர்களையும் வெளியில் நிற்க வைத்தார் இளவரசர்.

நள்ளிரவானது…

பூதம் ஆவி உருவில் அரண்மனைக்கு வந்து அந்தப் புரத்திற்குள் நுழைந்தது.

இளவரசரின் அருகில் இருந்த பெண் பதுமையை கயல்விழி என நினைத்து கையை முறித்து தின்னத் தொடங்கியது.

இனிப்பாகவும், சுவையாகவும் இருந்ததால் கால், உடல் என முழு உருவத்தையும் தின்று தீர்த்தது  பூதம்.

“இவ்வளவு சுவையாக இருப்பாள் எனத் தெரிந்திருந்தால் கிடைத்த அன்றே தின்று இருப்பேனே” என நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டே துரோகி இன்றோடு முடிந்தாள்” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது பூதம்.

கயல்விழியின் ஆசைப்படி பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார் இளவரசர்.

உரிய காலத்தில் அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள் கயல்விழி.

மன்னர் குடும்பத்திற்கு வாரிசு பிறந்த விபரம் மக்களுக்கு பறை சாற்றி விழா கோலம் பூண்டது நாடு.

இந்த விபரம் காற்று வாக்கில் பூதத்திற்கு எட்டியது. தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டது பூதம்.

இளவரசனையும் சேர்த்து விழுங்குகிறேன் என சூள் கொட்டிக்கொண்டு கோபத்துடன் வந்தது பூதம்.

பூதத்தை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும் என யோசித்தனர் கயல்விழி குடும்பத்தினர்.

மனைவியையும், குழந்தையையும் பார்க்க வந்திருந்தார் இளவரசன். எல்லோரும் சேர்ந்து முடிவுக்கு வந்தவர்களாக பூதத்தை உபசரித்து வரவேற்றார்கள்.

பூதம் வர மறுத்தது.

எங்களை மன்னிக்க வேண்டும்.

கயல்விழியின் மேல் வைத்த அன்பால் அப்படி செய்து விட்டோம். இனி அப்படி எந்த தவறும் செய்ய மாட்டோம் எனக் கேட்டுக் கொண்டார்கள்.

அப்படி என்றால்
கயல்விழியையும், குழந்தையையும் என்னுடன் அனுப்பி வையுங்கள் எனக் கேட்டது பூதம்.

“ உங்களுடனே அனுப்பி வைக்கிறோம். இரண்டு நாட்கள் தங்கி அழைத்துச் செல்லுங்கள்” எனப் பணிவாக கேட்டுக் கொண்டார்கள்.

பூதமும் சரி என சம்மதித்தது பெரிய மனதுடன்.

வீட்டினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பூதத்திற்குத் தெரியாமல் சூழ்ச்சி செய்தார்கள்.

தோட்டத்தில் தரை மட்டமாக ஒரு பாழுங் கிணறு இருந்தது. அதில் கோரைப் பாயைப் போட்டு அதன் மேல் பட்டுக் கம்பளத்தை விரித்து வைத்தார்கள்.

இரண்டு ஓரத்திலும் இரண்டு மைத்துனர்கள் உட்கார்ந்து கொண்டனர். எதிர்புறத்தில் இளவரசர் அமர்ந்து கொண்டார்.

நடுவில் தாம்பூல வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இரண்டு நாட்கள் கெடு முடிந்து விட்டதால் இன்று கயல்விழியை அனுப்பி வைக்க வேண்டிய நாள். கயல்விழியும்,  குழந்தையும் தயார் நிலையில் இருந்தார்கள். இதைக் கண்ட பூதம் சந்தோசத்துடன் உணவு அருந்தி முடித்தது.

அதை கண்ட இளவரசர் எழுந்து வாருங்கள் தாம்பூலம் தரிக்கலாம் என அழைத்து வந்தார்.

நடுவில் இருந்த தாம்பூலத்தை எடுக்கச் சென்றது பூதம்.

திடீரென இருவரும் எழுந்திருக்க பூதம் கிணற்றிற்குள் தொப்பன்று விழுந்தது.

பூதம் வெளியில் வருவதற்குள் விரைவாக அருகில் வைத்திருந்த பாறை, கற்கள், மண் என விரைவாக எடுத்துப்போட்டு மூடினார்கள்.

எதிர்பாராமல் விழுந்ததால் பூதமும் நிலை குலைந்து எதுவும் செய்ய முடியாமல் கிணற்றுக்குள்ளே ஆவியாக தலைகீழாக தொங்கியது.

நிம்மதியாக பெருமூச்சு விட்டனர் கயல்விழி குடும்பத்தினர். கயல்விழியையும், குழந்தையையும் அழைத்துச் சென்ற இளவரசர் நீண்ட ஆயுளுடன் நல்லாட்சி செய்து வாழ்ந்தார்கள். என கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

“பார்த்தீர்களா! குழந்தைகளே புத்தி கூர்மை இருந்ததால் பூதத்தையே வென்று விட்டார்கள்” என்றார் தாத்தா.

ஆமாம்! தாத்தா உடல் பலம் இருந்தாலும், புத்தி கூர்மையும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டோம். என்றனர் சிறுவர்கள்.

அதைத் தானே தாத்தா எதிர் பார்த்தார். குழந்தைகள் புரிந்து கொள்ளும் சாமர்த்தியத்தை நினைத்து திருப்தியுடன் எழுந்தார் தாத்தா.

சிறுவர்கள் அவருக்கு முன்னால் எழுந்து மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடினார்கள்.

தாத்தா சிரித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply