மதிவாணனின் கீழ் வேலை செய்த பணியாளர்களுக்கும் மன்னர் பரிசு கொடுத்து மகிழ வைத்தார்.
ஊழல் செய்த அதிகாரிகளை அழைத்து கண்டித்தார் அரசர்.
சிலரை பதவி நீக்கம் செய்தார். சிலரை பதவி மாற்றம் செய்தார் சிலரை வேறு வேலை கொடுத்து மாற்றினார்.
மதிவாணன் போல் விழிப்போடு இருக்கும் அதிகாரிகளை நியமித்தார் அரசர்.
பிறகு மதிவாணனை அழைத்த அரசர். “உனக்கு வேறு வேலை தருகிறேன். இதில் எப்படி சம்பாதிக்கிறாய் எனப் பார்க்கிறேன் என்றார் அரசர்.
“என்ன வேலை அரசே” எனப் பணிவாகக் கேட்டான் மதிவாணன்.
“அரண்மனை வாயிலில் கட்டி இருக்கும் மணியை கால முறைப்படி அடித்து பேனாவால் காகிதத்தில் குறித்து வைக்க வேண்டும் என்றார் அரசர். இந்த வேலைக்கு சம்பளம் கிடையாது என்றார்.
கடிகாரம் கண்டு பிடிக்காத காலம் அது.
வெயிலைக் கொண்டே மணியை கணக்கிட்டு மணி அடிக்க வேண்டும்.
எல்லோரும் பார்க்கும் வண்ணம் இப்போது மணிக்கூண்டு இருப்பது போல் மணி அடித்து நேரத்தை அரண்மனை வாயிலில் இருந்து கூற வேண்டும் என்பது அரசரின் உத்தரவு.
இதில் எப்படி சம்பாதிக்க முடியும் என்பது அரசரின் கணிப்பு. எனவே, இந்த வேலையை செய்யும்படி மதிவாணனிடம் கூறினார் அரசர்.
மணி அடிக்கும் வேலையை மூன்று நாட்கள் ஒழுங்காக அடித்தான் மதிவாணன்.
நான்காம் நாள் ஒரு முத்து வியாபாரி அரண்மனைக்கு வந்து கொண்டு இருந்தார். அவரைத் தடுத்து நிறுத்தினான் மதிவாணன்.
“ஏன் நிறுத்துகிறாய்!” எனக் கேட்டார் முத்து வியாபாரி.
“உங்களுக்கு முன் ஒரு இரத்தின வியாபாரி ராணியிடம் அதிக இரத்தினங்களை விற்றுச் சென்றார். அதுபோல், உங்களுக்கும் விற்க வேண்டும் என்றால் அதிக நேரம் முத்துக்களை காட்டிப் பேச வேண்டும்” என்றான் மதிவாணன்.
முத்து வியாபாரியும் நன்றி கூறிவிட்டு உள்ளே செல்லப் புறப்பட்டார்.
தடுத்து நிறுத்திய மதிவாணன், “உங்களுக்குப் பின்னால் வைர வியாபாரி வர இருக்கிறார்” என்றான் மதிவாணன்.
முத்து வியாபாரியும் குறிப்பை உணர்ந்து கொண்டு இரண்டு முத்துக்களைக் கொடுத்து, “மணி அடிப்பதை நீதானே பார்க்கிறாய்! கொஞ்சம் பார்த்து. எனக் குறிப்பால் உணர்த்திவிட்டு உள்ளே சென்றார் முத்து வியாபாரி.
இவ்வாறு முத்து, வைரம், ரத்தினம், பட்டாடைகள், மரகதம், மாணிக்கம் என பலவாறு சம்பாதித்தான் மதிவாணன்.
அவற்றை தனது மனைவிக்கு உயர்ந்த வகை நகைகளாகச் செய்து போட்டு அழகு பார்த்தான் மதிவாணன்.
ஒரு நாள் திவான் மகள் திருமணத்திற்காக அரசரும், ராணியும் வந்திருந்தார்கள்.
மணமகள் அணிந்திருந்த நகை ராணியின் கண்களைக் கவர்ந்தது.
அரசிடம் காட்டிய ராணி அந்த நகை போல் என நிறுத்தினாள்.
அரசரும் புரிந்துகொண்டு திவானை அழைத்தார். “இந்த நகை எங்கு செய்யப்பட்டது” என விசாரித்தார்.
“ அரசே இந்த நகை அரண்மனை வாயிலில் மணி அடிக்கும் மதிவாணனின் மனைவியின் நகை இரவல் வாங்கிப் போட்டு இருக்கிறோம்” என்றார் திவான்.
இவ்வளவு உயர்ந்த வகை நகைகள் செய்ய மதிவாணனுக்குப் பணம் ஏது? என அரசருக்கு ஒரே வியப்பாக இருந்தது.
மறுநாள் மதிவாணனை அழைத்து விசாரித்தார் அரசர்.
“அரசே! தேவைகள் பூர்த்தி ஆகாத போது லஞ்சம் உற்பத்தியாகின்றன” என்ற மதிவாணன், நடந்தவற்றை கூறினான்.
அரசரும் மதிவாணனை பாராட்டினார். நீ இரண்டு முறை எனது பரிட்சையில் வென்று விட்டாய். மூன்றாம் முறை வென்று விட்டால் உனக்கு உயர்ந்த பதவியை அளிப்பேன் என்றார் அரசர்.
“என்ன வேலை எப்போது தரப் போகிறீர்கள் அரசே!” எனப் பணிவாக கேட்டான் மதிவாணன்.
“எனது ஆட்சிக்கு உட்பட்ட நகரங்கள், கிராமங்களில் உள்ள மனிதர்களின் ஆண், பெண் தனித்தனியாக எத்தனை பேர் வாழ்கிறார்கள். என்றும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பலன் தருபவை, பலன் தராதவை எனப் பிரித்து கணக்கு எடுக்க வேண்டும். இதற்கும் சம்பளம் தர மாட்டேன்” என்றார் அரசர்.
அப்படியே செய்கிறேன் அரசே! என்று பணிந்தான் மதிவாணன்.
மறுநாளே! உதவிக்கு சில வேலை ஆட்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டான் மதிவாணன்.
ஒவ்வொரு பகுதியாக சென்று ஆடு, மாடு, கோழி, மனிதர் என தனித்தனியாக கணக்கெடுத்துக் கொண்டார்கள்.
இவர்கள் கணக்கெடுப்பதைப் பார்த்த மக்கள் எதற்காக இந்த கணக்கெடுப்பு என பயத்துடன் கேட்டார்கள்.
“அரண்மனை ரகசியம் ஒருவரிடமும் சொல்லக் கூடாது” என கேட்டுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான் மதிவாணன்.
இன்னும் சில தினங்களில் யுத்தம் வரப்போகிறது நமது அரசுக்கு படைபலம் குறைவாக இருப்பதால் நாட்டில் உள்ள ஆண்களை படையின் பின் நிறுத்தி எதிரி இவ்வளவு படையா? என வியந்து பயந்து ஓட வைக்க திட்டமிட்டு இருக்கிறார் அரசர்.
யுத்த காலத்தில் அவர்களின் உணவுக்காக ஆடு, கோழியும், பால் தயிருக்கு பசுவும், அவர்களுக்கு சமைத்து உதவ பெண்களும் தேவைப்படுவதால் இந்த கணக்கு எடுக்கப் படுகிறது என்றான் மதிவாணன்.
மேலும், படையெடுப்பு சமயத்தில் மக்களை ஏமாற்றக்கூடாது அல்லவா! என விளக்கி கூறிய மதிவாணன்.
இரகசியம் உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன். எனச் சொல்லிக் கொண்டே எல்லோரிடமும் சொன்னான்.
இது கேட்ட மக்களில் சிலர் முழுமையாக கணக்கு எடுக்காமல் குறைத்துக் காட்டினால் இவ்வளவு பணம் தருகிறோம் என ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
சில வீட்டுப் பெண்கள் தங்கள் கணவர் நோஞ்சான் என்றும் தனக்கு ஒரே மகன், அதனால், என்று விதவிதமாக சுயநலத்துடன் பேசினார்கள்.
நாட்டுப்பற்று உள்ளவர்கள் உள்ளது உள்ளபடி கூறினார்கள்.
இவ்வாறு கணக்கெடுப்பு ஒரு வழியாக முடிந்தது.
அரசர் கணக்கு எடுக்கச் சொன்னதற்கு மேல் சொல்லாத ஒரு கணக்கு எடுப்பும் எடுத்துக் கொண்டான் மதிவாணன்.
அரசரிடம் அன்பு உள்ளவர்கள் இத்தனை பேர். சுயநலம் உள்ளவர்கள் இத்தனை பேர் என்ற கணக்குத்தான் அது.
மக்கள் கொடுத்த பணத்தையும், கணக்கையும் கொண்டு வந்து அரசர் முன்வைத்தான் மதிவாணன்.
இரண்டையும் பார்த்த அரசர் வியந்தார். மதிவாணனைத் தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்.
மதிவாணனின் புத்திசாலித் தனத்திற்கு தகுந்த வேலையை கொடுக்க நினைத்தார் அரசர்.
மதிவாணனை தனது முதல் மந்திரியாக அமர்த்திக் கொண்டார்.
மதிவாணனுக்கு பல பரிசுகளும், வசதிகளும் செய்து கொடுத்து சீரும், சிறப்புமாக நாட்டை ஆண்டார் அரசர்.
“கேட்டீர்களா! குழந்தைகளே, திறமைக்கு எப்போதும் பலன் உண்டு” என்று கூறி கதையை முடித்தார் தாத்தா.
விஜயன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி காணப்பட்டது.
தாத்தா!என் தந்தையின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது என்றான் விஜயன்.
இந்த நம்பிக்கைதான் நம் வாழ்க்கை. நம்பிக்கை வரும் போது தான் நாம் வாழ்க்கையில் உயரமுடியும். புரிகிறதா குழந்தைகளே! என்றார் தாத்தா.
“புரிந்தது தாத்தா! நம்பிக்கையே நமக்கு நல்லுரம்” என்றாள் சுமதி.
தாத்தா சிரித்துக் கொண்டே எழுந்தவர் துண்டை தோளில் போட்டுக் கொண்டார்.
குழந்தைகளும் வீட்டுக்குச் செல்ல மகிழ்ச்சியுடன் எழுந்து ஓடினார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.