15- பிள்ளையாரும் கொழுக்கட்டையும்
தாத்தா நடந்து வந்து கொண்டிருந்தார்.
ராணியும், வாணியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
“என்ன? குழந்தைகளே!” என தாத்தா கேட்டார்.
தாத்தா! ராணியை சாமி கும்பிட வா என கூப்பிட்டேன் தாத்தா.பெரிய ‘சாமி’ போடி என்று கூறுகிறாள்.
“அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டியது தானே” என்றார் தாத்தா.
“என்னையும் கேலி செய்கிறாள். அதுதான் எனக்கு கோபமாக வருகிறது தாத்தா” என்றாள் வாணி.
ராணி பேசாமல் நின்றாள்.
“இருவரும் என்னுடன் வாருங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் ராணி பதில் சொன்னால் போதும்” என அழைத்து வந்தார் தாத்தா.
பின் அமர்ந்து கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் ராஜாம்மா என்ற பெண் இருந்தாள். அவளுக்கு குமார் என்ற மகன் இருந்தான்.
குமார் சிறு பையனாக இருக்கும்போதே அவன் தந்தை இறந்து போனார்.
ராஜம்மா கணவர் போனபின் சகலமும் தன் மகன் தான் என வாழ்ந்து வந்தாள்.
வயலுக்கு கூலி வேலைக்குச் சென்று எப்படியோ காலத்தை ஓட்டினாள்.
குமாரும் பெரியவனாக வளர்ந்து விட்டான்.
அவனுக்குப் பக்கத்து ஊரில் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள் ராஜம்மா.
குமாருக்கு ஏற்ற குணவதியாக இருந்தாள் திலகா.
மாமியார் சொல்படி கேட்டு நடப்பாள். மாமியாரிடம் எதுவும் சொல்லப் பயப்படுவாள்.
இப்படி இருக்கும் போது… திலகத்திற்கு ஒரு ஆசை வந்தது.
கொழுக்கட்டை செய்து சாப்பிட வேண்டும் என்பது அந்த ஆசை.
சொல்ல பயமாக இருந்ததால் சொல்லாமலே இருந்து விட்டாள்.
ஒரு நாள் வெளி ஊருக்கு வேலைக்குப் போவதாக கணவரும், மாமியாரும் சொல்லிச் சென்றார்கள்.
அப்போது திலகத்திற்கு ஒரு யோசனை வந்தது. இவர்கள் வருவதற்கு முன் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு விடலாம் என நினைத்து… செயல்பட தொடங்கினாள்.
வீட்டில் சாப்பிடும் போது யாரும் பார்த்து மாமியாரிடம் சொன்னால் தன் பாடு திண்டாட்டம் என நினைத்தவள்.
கொழுக்கட்டைகளை குடத்திற்குள் வைத்து தண்ணீர் எடுக்க குளத்திற்குச் செல்வது போல் சென்றாள்.
குளக்கரையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குள் சென்று பூட்டிக் கொண்டு கொழுக்கட்டையை சாப்பிட ஆரம்பித்தாள்.
திலகாவிற்கு சாமி பக்தியும் கிடையாது, எந்த ஆச்சாரமும் தெரியாது.
கோயிலின் கற்ப கிரகத்தில் அமர்ந்து, சாப்பிட்டு கோயிலின் புனிதத்தைக் கெடுக்கிறோம் என்பதை அறியாத திலகா…
அவள் கொண்டு வந்த கொழுக்கட்டையை சாப்பிடுவதிலே மும்முரமாக இருந்தாள்.
இவளுக்கு எப்படியாவது பாடம் கற்பித்து உணர வைக்க வேண்டும் என நினைத்த பிள்ளையார் சோதிக்க ஆரம்பித்தார்.
குளத்தில் உள்ள நீர் எல்லாம் வற்றும் படி நினைத்தார்.
மறு கனமே குளத்து நீர் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டது.
கொழுக்கட்டையை சாப்பிட்டு முடித்த திலகா கோயில் கதவை திறந்து குளக்கரைக்கு வந்தாள்.
வந்தவள் வாயடைத்து நின்றாள்.
என்ன ஆச்சரியம்! கோயிலுக்கு உள்ளே போகும்போது தண்ணீர் நிறைந்து இருந்த குளம். தண்ணீரே இல்லாமல் வற்றிப் போயிருந்தது.
“அட என்னாச்சு இந்த குளத்திற்கு” என்று வெறும் குடத்துடன் வீடு திரும்பினாள் திலகா.
வயல் வேலைக்குச் சென்றவர்கள் எல்லோரும் ஊர் திரும்பினார்கள்.
குளத்தில் குளிக்கச் சென்றால் தண்ணீர் வற்றி இருந்தது.
“இது என்ன சோதனை?” காலையில் செல்லும் போது நிறைந்து கிடந்த தண்ணீர் மாலைக்குள் எவ்வாறு வற்றும்.
இது ஏதோ சாமி குற்றம் நடந்திருக்கிறது என்று முடிவு செய்தனர்.
இதைப் பற்றி விசாரிக்க எல்லோரும் காலையில் கோயில் முன் கூட வேண்டும்.என்றும் அப்போது இது பற்றி விசாரிக்கலாம் என்றும் ஊர் மக்கள் எல்லோரும் முடிவு எடுத்தனர்.
கிராம அதிகாரி தண்டரா போட்டு அறிவிக்கச் சொன்னார்.
தண்டராக்காரன் சொன்னதைக் கேட்ட திலகத்திற்கு திக் என்றது.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.