ராமன் இவ்வாறு கூறியதும் குடியானவனும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். அன்று இரவு ஊரடங்கியது. பிறகு ராமன் குடியானவன் தோட்டத்திற்கு போவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றான்.
கிணற்றிலிருந்து நீர் இறைத்து விடிய விடிய ஊற்றினான். ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்தவுடன் வீட்டிற்கு வந்து படுத்து விட்டான்.
மனைவி “பூஜை முடிந்ததா? “ என்றாள். ராமனும் முடிந்தது என்றான்.
விடிந்த பின் தோட்டத்திற்கு வந்து பார்த்த குடியானவன் திகைத்துப் போனான்.
அவன் வயலில் மட்டும் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது. மகிழ்ச்சியோடு உழுது, பயிர் செய்தான். காலத்தே மழையும் பெய்யவே நல்ல விளைச்சல். ராமனுக்கும் சொன்னபடி நெல் கொண்டு வந்து கொடுத்தான்.
கொஞ்ச நாட்கள் கமலா பேசாமல் இருந்தாள். மறுபடியும் வருமானம் இல்லாமல் போகவே, அவள் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்தாள். அவர்கள் இரக்கப்பட்டு தங்கள் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருக்க வைத்தார்கள்.
ஒரு நாள் கமலா ராமனிடம் “நீங்கள் பாடி ஜோசியம் சொன்னால் உங்களைத் தேடி பலர் வரலாம் அல்லவா எதற்கும் துப்பில்லை” என்று இடித்துக் காட்டினாள்.
“பாடுவதற்கு புலமை வேண்டாமா? “ என்றான்ராமன்.
“ பெரிய புலமை! நாலு வரி ஆனால் கவிதை, நாலா விதமும் சம்பாதிக்கலாம் அல்லவா?” என்றாள்.
இனி பேசுவதை விட செயலில் இறங்க வேண்டும். என ஒரு பென்சிலும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு காட்டு வழியில் புறப்பட்டான் ராமன்.
என்ன எழுதுவது என்று தெரியாமல் சுற்றும், முற்றும் பார்த்தான். அங்கு இரண்டு பனை மரங்கள் சேர்ந்து நின்றது. இதைப் பார்த்தவனுக்கு வியப்பாக இருந்தது.
“ இரு பனைமரம் நிற்கக் கண்டேன்” என்று எழுதிக் கொண்டான்.
மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இரண்டு குருவிகள் மரத்தைக் குடைந்து கொண்டிருந்தன.
இதைக் கண்ட ராமன். “இரு குருவி குடையக் கண்டேன்” என்று எழுதிக் கொண்டான்.
“அட இரண்டு வரி ஆகிவிட்டதே” என சந்தோசமாய் நடக்க இரண்டு ஆந்தைகள் ஒரு மரத்தில் உட்கார்ந்து இருந்தன.
ஆந்தைக்கு விழி பெரியது அது சாதாரணமாகப் பார்க்கும் போதே முழிப்பது போல் இருக்கும்.
அதைக் கண்ட ராமன் “இரு ஆந்தை முழிக்க கண்டேன்” என்று எழுதிக் கொண்டான்.
சிறிது தூரம் சென்ற உடன், மான் கூட்டம் போவதைப் பார்த்தான் எல்லாம் இரண்டாகப் பார்த்து எழுதி இருப்பதால் இதையும் இரண்டு என எழுதலாம் என எண்ணிய ராமன் “இரு மான் ஓடக் கண்டேன்” என்று எழுதினான்.
எழுதிய கவிதையைப் பாடிப் பார்த்தான்.
“இரு பனைமரம் நிற்கக் கண்டேன்
இரு குருவி குடையக் கண்டேன்
இரு ஆந்தை முழிக்கக் கண்டேன்
இரு மான் ஓடக் கண்டேன்.”
நான்கு வரிகள் அமைந்து விட்ட சந்தோசத்தில் வீட்டிற்கு திரும்பினான். அவனுக்கு பெரும் மகிழ்ச்சி, தான் புலவராகி விட்டதாக ஒரு சந்தோசம், பூரிப்பு அதை தன் மனைவியிடம் சொல்லத் துடித்தான்.
அவளுக்கோ அவள் வேலை செய்யும் இடத்தில் உறவினர்கள் வேறு வந்திருந்தார்கள். அன்று அதிக வேலை இருந்தது, வீட்டில் உள்ளவர்களும், வந்திருந்த உறவினர்களும் வெளியே எங்கோ போய் விட்டார்கள்.
அதன் பிறகே இவளுக்கு வேலை முடிந்தது. பிறகு சாப்பிட்டு விட்டு தன் வேலையை முடிக்கும் போது இரவு நெடு நேரம் ஆகிவிட்டது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்வதைப் பார்த்த இரு திருடர்கள் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு சுவர் ஏறி உள்ளே குதித்தார்கள்.
அதே சமயம் வேலை முடித்து படுத்த
கமலத்திடம் ராமன் தான் எழுதி வந்த கவிதையை படித்துக் காட்டினான்.
“இருபனை மரம் நீற்கக் கண்டேன் எப்படி இருக்கிறது” என்று கேட்டான்.
“அடுத்த வரியை படியுங்கள்” என்றாள் அவள்.
மேலே திருடர்களில் ஒருவன் “அடே” அப்போதே சொன்னேன், ஜோசியர் இங்கு தங்கி இருக்கிறார் என்று போடா பெரிய ஜோசியன் என்றாயே! இப்போது இவன் சொல்வது நம்மைத் தான்” என்றான் திருடர்களில் ஒருவன்.
“சரி வா.. வந்த மட்டும் கிடைத்ததைத் எடுத்துக் கொண்டு போகலாம் என்று மூட்டை கட்டினர். பெட்டியைக் கள்ளச் சாவி போட்டு திறக்க முயற்சித்தனர்.
“இரு குருவி குடையக் கண்டேன்” என்றதும் திருடர்கள் திடுக்கிட்டனர். “சந்தேகமே இல்லை இவன் பனை, குருவி என்று ஜாடையாகக் கூறுவது நம்மைத்தான்.
இந்த நேரம் நாம் என்ன செய்கிறோம் என்பதை ஜோசியத்தில் கண்டு பிடித்து ஜாடையாய் சொல்கிறான்” என திருதிருவென விழித்தனர்.
ராமன் சந்தோசக் குரலில் சத்தமாக “இரு ஆந்தை முழிக்கக் கண்டேன்” என்றதும், இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினர் “இரு மான் ஓடக் கண்டேன்” என்று பாடிய அந்த வரியைக் கேட்டதும் அவர்கள் ஓடிய ஓட்டத்தில் முக்காலி மேல் விழ அதன் மேல் இருந்த பூச்ஜாடி உருள அதன் மேல் திருடர்கள் உருண்டனர்.
அதே சமயம் பார்த்து வெளியே சென்று இருந்த வீட்டுக்காரர்கள் உள்ளே வந்தனர். நொடியில் நிலைமையைப் புரிந்து கொண்டு திருடர்களைப் பிடித்துக் கொண்டார்கள்.
“எங்களை மன்னிச்சிடுங்க ஜோசியர் ராமன் இருக்கிற வீடுன்னு சொன்னேன். இவன்தான் கேட்கலை” என்று அவர்களிடம் ஒருவன் கூறினான். அவர் அப்படி அப்படியே பாடலாகப் பாடி புட்டு புட்டு வைச்சுட்டார் என பலவாறு திருடர்கள் உளறினர்.
திருடர்கள் செய்த ரகளையில் அங்கு ஓடி வந்த கமலாவும், ராமனும் அதை ஆமோதித்தனர்.
வீட்டு எஜமானர் மகிழ்ந்து தன் சொத்துக்களைக் காப்பாற்றியதற்காக ராமனுக்கு பல பரிசுகளும், பொருளும் கொடுத்து பாராட்டினார்.
இந்த விஷயம் ஊர் பூராவும் பரவியது. மன்னர் காதுக்கும் எட்டியது.
அரண்மனையில் ஒரு அற்புதமான வேலைப் பாடுள்ள இரண்டு தங்கக் கோப்பை காணாமல் போயிருந்தன. மன்னர் எப்படி எல்லாம் விசாரித்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
மன்னர் ராமனை அழைத்து வரச் செய்தார். விவரங்களை கூறி கோப்பைகளை கண்டு பிடிக்கச் சொன்னார்.
“ஒரு வாரத்தில் கண்டு பிடிக்கவில்லை என்றால், கண்ணையும், மூக்கையும் எடுத்து விடுவேன்” என மன்னர் அச்சுறுத்தினார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்