7-காலமும் நேரமும்
தாத்தா புடை சூழ சிறுவர்கள் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்த தாத்தா, “ஏன் அழுகிறாய்” என்று கேட்டார்.
அவனும் அழுது கொண்டே, “தாத்தா…. தாத்தா.. எங்க அம்மா எப்ப பார்த்தாலும் அசடு, சோம்பேறி என்று திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ம்…ம்..” என்று அழுது கொண்டு இருந்தான்.
“ சரி கண்ணா… அழுவதை நிறுத்தினால் உனக்கு ஒரு கதை சொல்வேன். என்றவுடன் “சரி தாத்தா” என்றவன் அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து ஆர்வத்துடன் தாத்தாவைப் பார்த்தான்.
தாத்தா கதையை ஆரம்பித்தார்… “சிறுவர்களே ஒரு ஊரில் ராமன் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு உரிய வயதில் அவன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள்.
வேலை, வெட்டிக்கு போகாமல் அம்மா, அப்பா விட்டுச்சென்ற சொத்தை வைத்து காலத்தை கழித்து வந்தான் ராமன்.
இருந்த சொத்து எல்லாம் மெல்ல, மெல்ல கரைந்து போனது. வீடு ஒன்று தான் பாக்கி இருந்தது.
சாப்பாட்டுக்கே கஷ்டமாக போகவும் அவன் மனைவி கமலா“கையாலகாதவன், சம்பாதிக்க துப்பில்லை” என திட்ட ஆரம்பித்து விட்டாள்.
ஒருநாள் குளிப்பதற்காக ராமன் ஆற்றுக்கு கிளம்பினான் பாதி வழி சென்றவுடன் தான். துண்டும், சோப்பும் எடுத்து வரவில்லை என்று நினைவு வந்தது.
“என்ன மறதி” என்று தன்னையே நொந்து கொண்டு மறுபடியும் வீடு திரும்பினான். வீட்டில் காலடி வைத்ததும் ‘சொயிங்’ என்ற சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.
அவன் மனைவி தோசை சுட்டுக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு நாக்கில் ஏச்சில் ஊறியது. தோசை என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். சில நாட்களாகவே தோசை சுடுவதில்லை வேலையுடன் வந்தால் தான், தோசை என்று கமலா கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள்.
இன்று நமக்குத் தெரியாமல் தோசை சுடுகிறாள். என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று மறைந்திருந்து பார்த்தான்.
ஏழு தோசைகள் சுட்டாள் மீதி மாவை உறியில் வைத்து மூடினாள் தோசைக் கல்லைத் தேய்க்க பின்புறம் சென்றாள் கமலா.
அந்த சமயம் சோப்பு,துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டான் ராமன். இவன் வந்து போன விசயம் யாருக்கும் தெரியாது.
ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பினான்.
அவனுக்கு தோசை சாப்பிட வேண்டும் போல் இருந்தது. அதற்கு என்ன வழி என யோசித்தான். திடீர் என்று ஒரு யோசனை வந்தது.
“கமலா இங்கே வா!” என அழைத்தான்.
“என்ன!” என்று வேண்டா, வெறுப்பாக கேட்டாள் கமலா.
“நான் ஒரு ஜோசியம் சொல்லப் போகிறேன்.” என்றான் ராமன்.
“சொல்லுங்கள் பார்ப்போம்” என்று அசட்டையாக கூறினாள் கமலா.
“இன்று நம் வீட்டில் தோசை சுட்டு இருக்கிறாய்” என்றாள் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் முந்தின நாள் மாவரைத்ததையோ, இன்று தோசை சுட்டதையோ அவன் அறிய மாட்டான். அப்படி இருக்கும்போது எப்படி? அடுப்பு எல்லாம் மொழுகி தோசைக் கல் தேய்த்து எந்த அடையாளமும் இல்லையே என்று யோசித்தாள் கமலா.
அவள் ஆச்சரியம் அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
மேலும், “எத்தனை தோசை இருந்தது தெரியுமா? ஏழு சுட்டு இருக்கிறாய், மீதி மாவை உறியில் வைத்திருக்கிறாய்” என்றான்.
அவள் எண்ணிச் சுடவில்லை. எனவே, ஓடிப்போய் பார்த்தாள், ஏழு தோசை இருந்தது. உறியில் பால், தயிர் தான் வைப்பது வழக்கம். மாவு மீதம் இருப்பது அறிந்து கொள்ள கூடாது என்று உறியில் வைத்ததை கண்டுபிடித்து விட்டாரே! “நீங்கள் ஆற்றுக்குப் போனதும் நடந்ததை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள்.
“ஜோசியம் கற்று வந்தேன்” அதனால் நேரமாகிவிட்டது.” என்று புளுகினான்.
ஆற்றுக்குப் போகும் வழியில் ஒரு முனிவரைப் பார்த்தேன், அவர் தான் ஜோசியல் கற்றுக் கொடுத்தார். என்று மேலும் புளுகினான்.
“அப்படியா!” என்று ஆச்சரியப் பட்டவள் தோசையை எடுத்து வந்தாள். இருவரும் சாப்பிட்டார்கள்.
அவளுக்கு ஒரே பெருமையாக இருந்தது.
தன் கணவர் ஜோசியம் கற்று வந்ததையும், ஆற்றுக்குப் போன பின் தோசை சுட்டதை கண்டு பிடித்து விட்டதையும் வாய் ஓயாமல் போவோர், வருவோர் ஒருவர் பாக்கி இல்லாமல் சொன்னாள்.
இதைக் கேட்ட ஒரு சலவை செய்யும் பெண் அசட்டு ராமனிடம் வந்து “சாமி என்னோட கழுதை ஒரு வாரமாக, காணவில்லை ஜோசியம் பார்த்து சொல்லுங்க, சாமி”என்றாள்.
“கழுதை கெட்டா குட்டிச்சுவர்” என்ற பழமொழியை சொல்லி கையைக் காட்டினான் ராமன்.
ராமன் கை காட்டிய பக்கமாய் சென்றாள் அந்தப் பெண். அங்கு குட்டிச் சுவரின் பக்கம் கழுதை நிற்பது கண்டு ஆனந்தப்பட்டாள்.
ஒரு தட்டு நிறைய பூ, பழம் எல்லாம் எடுத்து வந்து தட்சணையும் வைத்து கொடுத்தாள்.
இது “காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக அமைந்தது” இப்படி கொஞ்ச காலம் ஓடியது.
பின்னர் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தான் பழையபடி ராமனின் மனைவி கணவனை திட்ட ஆரம்பித்தாள்.
“ஜோசியம் பார்க்க யாராவது வந்தால் தானே சொல்ல முடியும் என்று முணுமுணுதான் ராமன்.
அப்போது ஒரு குடியானவன் வந்து, “சாமி எனக்கு இருப்பது அரைக்காணி நிலம் அதைத்தவிர வேறு பிழைப்பில்லை. நாலு வருசமா மழை இல்லாத காரணத்தால் தரித்திரம் தாண்டவம் ஆடுது. சோத்துக்கு கூட வழி இல்லை.எப்போ மழை வரும், நெல் விளையும் என்று ஜோசியம் பார்த்து சொல்லுங்கள். அப்படி மழை வந்து நெல் விளைந்தால் விளைச்சலில் கால்பந்து தருகிறேன்” என்றான்.
பக்கத்தில் நின்ற மனைவியும் “பார்த்து சொல்லுங்கள்” என முணுமுணுத்தாள்.
ராமன் என்ன செய்வது என்று தெரியாமல் கணக்கு போடுவது போல் நடித்தான்.
பின்னர் “உன் வயலில் ஒரு ராட்சசன் இருக்கிறான். அவனுக்கு ஒரு பூஜை செய்தால் உன் வயலில் மழை பெய்யச் செய்வான்” என்றான்.
“அப்படியா?”அந்த பூஜையை நீங்களே செய்யுங்கள் என்றான் குடியானவன்.
“சரி ‘செய்கிறேன், உன் வயல் பக்கம் இன்று இரவு யாரும் வரக்கூடாது. நான் நள்ளிரவில் பூஜை செய்யும்போது எதிர் பட்டால் ராட்சசன் அடித்து விடுவான். யாரும் வராமல் இருந்தால் இன்று இரவு செய்யும் பூஜையில் மனமகிழ்ந்து உன் வயலில் மட்டும் மழை வர செய்வேன் என்று கூறினான்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் தொடர் தொடரும்.