உம்.. உம்…ம்.. ம் என ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த தாத்தா, “ஏன் அழுகிறாய்” என்றார் அன்புடன்.
“தாத்தா…ம்.. ம்.. என பேச்சு வராமல் அழுதாள்” சிறுமி.
“தாத்தா இவள் வைத்திருந்த நெல்லிக்காய் ஒன்றை அவள் எடுத்து தின்று விட்டாள். அதற்கு அந்த நெல்லிக்காயே வேண்டும்” என அழுது கொண்டு இருக்கிறாள். என்று மற்றொரு சிறுமி கூறினாள்.
“இதற்கா அழுகிறாய். உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன் கேள்”. என்றவர் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் மரகதம் என்ற ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு சரவணன் என்ற ஒரு மகன் இறந்தான். அவனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தாள்.
அவனும் பெரியவன் ஆனான். நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள்.
அவளும் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நல்ல மருமகளாய் நடந்து கொண்டாள்.
இவர்களுக்கு நிலம், தோட்டம் எல்லாம் இருந்தது. விளைச்சலுக்குப் பஞ்சம் இல்லை. ஒரு தோட்டத்தில் கத்தரிக்காய் பயிர் செய்தார்கள்.
பிஞ்சும், காயும் நிறைய காய்த்திருந்தது. காவலுக்கு மரகதம் தினமும் தோட்டத்திற்கு செல்வாள்.
வரும் போது இரண்டு கத்திரிப் பிஞ்சை பறித்துக் கொண்டு வருவாள்.
அதை நான்காக வெட்டி குழம்பு வைக்க வேண்டும். முழு கத்தரிக்காயை மாமியாருக்கு கொடுத்து விட வேண்டும். ஒன்றில் கணவனும், மனைவியும் பாதி, பாதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மாமியாரின் உத்தரவு.
மரகதத்திற்கு, “தோட்டத்தில் விளைவது தானே கூட, குறைய எடுத்து சமைப்போம் என்று எப்போதும் மனம் வராது. விற்றால் பணம் கிடைக்குமே என
எண்ணுவாள் மரகதம்.
மருமகள் சுபாவிற்கு பாதி கத்தரிக்காயை வைத்து சாப்பிடுவது என்பது முடியவில்லை.
தோட்டத்தை பார்க்கும் போது “அங்குள்ள கத்தரிப்பிஞ்சுகளை பறித்து குழம்பு வைத்து தட்டு நிறைய வைத்து சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கும். இது நடக்குமா? தோட்டத்து பக்கமே யாரையும் விட மாட்டாள் மாமியார்.
ஒரு நாள் குழம்பு வைத்து இறக்கியதும் வாசம் மூக்கைத் துளாத்தது. முழு கத்தரிக்காயில் இருந்து ஒரு கீற்றை மட்டும் எடுத்து சாப்பிட்டு விட்டாள் சுபா.
மரகதம் அப்போது அங்கு வந்தாள். மருமகள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டாள்.
“என்ன சாப்பிடுகிறாய்” என்றாள்.
“அத்தை ஒரு கத்தரிக்காய் கீற்றை எடுத்து சாப்பிட்டேன்” என்றாள்.
“நீ ஏன் சாப்பிட்டாய்?” நீ சாப்பிட்ட கீற்றை கொடுத்தால் தான் நான் எழுந்திருப்பேன். இல்லை என்றால் செத்துப் போவேன்!” என்ற மரகதம் கீழே படுத்து விட்டாள்.
“அத்தை எனக்கு உள்ள கத்திரிக்காயில் ஒரு கீற்றை எடுத்துக் கொண்டதாக நினைத்துக் கொள்ளுங்கள் எழுந்திருங்கள் அத்தை என்றாள்.
“அதெல்லாம் முடியாது, நீ சாப்பிட்ட கத்தரிக்காய் கீற்றைக் கொடு, இல்லை நான் செத்தவ, செத்தவ தான்” என்றாள்.
அந்த நேரம் பார்த்து மகன் சரவணன் வர, அம்மா படுத்திருப்பதை கண்டு பயந்து. “அம்மா… அம்மா என எழுப்பினான். மூச்சை பிடித்துக் கொண்டு கிடந்தாள் மரகதம்.
“அம்மா நீ செத்துப் போயிட்டியே” அம்மா என
அழ ஆரம்பித்து விட்டான் மகன்.
அவன் சத்தம் கேட்டு அக்கம், பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் ஓடி வந்து விட்டார்கள். என்ன.. என்ன என்று கேட்டார்கள்.
“ஐயோ! அம்மா… அம்மா” சொல்ல முடியாமல் சரவணன் அழுதான்.
எல்லோரும் சேர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். பக்கத்து ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் தகவல் அனுப்பி விட்டார்கள்.
சுபா மெதுவாக மாமியார் காதுப் பக்கம் குனிந்து, “அத்தை இப்பவாவது எழுந்து விடுங்கள். எல்லோரும் வந்து விட்டார்கள்” என்றாள்.
“ஆத்தா மருமகளே என் கத்தரிக்காய் கீற்றை தருவியா” என்றாள்.
“இல்லையே” அத்தை என்றாள் சுபா.
“அப்போ நான் செத்தவ..
செத்தவ தான்” என்று கூறி அசையாமல் படுத்துக் கொண்டாள்.
எல்லா உறவினர்களும் வந்து மரகதத்தை தூக்கி வெளியில் வைத்து குளிக்க வைத்தார்கள்.
மீண்டும் சுபா மெதுவாக மரகதம் காதுப் பக்கமாக சென்று “அத்தை உங்களுக்கு ‘பாடை’ எல்லாம் கட்டி விட்டார்கள் குளிக்க வேறு வைத்து விட்டார்கள் இப்பவாவது எழுந்து விடுங்கள்” அத்தை என்றாள்.
“ஆத்தா மருமகளே என் கத்தரிக்காய் கீற்றை தருவாயா” என்றாள் மரகதம்.
“இல்லையே அத்தை” என்றாள் சுபா, “அப்ப நான் செத்தவ… செத்தவ தான்” என்றாள் மரகதம்.
மரகதத்துக்கு மாலை போட்டு வேறு புது புடவை கட்டி பாடையில் போட்டு சுடுகாட்டுக்கு எடுத்து வந்து விட்டார்கள்.
சுபா மெதுவாக குனிந்து, “அத்தை இப்பவாவது எழுந்து விடுங்கள் நெருப்பு வைக்கப் போகிறார்கள்” என்றாள் அழுது கொண்டே!
“ஆத்தா மருமகளே என் கத்தரிக்காய் கீற்றைத் தருவியா” என்றாள் மரகதம்.
“இல்லையே அத்தை” என்றாள் சுபா.
“அப்போ நான் செத்தவ.. செத்தவ தான்” என்றாள் மரகதம்.
மரகதத்தை வைத்து மேலே மரக்கட்டைகளை அடுக்கி சரவணன் நெருப்பு வைத்தான்.
நெருப்பு சுட்டவுடன் “ஐயோ.. அம்மா என எழுந்தாள் மரகதம்”
பேய் எழுகிறது என நினைத்து அவள் தலையில் வெட்டியான் ஒரே கோடாக போட்டான்.
அப்படியே விழுந்த மரகதம் எரிந்து சாம்பல் ஆகிவிட்டாள்.
சுபா மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். “அடிப்பாவி ஒரு கீற்று கத்தரிக்காயை எடுத்ததற்காக எத்தனை தடவை எடுத்துச் சொல்லியும் விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொண்டாயே” என எண்ணியவளுக்கு அழுகையாய் வந்தது.
எல்லோரும் மாமியார் இறந்த தூக்கம் தாங்காமல் அழுகிறாள் பார் என சொல்லி சுபாவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
“எப்படி சிறுவர்களே இப்படியும் ஒரு பெண் இருந்திருக்கிறாள் என்றார் தாத்தா.
தாத்தா எனக்கு நெல்லிக்காயே வேண்டாம் என சொல்லி அங்கு நிற்க வெட்கப் பட்டு ஓடியே போனாள் சிறுமி.
அவள் ஓடுவதை பார்த்த மற்றவர்கள் சிரித்தார்கள்.
தாத்தாவும் பொக்கை வாய் தெரிய சிரித்துக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டார்.