3-மருமகனும்  உரலும்

அப்பளக் குடுமி  தாத்தா அரச மரத்தடியில் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சுற்றி சிறுவர், சிறுமிகள் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தாத்தா எல்லோருக்கும் தான்  கொண்டு வந்த கடலையை கொடுத்தார். எல்லோரும் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு சிறுவன் மட்டும் வேண்டாம் என்கிறான். தாத்தாவும் விட்டுவிட்டார்.

தாத்தா கொடுக்கும்போது வேண்டாம் என்றவன் சிந்திய ஒரு கடலையை எடுத்து சாப்பிட்டான்.

இதை தாத்தா பார்த்தார். உடனே, “மருமகன் உரலை நக்கிய கதையாக’ இருக்கிறது என்றார்.

குழந்தைகள் எல்லாம் “அது என்ன தாத்தா அந்த கதையைச் சொல்லுங்கள்” என்று எல்லோரும் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

“குழந்தைகளே! அமைதி… அமைதி” என்று எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊரில் கணவன், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தார்கள் .அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு அகிலா என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். அவளும் பெரியவளாகி பருவ மங்கையாக பூத்து நின்றாள்.

அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும் என்று எண்ணி பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.

கடைசியாக ஒரு வரன் பொருத்தமாக அமையவும்.  அந்த இடத்திலேயே மகளை கொடுப்பது என முடிவு செய்தனர்.

இருவருக்கும் நல்ல நாளில் எல்லோர் முன்னிலையிலும் திருமணம் நடந்தது. அகிலாவிற்கு செய்ய வேண்டிய முறைகள் எல்லாம் செய்து கணவனுடன் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அவர்களும் நல்லபடியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தினார்கள்.

சில நாட்கள் சென்ற பின் அகிலாவிற்கு அவள் பெற்றோர்களைப்  பார்க்க ஆசை ஏற்பட்டது. தன் கணவனிடம் சொன்னாள் “சரி வா !நாம் இருவரும் போய் பார்த்துவிட்டு வரலாம்” என இருவரும் அகிலாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்கள்.

மகளையும், மருமகனையும் பார்த்த  அகிலாவின் பெற்றோருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மருமகனுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்தார்கள்.

புது மாப்பிள்ளையாக இருந்ததால் மாமியார், மாமனாரிடம் சகசமாக நடந்து கொள்ள கூச்சமாக இருந்தது.

மாப்பிள்ளைக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டுமே என எண்ணிய மாமியார் எள்ளை இடித்து எள் உருண்டை செய்து மருமகனுக்கு கொடுத்தார்கள்.

அவரும் வெட்கப்பட்டுக் கொண்டு ஒன்று. இரண்டு எடுத்துக்கொண்டு போதும் அத்தை நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். போதும் என்று பிகு பண்ணிக் கொண்டார்.

மாமியாரும் விடவில்லை வெட்கப்படாமல் சாப்பிடுங்கள் மாப்பிள்ளை என்று கட்டாயப் படுத்தியும் “மாப்பிள்ளை முறுக்கு” வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

தன் மனைவி கொடுத்தும். வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மாலை நேரம் தோட்டப்பக்கம் கட்டிலை போட்டுக்கொண்டு படுக்கலாம். இயற்கை காற்று வரும் தனியாக அமைதியாக இருக்கலாம் என எண்ணி தோட்டத்தில் கட்டிலைப் போட்டு படுத்தார் மாப்பிள்ளை.

படுத்தவர்  மூக்கை  வாசனை தொலைத்தது. என்ன வாசனை இது இவ்வளவு நல்ல வாசனை எங்கிருந்து வருகிறது என ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்.

மாப்பிள்ளை காலையில் மாமியார் செய்த எள் உருண்டையின் வாசனை என தெரிந்ததும். அந்த வாசனையும், சுவையும் வாயில் எச்சில் ஊற வைத்தது.

மெதுவாக வாசனை வந்த பக்கம் செல்ல அது உரல் இருந்த இடத்திற்கு கொண்டு போய் விட்டது.

அவர் வாயில் எச்சில் ஊறியது. மாமியார் கொடுக்கும் போது சாப்பிடாமல் வெட்கப்பட்டவர் சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு…

யாரும் வராமல் இருக்கவே! உரலில் தலையைக் கவிழ்த்தி உரலில் ஒட்டி இருந்த இடித்த எள்ளை  நாக்கல் நக்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து தலையை எடுத்தால் தலை வெளியில் வர மறுத்தது. எப்படியாவது தலையை வெளியே எடுத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தும் முடியவில்லை.

அந்த சமயம் தன் கணவனை தேடி அகிலா தோட்டத்திற்கு வர தன் கணவன் கட்டிலில் இல்லாமல் இருக்கவே எங்கே என்று தோட்டத்தில் தேட ஆரம்பித்துவிட்டாள்..

உரல் பக்கம் முனங்கள் சத்தம் வரவே அங்கு போய் பார்த்தாள். தன் கணவன் நிலை கண்டு திடுக்கிட்டாள்.

ஐயோ! அம்மா! அப்பா! இங்கே வாங்க! இங்கே வாங்க !என்… என்… கணவன் தலை! தலை!என அழற ஆரம்பித்தாள்.

அகிலாவின் பெற்றோர் ஓடி வந்தனர். அவர்கள் ஓடி வருவதைப் பார்த்து அக்கம், பக்கம், இருந்தவர்கள் எல்லாம் ஓடி வர…

தோட்டத்தில் கூட்டம் கூடி விட்டது. உடலுக்குள் தலையை விட்டுக் கொண்டு இருக்கும் மருமகனைப் பார்த்த மாமியார். “

அப்பு மருமகனே! உங்க தலை போனாலும் போகட்டும்! எங்க ஆதி காலத்து உரல் போயிடாமல்! என்று…. ஆதங்கப்பட்டு கூற”
கூட்டத்தில் எல்லாரும் “கொள்”என சிரித்தனர்.

சிறிது நேரத்தில் ஊரலும் போகாமல், மருமகன் தலையும் போகாமல் எப்படியோ  தனித்தனியாக பிரித்தனர்.

அப்பு  மருமகனே! மாமியாரிடம் வெட்கப்பட்டு இடித்த எள்ளை சாப்பிட இப்படியா உடலுக்குள் தலையை விடுவது என்  ஆதிகாலத்து உரல் போயிருந்தால் என்ன செய்வது எனக் கூறவும்.

மறுபடியும் கூட்டத்தில் சிரிப்பு அலை வீசியது.

அவர்கள் மட்டுமா? சிரித்தார்கள்,
குழந்தைகளும் தான்.

சரி குழந்தைகளே! இன்று கதை போதும். நாளை இதே நேரத்தில் இங்கு சந்திப்போம். எல்லாரும் வீட்டுக்குப் போய் படியுங்கள்.

எனக் கூறிவிட்டு தாத்தாவும் துண்டை உதரி தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக நடையைக் கட்டினார்.

Share.

Leave A Reply