2-தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

அப்பளக் குடுமி  தாத்தாவைச்  சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெரிய பையன் விரல் சூப்பிக் கொண்டு இருந்தான்.

இதைக் கவனித்த தாத்தா “சிறுவர்களே, இங்கே வாருங்கள் கதை சொல்லப் போகிறேன்!” என்றவுடன் எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊரில் ரவி, மணி, குமார் என்று மூன்று நண்பர்கள் இருந்தார்கள். மூன்று பேருக்கும் தனித்தனியாக ஒரு குணம் உண்டு.

ரவிக்கு எப்போதும் கண்ணில் பீளை வந்து கொண்டே இருக்கும். அதில் கொசுக்கள் வந்து உட்காரும் அதை இரு கைகளிலும் அடித்துக் கொண்டே இருப்பான்.

மணியின் இரு கைகளிலும் எப்போதும் சிரங்கு இருந்து கொண்டே இருக்கும். அரிப்பு தாங்க முடியாமல் சொறிந்து கொண்டே இருப்பான்.

குமாருக்கு  எப்போதும் மூக்கு ஒழுகிக் கொண்டே இருக்கும். அதை சிந்திக் கொண்டே இருப்பான். இப்படி மூன்று பேரும் மாறி மாறி அவர்கள் செய்வதை செய்து கொண்டே இருப்பார்கள்.

சில மணி நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஒரு நாள் நண்பர்கள் மூன்று பேரும் ஒரு உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

ஒரு நாள் மட்டும் நான் மூக்கை சிந்த மாட்டேன். என்று குமாரும், கொசுவை விரட்ட மாட்டேன் என்று ரவியும், சிரங்கை சொறிய  மாட்டேன் என்று மணியும் முடிவு செய்தனர்.

சில மணி நேரம் சென்றது. குமாருக்கு மூக்கிலிருந்து சளி ஒழுக ஆரம்பித்தது.

நண்பர்களிடம் செய்த சபதத்தையும் நிறைவேற்ற வேண்டும். மூக்கில் ஒழுகும் சளியையும் துடைக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தான்.

” எங்க தாத்தாவிற்கு இவ்வளவு பெரிய மீசை…. இவ்வளவு பெரிய மீசை என்று சொல்லிக் கொண்டே தன் மூக்கை கைகளால் சுத்தம் செய்து கொண்டான் குமார்.

இதை கேட்டு “அப்படியா…. அப்படியா” என்று சந்தோசப்பட்டு கைகளை கொட்டி சிரிக்கிற மாதிரி பாவனை செய்து தன் கண்ணுக்கு எதிரே முற்றுகை இட்டிருந்த கொசுக்களை அடித்து விரட்டினான் ரவி.

இருவரும் தங்கள் காரியத்தைச் சாமர்த்தியமாக செய்ததை கவனித்தான் மணி.

” இது என்ன பிரமாதம். எங்க வீட்டுத் தோட்டத்தில் புடலங்காய் விதை போட்டிருந்தோம். அதில் ஒவ்வொரு காயும்… இவ்வளவு பெரியதாக இருந்தது .என்று தன் இரு கைகளையும் முழங்கை வரை காண்பித்து “இவ்வளவு பெரியது…. இவ்வளவு பெரியது” என்று கூறிக்கொண்டே சிரங்கை சொறிந்து கொண்டான்.

நண்பர்கள் மூன்று பேருக்கும் தாங்கள் தங்கள் செய்கையால் சிரிப்பு வந்தது.” நம்மால் இந்த பழக்கத்திலிருந்து சில மணி நேரம் கூட செயல்படாமல் இருக்க முடியவில்லை” என்று கூறி வருந்தினர்.

“நாம் சிறுவர்களாக இருக்கும் போதே இதை திருத்தி இருக்க வேண்டும்”. என மூன்று பேரும் கூறினர்.

“இதில் இருந்து என்ன தெரிகிறது.” தாத்தா நிறுத்தினார்.

” தவறான பழக்கங்களை சிறுவயதிலே விட்டு விட வேண்டும். இல்லையேல் நம்மால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீல்வது கடினமாகும்.”

” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற பழமொழி போல் நமது தீய பழக்கம் சாகும் வரை நிழல் போல் தொடரும்.

என்று கூறிய தாத்தாவின் கண்கள் விரல் சூப்பிய பையனிடம் சென்றது.

” இனி நான் விரல் சூப்ப மாட்டேன் தாத்தா” என்றவன் வாயில் இருந்த விரலை எடுத்து விட்டான்.

குழந்தைகள் எல்லோரும் பாராட்டி கைகளை தட்டினார்கள். தாத்தா துண்டை தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார்.

குழந்தைகளும் தத்தம் வீட்டை நோக்கி சென்றார்கள்.

Share.

Leave A Reply