13-ஞான உதயம்

குழந்தைகளே! “இன்று உங்களுக்கு நல்ல கதை சொல்லப் போகிறேன்” என்றார் தாத்தா.

என்ன கதை தாத்தா என எல்லோரும் குதூகளித்தனர்.

சிறுவர்களே “ஒருவருக்கு முற்பகல் துன்பம் செய்தால் அந்த துன்பம் பிற்பகல் தாமே வரும்” என்பதற்கு இணங்க இக்கதை இருக்கும் என்றார் தாத்தா.

சொல்லுங்க தாத்தா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள்.

ஒரு ஊரில் இராமாயி என்பவளுக்கு ரகு என்ற மகன் இருந்தான்.

அவனுக்கு குணவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தாள் இராமாயி.

குணவதி என்ற பெயருக்கு எதிர்மறையாக இருந்தாள் அவள்.

ரகு ஒருநாள் தன் மனைவியை அருகில் அழைத்து, “குணா! எனது தந்தை இறந்த பின் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் எனது அம்மா…”

இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம்.
எனவே, தினமும் உணவில் நெய்யிட்டு நல்ல உணவைக் கொடுத்து அன்பாக நடத்து என் தாயை மகிழ்விக்க வேண்டும் என்றான் ரகு.

சரி, ஆகட்டும் அப்படியே நடந்து கொள்கிறேன் என்றாள் குணா.

தனது கணவன் இருக்கும் வரை ஒரு வேலை கூட செய்ய விடாமல் அத்தை… அத்தை என அன்புடன் இருப்பாள்.

ரகு வேலைக்குச் சென்றவுடன் நல்ல துணிகளை அவிழ்த்து வைத்து விட்டு கந்தல் புடவையைக் கட்டிக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வாள்.

ரகு வருவதற்கு முன் வடித்த கஞ்சியில் கொஞ்சம் சாப்பாட்டை போட்டு சாப்பிட கொடுப்பாள் குணா.

இராமாயி  அதை சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்து கொள்வாள். மகனும், மருமகளும் நல்லா இருந்தால் அதுவே போதும் என்று சிவனை வேண்டிக் கொள்வாள்.

வாழை இலையில் சிறிது நெய் தடவி மடித்து வீட்டின் பின்புறம் போட்டு விடுவாள் குணா.

சாப்பிட வரும் போது கை, கால் கழுவ பின்புறம் செல்வான். நெய்மணம் தூக்கும்.

ஓ…தனது மனைவி அம்மாவை நல்ல முறையில் கவனிக்கிறாள். என நினைத்துக் கொண்டு அம்மா சாப்பிட்டார்களா? என்பவன்.

சாதம் செய்தவுடன் ஆறிப் போகுமே என்று அத்தையை சாப்பிட வைத்து விட்டேன். நீங்கள் வரும் வரை அவர்கள் ஏன் பசியுடன் இருக்க வேண்டும் என்று மிகவும் பாசத்துடன் பேசினாள் குணா.

ரகுவும் மிகவும் சந்தோசப்பட்டுக் கொண்டான்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் ரகு பெரிய மீன் வாங்கி வந்து கொடுத்து விட்டு வேலைக்குச் சென்றான்.

மாமியாரை அழைத்து வழக்கம் போல் வேறு பழைய துணியைக் கொடுத்து இதை கட்டிக் கொண்டு, இந்த மீனை நறுக்கி கொடுங்கள் என்றாள் குணா.

இராமாயி சரி என மீனை நறுக்கச் சென்றாள்.

மீன் நறுக்கும்போது மீன் சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கவே மீனை சுத்தம் செய்து வந்த ராமாயி, “மருமகளைப் பார்த்து… இன்று சாப்பிடும் போது ஒரே ஒரு மீன் துண்டு கொடு தாயி” எனக் கேட்டாள்.

சரி பார்ப்போம் என்று கூறினாள் குணா.

வழக்கம் போல், அம்மா சாப்பிட்டார்களா! என ரகு கேட்க.

அத்தை சாப்பிட்டார்கள். என குணா சொன்னாள்.

சரி, எனக்கு சாப்பாடு போடு என ரகு உட்கார்ந்தான்.

ரகுவிற்கு பின் வந்த ராமாயி மருமகளைப் பார்த்து ஒரு விரலை நீட்டி தலையை ஆட்டினாள். “எனக்கு ஒரு துண்டு மீன் கொடு” என்ற அர்த்தத்தில்.

குணாவும் சரி… சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.

இதைப் பார்த்து விட்ட ரகு “என்ன? என் அம்மா ஒரு விரலை நீட்டி… நீட்டி ஏதோ கேட்கிறார்களே என்ன வேண்டுமாம் என ரகு கேட்டான்.

அது வந்துங்க நான்…. நான் எண்ணத்தைச் சொல்லுவது அத்தைக்கு ஒரு புருசன் வேண்டுமாம் என்றாள்.

என்ன? என அதிர்ச்சியாகி விட்டான் ரகு.

மருமகள் சொன்னது எதுவும் இராமாயிக்குத் தெரியாது.

அவள் மீன் சாப்பிடும் ஆசையில் “மீண்டும்… மீண்டும் ஒரு விரலை நீட்டி கேட்டாள் குணாவிடம்.

“ பார்த்தீர்களா…. பார்த்தீர்களா…” என வெறுப்பு ஏற்றினாள் குணா.

ரகு சாப்பிடுவதை வைத்துவிட்டு கை கழுவியவன் மன  வருத்தத்துடன் கால் சென்ற போக்கில் நடந்து சென்றான்.

வெகுதூரம் சென்றவன் ஒரு சத்திரம் கண்ணில் பட அங்கு சென்று அமர்ந்தான்.

மிகவும் கவலையுடனும், களைப்புடனும் இருக்கும் ரகுவை கண்ட ஒரு பெரியவர் என்ன விபரம் என அன்புடன் கேட்டார்.

ரகுவிற்கு தனது வருத்தத்தை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருந்ததால் நடந்த விபரத்தைக் கூறி அழுதான்.

“இவ்வளவு பெரிய மகன் இருந்தும் உனது தாய் இவ்வாறு கேட்டார்களா?” என்றவர்.

“அதோ போகும் கழுதையை கட்டிவை” என விளையாட்டாக கூறினார்.

ரகுவும் உண்மையாகவே அந்த கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு நடந்தான்.

தனது கணவர் சாப்பிடாமல் சென்றவர் இன்னும் காண வில்லையே என காத்திருந்தாள் குணா.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply