எதிரில் கூடாரம் அடித்து தங்கி இருக்கும் பகைவர்கள் பாசறை தெரிந்தது. வழியில் கரை புரண்டு ஓடும் ஆறு ஆழம் நாலடி இருக்கும் குதிரை அதில்இறங்கி நீந்தி கடந்தது.
ராமன் இடுப்பில் கட்டப்பட்ட நூல் கயிறு நீரில் நனைந்ததால் இறுகி வேதனை அளித்தது. குதிரையை நிறுத்த என்ன செய்வதென்று யோசித்தால் ராமன்.
இரண்டு பனை மரங்களுக்கிடையே குதிரை போகையில் அதை இரு கைகளாலும் பற்றிக் கொண்டால் குதிரை நின்றுவிடும். என எண்ணி கெட்டியாகப் பிடித்தான். மழையிலும், புயலிலும் வேர்கள் நைந்திருந்த அந்த மரங்கள் கையோடு வந்துவிட்டன.
கையை விட்டால் மரங்கள் அவன் மேலே சாய்ந்து அதோ கதிதான். அதனால், மரங்களை விடவும் முடியாமல், குதிரையையும் பிடிக்க வழி இல்லாமல் இருந்ததால் துன்பம் பொறுக்க முடியாமல் ‘அப்பா’ ‘அய்யா’ என்று கத்திக்கொண்டு சென்றான் ராமன்.
இவனுக்கு துணையாக வந்த படைகள் வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்தன. சில படை வீரர்கள் இவனை நெருங்க முடியா விட்டாலும் கண் பார்வையில் இருந்து மறைந்து விடாமல் பின் தொடர்ந்தனர்.
அவர்களுக்கு இவன் வீர வேசமாக கோபத்துடன் பனை மரங்களைப் பிடித்துக் கொண்டும், கர்ஜித்துக் கொண்டும் செல்வதாக தோன்றியது.
‘அப்பா’ ‘அய்யா’ என்று ராமன் போடும் இரைச்சல் போர் முனையிலிருந்த வேந்தனுக்கு ‘அப்பய்யா’ ‘அப்பய்யா’ என சூளுரைப்பது போல் இருந்தது. இது என்னடா அதிசயம். குதிரை வரும் வேகம் என்ன? எத்தனை வீரனாய் இருந்தால் குதிரையைப் பிடித்துக் கொள்ளாமல் வருவான். இந்தப் பனை மரங்களால் அடித்தால் யானை இறங்கிய குட்டை ஆகிவிடுமே நமது படைகள்.
இவனைப் பற்றி நாம் கேள்விப்பட்டது கொஞ்சம். பார்ப்பது அதிகம், படையெடுத்து வந்தது முட்டாள்தனம் என்று யோசித்து படைகளைப் பின் வாங்கும் படி உத்தரவிட்டான். தானும் சமாதானக் கொடியைக் காட்டினான்.
ஆயினும் வேகமாக வந்த குதிரையும், வீசிய பெரும் பனையும் சிறிது சேதத்தை விளைவித்து விட்டன.
அதற்குள் நெருங்கி வந்துவிட்ட படை வீரர்கள். ‘சின்னராஜா’ சாந்தமடைய வேண்டும். மன்னர் வெள்ளைக் கொடி காட்டி விட்டார் மன்னித்து விடுங்கள்” என தூரத்தில் இருந்தபடி கேட்டுக் கொண்டனர்.
கிட்டேதான் நெருங்க முடியவில்லை!
இதற்குள் குதிரைக்கும் மதம் அடங்கி வாயில் நுரை தள்ளவே நிதானப்பட்டது பனை மரத்தைக் கீழே எறிந்தான் ராமன்.
பட்ட கஷ்டம் பட்டுவிட்டோம். சூரன் என்ற பெயராவது நிலைக்கட்டும் என்று தன் படைவீரர்களை அழைத்து “அப்படியானால் நான் இளைப்பாற வேண்டும். நூல் கயிறுகளை அவிழ்த்து விடுங்கள்” என்றான்.
கட்டுகளை அவிழ்த்து பின் குதிரையிலிருந்து கை கொடுத்து இறக்கி, ராமனை வழி நடத்திச் சென்றனர்.
எதிரி அரசன் ராமனிடம் வந்து பணிவுடன். என் மகளையும் தாங்கள் மணந்து கொள்ள வேண்டும். எனக்கு மகன் இல்லை ஒரே மகள். ஆதலால், மருமகனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருப்பேன். இத்தகைய சூரன் மாப்பிளை என்றால் எதிரிகள் எல்லையில் காலடி வைக்கவே அஞ்சுவர் என பலவாறு வேண்டிக் கொண்டான்.
திருமணம் சிறப்பாக நடந்தது. தன் மனைவி கமலாவுக்குச் செய்தி அனுப்பி அவளையும் வரவழைத்து கொண்டான் ராமன்.
விஷ அப்பங்களால் நன்மையே விளைந்ததால் கிழவியை மன்னித்து விட்டான். கொடியவர்களுக்குத் தண்டனை கொடுக்க தெய்வம் இருக்கிறது என்று பேசாமல் விட்டு விட்டான்.
பிறகு முறைப்படி அரசனுக்குரிய போர் முறைகளைத்
தக்கவர்களைக் கொண்டு கற்றுக் கொண்டான். புத்திசாலிகளைச் சேர்த்து கல்வி அறிவு பெற்றான். அதிர்ஷ்டம் என்றும் துணை செய்யாது என்பதை புரிந்து கொண்டான்.
“பார்த்தீங்களா சிறுவார்களே! ஒருவன் எப்போதும் மடையனாக, சோம்பேறியாக இருப்பதில்லை” எனவே, யாரையும் கேலி பேசாதீர்கள்.
கதை சொன்னதில் நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்குப் போங்கள் அம்மா தேடுவார்கள் என்றவாறு எழுந்தார் அப்பளக் குடுமி தாத்தா.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.