ராமனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஒரு அரசனால் முடியாதது நம்மால் எப்படி ஆகும்? கமலாவின் தொல்லை தாங்க முடியாமல் ஏதோ பொய் சொல்லி வந்தால் இப்படி ஆகிவிட்டதே! இன்னும் ஒரு வாரத்தில் கண் இல்லாமல், மூக்கு இல்லாமல் தவிக்கப் போகிறேன்.
இப்பவே கமலா பிடுங்குகிறாள். கண்ணும், மூக்கும் போய்விட்டால் நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை.
ராமனுக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை அரண்மனை நந்தவனத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதை சுற்றி பெரிய மேடை, அந்த மேடையில் அமர்ந்து கண்ணே, மூக்கே உங்களுக்கு ஆபத்து என்று புலம்பிக் கொண்டிருந்தான். அப்படியே களைத்து உறங்கி விட்டான்.
அரை, குறை தூக்க மயக்கத்தில் கண்ணி,மூக்கி உங்களுக்கு ஆபத்து என்று உளறிக் கொண்டிருந்தான்.
கண்ணம்மா, மூக்காயி என்ற இரண்டு அரண்மனை வேலைக் காரிகள் உள்ளனர். தங்கக் கோப்பைகளைத் திருடியவர்களும் அவர்களே.
அவர்கள் இருவரும் சாமர்த்தியமாய் திருடி அதை இதுவரை தெரியாமல் ஒளித்து வைத்திருந்தனர்.
ராமன் உளறிக் கொண்டிருந்த சமயம் அவர்கள் கிணற்றடிக்கு வந்தனர்.
ராமனின் ஜோசிய விசயம் தான் ஊருக்கே தெரியுமே! ராமனை அரசர் அழைத்திருக்கிறார் என்றதுமே இவர்கள் பயந்து போய் இருந்தார்கள்.
இப்போது இவன் புலம்பியதை உற்றுக் கேட்டனர். அவர்களை கண்ணீ,மூக்கி என்று மற்றவர்கள் சுருக்கி அழைப்பார்கள். தங்களை அவன் மறைமுகமாக எச்சரிக்கிறான் என்றே நினைத்தார்கள்.
இவன் பேசுவது மற்றவர்கள் காதில் விழுந்தால் தங்களுக்கு ஆபத்து என உணர்ந்த இருவரும் உளறிக் கொண்டிருந்த ராமனை எழுப்பி காலில் விழுந்தனர்.
“ஐயா, நாங்கள் தான் தங்க கோப்பைகளை திருடினோம். என்று எப்படி கண்டு பிடித்தீர்களோ தெரியவில்லை.
எங்களை மன்னரிடம் காட்டிக் கொடுத்து விடாதீர்கள். பொற் கிண்ணங்களை கொண்டு வந்து தந்து விடுகிறோம். மன்னரிடம் எப்படியாவது எங்கள் பெயரை இழுக்காமல் சேர்ப்பித்து விடுங்கள். தண்டனையில் இருந்து தப்ப வைப்பதற்காக ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து விடுகிறோம்” என கெஞ்சினார்கள்.
ராமனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தனது அதிர்ஷ்டத்தை எண்ணி ஆச்சரியப் பட்டான். தங்கக் கிண்ணங்களையும், பணத்தையும் வாங்கிக் கொண்டான். யாரும் அறியாமல் வீட்டில் மறைத்து வைத்தான்.
மறுநாள் அரச சபைக்குச் சென்று மன்னவரிடம் மன்னா! சுவடிகளை ஆராய்ந்ததில் கிண்ணங்களை ஒரு பிசாசு கவர்ந்து சென்றிருக்கிறது என்று தெரிகிறது.
அக்கிண்ணங்கள் அதனிடமே இருந்தால் ராஜ்ஜியத்திற்கு கெட்ட நேரம் வந்துவிடும். அதனால், அதை திருப்பி அடைய ஒரு பூஜை செய்ய வேண்டும் என்றான் ராமன்.
பூஜை தொடங்கும் போது யாரும் கூட இருந்தால் பிசாசு அடித்து விடும் என்று ராமன் கூறினான்.
எனவே, பூஜை நடக்கும் போது எதிரில் வர யாருக்கும் துணிவில்லை.
ராமன் தான் கொண்டு வந்த கிண்ணங்களை பூஜை நடக்கும் இடத்தின் அடியில் வைத்து அதன் மேல் மலர்கள், அதன் மேல் புது துணிகள் என பலவாறு அடுக்கி கிண்ணங்கள் யார் கண்ணிலும் படாத படி மறைத்து வைத்தான். பின் பூஜை செய்வது போல மந்திரங்களை முணுமுணுத்தான்.
ராமன் மந்திரம் எல்லாம் கற்றதும் இல்லை, யாகம் செய்ததும் இல்லை.
எப்படி மந்திரம் சொல்வது என யோசித்துக் கொண்டே முணு முணுத்துக் கொண்டு இருந்தான் ராமன்.
திடீரென ஒரு யோசனை வர அவ்வாறே கூறலானான்.
“எண்ணி வைத்த தோசை எறச்சு விட்டது தண்ணீர் கட்டி வைத்தது கபந்தம் கண்ணிக்கு மூக்கிக்கு சுவாகா!”
என மந்திரம் ஓதினான்.
ராமன் இப்படி செய்வது முதல் மந்திரிக்கு பிடிக்கவில்லை. பேயாவது, பிசாசாவது கிண்ணங்கள் வரட்டும் பார்க்கலாம் என்று காத்திருந்தார்.
மூன்று நாட்கள் பூஜை முடியும் வரை இரவு, பகல் என்று பாராமல் அந்த இடத்திலேயே இருந்தான் ராமன்.
அடியில் கிண்ணம் இருக்கிறதே, அப்படிச் சொல்லா விட்டால் திருடியவர் பெயரை வெளியிட வேண்டி இருக்குமே! இருதலை கொள்ளி எறும்பின் நிலை ராமனுக்கு.
நான்காம் நாள் பீடத்தைக் கலைத்து கிண்ணத்தை எடுத்து கொடுத்ததும் மன்னர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏராளமான பரிசுகள் கொடுத்து ராமனை கௌரவித்தார்.
மந்திரிக்கு இதில் ஏதோ சூது இருப்பதாகத் தோன்றவே மன்னரிடம் பலர் நிறைந்த அரசவையில் தான் திடீரென ஜோதிடரைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இது ஒன்றும் ராமனுக்கு தெரியாது. மன்னர் சம்மதிக்கவே, ராமனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
மந்திரி பிரதானிகள் அடங்கிய ராஜ சபையில் எதற்கு அழைக்கப்பட்டோம். என்பது கூட தெரியாமல் ராமன் விழிக்க மன்னர் “ஜோசியரே!” உமது ஜோசியத்தில் நமது முதல் மந்திரிக்கு சந்தேகம் என்றும் நீர் பொற் கிண்ணங்களை எடுக்க செய்த பூஜையில் சூது இருக்கிறது என்று கூறி உள்ளார்.
“உம்மை சோதிக்கப் போகிறார் திடீரென கேள்வி கேட்டால் உமது குட்டு அம்பலமாகிவிடும்” என்று கூறி உள்ளார்.
“எனவே, அவரது கையில் உள்ள பொருள் என்ன என்று இச்சபை அறிய சொல்ல வேண்டும். நீர் பாட்டு இயற்றி திருடனைப் பிடித்தது போல் பாட்டிலேயே விடை கூறும் பார்க்கலாம்” என்றார் மன்னவர்.
ராமன் என்ன செய்வான், பாவம் அமைச்சர் கையை இறுகி மூடிக்கொண்டார் மிகச் சிறிய பொருளாய் இருக்க வேண்டும்.
காசோ, கடுகோ, மிளகோ, பூவோ, முள்ளோ, கல்லோ, பருப்போ, நெல்லோ என கண்ணை மூடிக்கொண்டு யோசித்தான் ராமன்.
எதைச் சொன்னாலும் மாட்டிக் கொண்டால், “அகப்பட்டுக் கிட்டாரய்யா தும்மட்டிக்காய் கள்ளன்.” என்று சத்தமாகச் சொல்லி விட்டான் ராமன்.
மந்திரி ‘தொபீரென்று’ மயக்கமாய் விழுந்துவிட்டார். என்னவோ, ஏதோ என்று அவர் கையைப் பிடித்து மற்றவர்கள் ஆவலாகப் பார்த்தார்கள். சிலர் முகத்தில் நீர் தெளித்து அவர் மயக்கத்தை தெளிய வைத்தனர்.
அவர் கையில் இருந்தது என்ன தெரியுமா? தும்மட்டிக் காய்!
அது ஒரு காட்டுக்காய் பொடிசாக இருக்கும். அதை எங்கே இவன் சொல்லப் போகிறான் என்று மந்திரி நினைத்தார். ஜெயகாலம் இவன் பக்கம் இருக்கும் போது வெற்றி கிட்டுவதில் ஆச்சரியம் என்ன?
மன்னர் மகிழ்ந்து மேலும் பல பரிசுகள் அளித்தார் இனி அமைச்சர் பேச என்ன இருக்கிறது.
கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.