மதுரைக்கு அருகில் அப்பளப்பட்டி என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூருக்கு செல்லும் வழியில் நம்மை வரவேற்பது குடிதண்ணீர் குளம். சிறிது தூரம் நடந்தால் கூரை, ஓட்டு வீடுகள் கொண்ட ஒரு சிறிய கிராமம்.

அதுதான் அப்பளப்பட்டி ஊரின் மையப்பகுதியில் ஒரு பிள்ளையார் கோயில் அதன் அருகில்  சங்கிலி கருப்பன் கோயிலும் உண்டு.சற்று நடந்தால் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க  ஒரு பள்ளியும், அதன் அருகில் சவுக்கையும், அதற்கு நிழலும், காற்றும் தர அரச மரமும் இருக்கும்.

அந்த சவுக்கையில் தான் ஊர் நியாயங்கள். ஊர் கதைகள். பேசுவார்கள்.

வேலை வெட்டி இல்லாதவர்களும், வேலை முடிந்து போய் ஓய்வு எடுப்பவர்களும் கூடும்இடம்.

வெட்டி கதைகள் பேசாமல் அங்கு விளையாடும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு நீதி கதைகள் கூறி அவர்களை உற்சாகப்படுத்தி சிந்திக்க வைத்தார் நம் கதாநாயகன்.

கதாநாயகன் என்றவுடன் உங்களுக்கு அவர் எப்படி இருப்பார் என்று நினைக்கத் தோன்றும். அவர் ரஜினி மாதிரி! இல்லை கமல் மாதிரி! நம்ம நாகேஷ் மாதிரி! என்ற கற்பனை வருகிறது இல்லையா?
இதோ இப்படித்தான் இருப்பார் .

அவருக்கு 75 வயது இருக்கும் சிரித்த முகம். அந்த சிரிப்பில் பொக்கை வாய் தெரியும்.

கண்ணில் எப்போதும் ஆனந்தம் தெரியும் வயதானவர் என்று அவரைப் பார்த்து சொல்ல முடியாது.

காலையில் விழித்து காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு சாமி கும்பிட்டு நெற்றியில் விபூதி பட்டை போட்டுக் கொண்டு அவர் வந்தால் மணி ஆறு என கடிகாரத்தைப் பார்க்காமல் சொல்லிவிடலாம். அவ்வளவு சுறுசுறுப்பு.

அவருக்கு பிளஸ் பாயிண்ட் என்ன தெரியுமா? அவரின் குடும்பி. அந்தக் குடும்பியைப் பார்த்தாலே குழந்தைகள் சிரிப்பார்கள்.

அவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் கருப்பண்ணசாமி. அந்த பெயரில் அவரைக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ‘அப்பள குடுமி தாத்தா’ என்று கேட்டால் சின்ன குழந்தை கூட அவரை காண்பிக்கும். திருமணம் செய்து வைக்கும் வாத்தியார் அவர்.

அவர் மூதாதைகள் அப்பளம் போட்டார்கள். அப்போது அவர் குடுமியையும் சேர்த்து அப்பள குடுமி ஆகிவிட்டது.
பிற்காலத்தில் அந்த ஊர் அப்பளப்பட்டி ஆகிவிட்டது.

அவர் அப்படி என்னதான் செய்கிறாய் அடடா மணி
4. 30 ஆக்கிவிட்டது அவரை குழந்தைகளின் மத்தியில் தான் பார்க்க முடியும் .அங்கே ,போகலாம் நீங்களும் வாருங்களேன்.

              *******
வாத்தியார் அப்பளக்குடுமி தாத்தாவைச் சுற்றி குழந்தைகள் வட்டமாக அமர்ந்திருந்தன. ஒரு பையன் எழுந்து”தாத்தா இன்று எங்கள் வீட்டிற்கு அறக்கட்டளை நிதி என்று சிலர் வந்து பணம் வாங்கிச் சென்றார்கள். அறம் என்றால் என்ன தாத்தா?” என்று கேட்டான்.

“குழந்தைகளே இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம். இதை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.” என்று தாத்தா சொல்ல ஆரம்பித்தார்

ஒரு ஊரில் மீனாட்சி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு சங்கர் ஒரே மகன்.  அவள் கணவன் உடல் நலமில்லாமல் இருந்து இறந்துவிட்டார்.

அவளுக்கு உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.

மீனாட்சி சில வீடுகளுக்குப் போய் பத்து பாத்திரம் துலக்கு அதில் வரும் வருமானத்தில், கொஞ்சம் அரிசி, பருப்பு எல்லாம் வாங்கி சாப்பாடு செய்வாள்.

சாதம் வடிக்கும் கஞ்சியை எடுத்து அதில் சிறிது சாதத்தைப் போட்டு தானும், மகனும் சாப்பிடுவார்கள்.

சாப்பாட்டை பண்டாரம், பரதேசிகளுக்குப் போட்டு விடுவார். இப்படியே வழக்கமாக நடந்தது.

சங்கர் சிறுவனாக இருந்தபடியால் கொடுப்பதை சாப்பிட்டு வந்தான். அவனும் பெரிய பையனாக வளர்ந்து விட்டான்.

அம்மா தினமும் சாதம் வடித்து தனக்கு கொடுக்காமல் தானம் கொடுப்பதைப் பார்த்து ஒரு நாள்….

அம்மா! நானும் சிறுவயதிலிருந்தே பார்க்கிறேன். எனக்கு, கூட கொடுக்காமல் நீங்கள் பிறருக்கே சாப்பாட்டை கொடுக்கிறீர்கள்.

அப்படி செய்தால் நமக்கு என்ன ஆதாயம் நமக்கே இல்லாத போது பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று பல நாள் சந்தோகத்தை  கேட்டான் சங்கர்.
                           கதை தொடரும்.

Share.

Leave A Reply