14-மந்திரவாதியும்
பவள வள்ளியும்
“தாத்தா எங்க பள்ளியில் மேஜிக் நிபுணர் ஒருவர் மணலை சர்க்கரை ஆக்கி தந்தார்கள்” என பெருமையுடன் சொன்னால் ரமேஷ்.
அப்படியா! என ஆச்சரியத்துடன் கேட்டார் தாத்தா.
அப்புறம் என்ன செய்தார் என கேட்டார் தாத்தா.
ஒரு பூவில் பல பூக்கள் வரவைத்தார்.
தண்ணீரை தெளித்து மல்லிகை பூ வர வைத்தார் என்றான்.
அப்படியா! என கேட்டுக் கொண்ட தாத்தா.
மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா? என்றார்.
இல்லை என எல்லாரும் கூறினார்கள்.
இது எல்லாம் தந்திரம் தான் உங்களுக்கு மந்திரவாதியைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். என்றவர் கதை சொல்ல ஆரம்பித்தார்.
பவள நாட்டு மன்னன் ராஜேந்திரனுக்கும், ராணி புஷ்பவள்ளிக்கும் பிறந்த ஒரே வாரிசு ‘பவளவள்ளி’.
அவள் நாள் ஒரு மேனியாகவும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்தாள்.
ஆடும் மயிலாகவும், பாடும் குயிலாகவும், ஓடும் மானாகவும் இருந்தாள் பவளவள்ளி.
பருவ மங்கையானாள். எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள் அழகில் தனக்கு இணை தானே என்பது போல அழகென்றால் அவ்வளவு அழகு. அவளைப் பார்ப்பவர்கள் கண் இமைக்கவும் மறந்தனர்.
அவளை திருமணம் செய்ய காத்திருந்தனர் மன்னர்கள்.
அந்த நாளும் வந்தது. சுயவரம் நடத்த ஏற்பாடுகள் செய்தார் மன்னர் ராஜேந்திரன்.
எல்லா நாட்டினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
பவள நாடு விழாக் கோலம் பூண்டது வானவேடிக்கை கரகாட்டம் ஒயிலாட்டம் கூத்து என
களைகட்டியது.
பவளவள்ளியை சுயம்வரம் செய்ய மன்னர்கள் வர ஆரம்பித்தார்கள்.
சுயவர மண்டபம் நிறைந்து இருந்தது. தனக்கு கிடைக்க மாட்டாளா? என்ற ஏக்கம் எல்லோர் கண்களிலும் தெரிந்தது.
அழகு பதுமை அசைந்து வருவது போல் மாலையை கையில் பிடித்தபடி அசைந்து வந்து கொண்டிருந்தாள் பவளவள்ளி.
மன்னர்கள் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். மாலையை தன் கழுத்தில் போட மாட்டாளா? என எல்லா உள்ளங்களும் ஏங்கின.
சேரநாட்டு மன்னரான ‘ரவிவர்மா’ கண்களும் பவளவள்ளி கண்களும் சந்தித்தன.
அடுத்த நொடியில் பவளவள்ளியின் கால்கள் ரவிவர்மாவை நோக்கி நடந்தது.இருவருக்கும் சுயவரம் நடந்தது.
தங்களுக்கு பவளவள்ளி கிடைக்கவில்லை என ஆதங்கம் இருந்தாலும் இருவரையும் வாழ்த்தி விட்டு கிளம்பினார்கள் வந்திருந்த மற்ற நாட்டு மன்னர்கள்.
ரவிவர்மாவும் தன் மனைவி பவளவள்ளியுடன் சில நாட்கள் அங்கு தங்கி விட்டு. தனது நாட்டிற்கு அழைத்துச் சென்றார்.
புதிய நாடு, புதிய சூழ்நிலைக்கு வந்தாலும் ரவிவர்மாவின் அன்பால் ஈர்க்கப்பட்ட பவளவள்ளிக்கு எல்லாமே சொர்க்கமாக இருந்தது.
அழகான, அன்பான மனைவி கிடைத்ததில் ரவிவர்மாவும், மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
வீரமும், அழகும் நிறைந்த கணவர் கிடைத்ததில் பவளவள்ளியும் பூரித்து தங்கள் காலடியில் உலகமே கிடப்பது போல ஆனந்தத்தில் மிதந்தார்கள்.
“ அப்போது” காட்டிற்குள் ஒரு குகையில் காளிகா தேவி முன் கற்பூரம் ஏற்றி, சாம்பிராணிகளை நெருப்பில் அள்ளி… அள்ளி வீசிக்கொண்டு இருந்தான் மந்திரவாதி.
நெருப்பில் சுட்ட மாமிசங்களை எடுத்து காளிக்குப் படைத்தான்.
“தேவி… காளிகா… தேவி நான் நினைத்ததை நிறைவேற்று தாயே!” என்றவன்.
மாயக்கண்ணாடி இருக்கும் இடம் நோக்கிச் சென்றான் மந்திரவாதி.
உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக் கண்ணாடியே! இந்த உலகில் அழகான பெண் யார்? என காட்டு என்றான் மந்திரவாதி.
அடுத்த நொடியில் கண்ணாடியில் தெரிந்தது. பவளவள்ளி மஞ்சத்தில் படுத்திருந்தாள்,அவள் பட்டுக் கன்னத்தில் தன் இதழ்களை பதித்திருந்தால் ரவி வர்மா!
இதைப் பார்த்த மந்திரவாதிக்கு” உச்சி முதல் உள்ளங்கால்” வரை பற்றி எரிவது போல் இருந்தது.
“கொடுமை… கொடுமை.. என் பள்ளி அறையை அலங்கரிக்க வேண்டியவள் இன்னொருவன் மஞ்சத்திலே! நடக்காது… நடக்க விடமாட்டேன்” என கொக்கரித்தவன்.
மந்திரக் கோலை கையில் எடுத்தான். “ஓம்… க்ரீம்… கிரீம்… மகா…காளி என்றவன்” மறைந்து போனான்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.