13-ஞான உதயம்
தன் கணவர் கழுதையுடன் வருவது கண்டு ஆச்சரியப்பட்டாள்.
எதற்காக கழுதை என கேட்டாள்.
பேசாமல் இரு, என மனைவியை அதட்டியவன் அம்மாவிடம் சென்றான்.
“இந்தா! புருசன் கேட்டே இல்ல” என்றவன்.
ஒரு அறையில் கழுதையையும் அம்மாவையும் உள்ளே விட்டு கதவை சாத்தி வைத்தான்.
என்னங்க…. இதெல்லாம் என்றாள் குணா.
கழுதை உதைக்கிற உதையில் எங்க அம்மா சாகட்டும் என்றான்.
எங்க அம்மாவை தெய்வமாய் மதித்தேன் என்றவன் கண் கலங்க என்னை தனியாக விடு என வார்த்தைகள் வராமல் அவன் அறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டான்.
அம்மா ஒரு புறம்,மகன் மறுபுறம் நம்மை இந்த வராண்டாவில் படுக்க வைத்து விட்டார்களே? என்று நினைத்தாள் குணா.
சரி விடியட்டும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என நினைத்த குணம், அங்கே படுத்து தூங்கிவிட்டாள்.
சிவனும், பார்வதியும் உலகைச் சுற்றி வந்தார்கள்.
உங்கள் பக்தைக்கு நடக்கும் கொடுமையைப் பாருங்கள்.
அம்மாவையும், கழுதையையும் ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறான். என்ன? ஏது!என்று விசாரிக்காமல் மனைவி சொன்னதை நம்பி ஏமாந்தவன் என்று வருத்தப்பட்டாள் பார்வதி.
ராமாயி பல புண்ணியங்களை செய்தவள் தனக்கு தீங்கு செய்யும் மருமகளை தவறாக கூறினாள். மகன் வாழ்வு சுகப்படாதே என எண்ணியதால், எல்லா கொடுமைகளையும் தாங்கிக் கொண்டாள்.
“நல்ல தாய் உள்ளத்திற்கு களங்கம் கற்பித்த மருமகளுக்கு அவன் புனித தன்மையை எடுத்துக்காட்டுவோம். வா” என்றார் சிவன்.
ராமாயிக்கு 18 வயது பருவமங்கையாகவும் கழுதையை ராமாயி கணவன் 21 வயதிலும் மாற்றிவிட்டு ஆசி கூறி மறைந்தார்கள்.
ராமாயிக்கும் அவள் கணவனுக்கும் நடந்தவற்றை நம்பவே முடியாமல் இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் சிந்தி வணங்கி நின்றார்கள்.
காலையில் கதிரவன் வருகையால் வெண் ஒளிக்கதிர்கள் பட்டு விழித்த குணா விடிந்து விட்டதை அறிந்து தனது மாமியார் இறந்து போயிருப்பாள் என்ற ஆர்வத்தில் தனது கணவர் படுத்திருக்கும் அறையைத் தட்டினாள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கண் விழித்த ரகு கதவைத் திறந்தவன் மனம் படபடத்தது.
என்ன தான் கோபத்தில் கழுதையுடன் அம்மாவை அறையில் போட்டு கதவைப் பூட்டி வைத்தாலும் இரவு தூங்காமல் தவறு செய்து விட்டோமோ?என்று தனக்குத்தானே பல வகையில் நினைத்து விழித்திருந்தவன் காலையில் தான் கண்ணயர்ந்தான்.
அம்மா உயிருடன் இருக்க வேண்டும் என இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு கதவை திறந்தவனின் கண்களில் வியப்பு வாயடைத்துப் போனான். அழகிய பெண்ணும், அழகிய ஆடவரும் நிற்பது கண்டு அம்மா… எங்கே என்று தேடினான்.
மகனே! என்ற ராமாயி நான் தான் உனது தாய் எனது புண்ணியத்தால் நேற்று இரவு இறைவன் அருளால் இவ்வாறு ஆனோம் என்று கூறினாள் ராமாயி.
அம்மா,அப்பா என்று கட்டி அணைத்துக் கொண்டான் ரகு.
இருவரையும் கண்ட குணாவுக்கு அதிர்ச்சி. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று செய்து விட்டதே என ஆத்திரப்பட்டாள்.
மாமியார் இப்படி மாறியது குணாவிற்கு பிடிக்காமல் தவித்தாள்.
ஏங்க இங்கே வாங்க என்று தனது கணவரை அழைத்தாள்.
என்ன? என்றான் ரகு.
“எங்க அம்மாவிற்கும் ஒரு கழுதையை கட்டி வையுங்கள்” என்றாள் குணா.
சரி, என்ற ரகு.ஒரு கழுதையைக் கொண்டு வந்து மாமியாரையும், கழுதையையும் ஒரு அறையில் அடைத்து வைத்தான்.
இதைக் கண்ட சிவனும், பார்வதியும் ராமாயி செய்த புண்ணியமே அவளை மாற்றியது. குணாவின் பாவம் அவள் அம்மாவை அடையும் என்று கூறி மறைந்தனர்.
காலையில் எழுந்து கதவை திறந்தால் கழுதை கால்… கால் என கத்திக்கொண்டு ஓடியது.
அறைக்குள் குணாவின் அம்மா செத்துக் கிடந்தாள்.
அம்மா என கத்தி அழுதாள் குணா.தனக்கு இந்த தண்டனை வேண்டும் என மனம் வருந்தினாள்.
தனது பாவத்தால் அம்மாவை சாகடித்த பாவியாகிவிட்டேனே என அழுதாள்.
“ என்னை மன்னிச்சிடுங்க” என ரகுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் குணா.
ரகு ஏதும் புரியாமல் ஏன்? என வினாவினான்.
உங்க அம்மாவிற்கு நான் மிகவும் கொடுமை செய்தேன். அதை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டதால், அவர்களை இளமையாக கடவுள் மாற்றி இருக்கிறார்.
அது புரியாமல் பேராசைப் பட்டு எங்க அம்மாவை இது போல் ஆகட்டும் என நினைத்ததால் எங்க அம்மாவை சாகடித்து விட்டேன்.
நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.
உங்க அம்மா மீன் தான் என்னிடம் கேட்டார்கள். நான்தான் பாவி ‘புருசன்’ கேட்கிறார்கள் என பொய் சொன்னேன்.
அத்தை மிகவும் நல்லவர்கள். நான்.. நான்தான் என வார்த்தைகள் வராமல் அழுதாள் குணா.
எழுந்திரு குணா! என்றான் ரகு நீ எப்போது உனது தவறை உணர்ந்து விட்டாயோ அன்றே நீ நல்லவளாகி விட்டாய்.
இனியாவது நன்மைகள் செய். என ஆறுதல் கூறினான்.
“ முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வந்து சேரும்” என்பது உண்மையாகி விட்டது பார்த்தாயா குணா இனி நீ நல்லவளாகவே வாழ் என அறிவுரை கூறினான் ரகு.
இனி ஒரு போதும் பிறருக்கு தீங்கு செய்ய மாட்டேன் என உறுதியாக கூறினாள் குணா.
குழந்தைகளே நாமும் ஒருவருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பதை புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
வீட்டிற்குப் போவோம் வாருங்கள் என சிறுவர்கள் படை சூழ தாத்தாவும் சென்றார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்