கீழே சிங்கத்தின் குரல் கேட்கிறது. சிந்தாமல் தண்ணீர் குடி என எச்சரித்து தண்ணீர்  எடுத்துக் கொடுத்தார்கள்.

“மடமட எனக் குடித்தவன்” பாதி தண்ணீரை கீழே சிந்தினான்.

தண்ணீர் ஒழுகி சிங்கத்தின் மீது விழுந்தது.

இது என்ன?என சிங்கம் அதட்டியது.

“உங்களுக்காக சாப்பாடு செய்து ரசம் வைத்திருந்தேன் எலி தட்டி விட்டிருக்கும் போல் இருக்கிறது” என்றாள் கமலா.

இந்தப் பெண் வந்ததில் இருந்து “உம்” என்று இருந்தாலே இன்று நமக்காக ரசம் எல்லாம் வைத்ததாகச் சொல்கிறாளே என்று சந்தோசத்தில் நாக்கால் நக்கி சாப்பிட்டது சிங்கம்.

மேலே என்ன தட்டி இருக்கும், என பார்த்து வருகிறேன். என்ற  சிங்கம் மேலே ஏறப்போனது.

அப்போது நிறைமதியன் அண்ணன்களிடம் அண்ணா! எனக்கு ஒரு பாட்டு வருகிறது பாடட்டுமா? என்று கேட்டேன்.

முடியாது நீ பாடினால் நாம் எல்லோரும் சிங்கத்திடம் மாட்டிக் கொள்வோம். என்று மறுத்தனர்.

என் கொக்கு கறியும், தவிட்டுக் களியையும் தாங்க என்று கதற ஆரம்பித்தான்.

“உன்னிடம் வாங்கி சாப்பிட்டது தப்பா போச்சு மெதுவா பாடி தொலை” என்று கூறியதுதான் தாமதம்…

கட்டெறும்பை எடுத்து கழுதையின் காதில் போட்டு விட்டான்.

எறும்பு கழுதையின் காதில் போய் கடித்து விட்டது.

அவ்வளவுதான் கழுதை கால்…கால் என்ற கத்த ஆரம்பித்துவிட்டது.

இந்த சத்தத்தைக் கேட்ட சிங்கம் மேலே போகாமல் யார் அது?என்று கர்ஜித்தது.

அண்ணன்கள் எல்லோரும் பயந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தனர்.

நிறைமதியன் சற்றும் பயப்படாமல் “நான் தான் உன்னைக் கொல்ல வந்த எமன்” என்று கத்தினான்.

“எங்கே என் முன்னே வா! தைரியம் இருந்தால்” என்று சிங்கம் கர்ஜித்தது.

நிறைமதியன் உடனே, எனது காலை மட்டும் காட்டுகிறேன் தைரியம் இருந்தால், நீ மேலே வா! என்று கூறினான்.

பின் தென்னை மரத்தை எடுத்து கீழே இறக்கிறான்.

ஒரு காலே இவ்வளவு பருமனாக இருந்தால் உடல் முழுவதும் பார்த்தால் பயங்கரமாக இருக்கும் போல இருக்கிறது. குரல் வேறு இப்படி கத்துகிறது.

நம் உயிர் உடலில் இருக்க வேண்டுமானால் இங்கு ஒரு நொடி கூட இருக்கக் கூடாது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று சிங்கம் ஓடி விட்டது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன்களுக்கு ஒரே சந்தோசம்.

நிறைமதியனை எவ்வளவு கேவலமாக நினைத்தோம்.அவனால் அல்லவா, இன்று தங்கையையும், நம்மையும் காப்பாற்ற முடிந்தது.என்று எண்ணினர்.

சரி, சிங்கம் திரும்புவதற்குள் தப்பித்து விடுவோம்.என்று தம்பியை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றினார்கள்.

தங்கையையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

சிங்கம் மோப்பம் பிடித்து வந்தாலும் வந்துவிடும் என்று வீட்டிற்கு முன் விறகு கட்டுகளை அடுக்கி நெருப்பும் மூட்டி வைத்தார்கள்.

சிங்கம் எப்படியும் பழிவாங்க வரும் என்று காத்திருந்தார்கள்.

சிங்கமும் சிறிது நேரம் கழித்து சந்தேகப்பட்டு குகைக்கு திரும்பியது.

அங்கு கழுதையைத் தவிர வேறு யாரும் இல்லை. பனைமரம் கீழே கிடந்தது எல்லா வற்றையும் பார்த்து சிங்கம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு மோப்பம் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தது.

சிங்கம் வருவதைப் பார்த்த அண்ணன்மார்கள் நெருப்பைச் சுற்றி வைத்து விட்டு ஓடினார்கள்.

சிங்கம் இவர்களைப் பிடிக்க பாய்ந்து ஓடி வந்து நெருப்பில் விழுந்து  இறந்தது.

எந்த தம்பியை நொண்டி என்று தாழ்வாக நினைத்தோமோ! அந்த தம்பியின் அறிவு கூர்மையால் எல்லோரும் தப்பினோம் என அகம் மகிழ்ந்து தம்பி, தங்கையுடன் சந்தோசமாக இருந்தார்கள். என்று தாத்தா கதையை முடித்தார்.

பார்த்தீர்களா சிறுவர்களே! யாரையும் குறைத்து மதிப்பிடவும் கூடாது.ஊனம் என்று கேலி பேசவும் கூடாது.

திறமை எல்லோரிடமும் உண்டு என்பதை புரிந்து இருப்பீர்கள்.நீங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்றவர் நேரம் ஆகிறது அமைதியாக வீட்டிற்குப் போங்கள் என்றவர்.
தானும் எழுந்து துண்டை தோளில் போட்டுக் கொண்டு நடையை கட்டினனார்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.


Share.

Leave A Reply